3 புலிகளுக்கு தமிழ்ப் பெயர்-முதல்வர் கருணாநிதி சூட்டினார்
சென்னை: வண்டலூர் விலங்குகள் காப்பகத்தில் உள்ள 3 புலிக் குட்டிகளுக்கு முதல்வர் கருணாநிதி தமிழ்ப் பெயர் சூட்டினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தியாவில் மிகவும் அரிதான வெள்ளைப் புலிகள் தற்போது ஏறத்தாழ 100 மட்டுமே உள்ளன. அவை பல்வேறு மாநிலங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 2006 வரை இந்த அரிய வகை வெள்ளைப் புலி இனம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், முதல்வர் கருணாநிதி அரசு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக, இரண்டு சிங்கவால் குரங்குகளை சென்னை, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து புதுடெல்லியிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு வழங்கி, ஓர் ஆண் வெள்ளைப் புலியும், ஒரு பெண் வெள்ளைப் புலியும் அங்கிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பெறப்பட்டன.
ஆண் புலி செம்பியன்-பெண் புலிகள் வள்ளி, இந்திரா:
அந்த வெள்ளைப் புலிகள் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் ஓர் ஆண் வெள்ளைப் புலிக் குட்டியும், இரண்டு பெண் வெள்ளைப் புலிக் குட்டிகளும் பிறந்துள்ளன. அந்த வெள்ளைப் புலிக் குட்டிகளில் ஆண் புலிக் குட்டிக்கு சோழப் பேரரசின் சின்னமாகப் புலி விளங்கியதால், சோழப் பேரரசின் நினைவாக செம்பியன்' என்ற பெயரும், ஒரு பெண் வெள்ளைப் புலிக் குட்டிக்கு - இந்திய நாட்டின் புகழ்மிக்க பிரதமராக விளங்கிய இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா' என்றும், மற்றொரு பெண் வெள்ளைப் புலிக் குட்டிக்கு - அண்ணல் காந்தியடிகளுடன் தென்னாப்பிரிக்க சுதந்திரப் போரில் தீரம் காட்டிய வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மையின் நினைவாக - வள்ளி' என்றும் முதல்வர் கருணாநிதி பெயர்களைச் சூட்டினார்.
இந்நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜ், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ஆர்.சுந்தரராஜு மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.