For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சித்த மருத்துவ பிரிவு: மு.க.ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

Stalin
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

'தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும்' எனும் தலைப்பில் சென்னை பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், நடந்த இக்கருத்தரங்கு தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

கருத்தரங்கை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ் கணக்கு என்பவை பழந்தமிழரின் பண்பாட்டு சிறப்புகளை உலகுக்கு பறைசாற்றும் கருவூலங்கள்.

பதிற்றுப்பத்து இலக்கியத்தின் மூலம் அறுவை சிகிச்சை மருத்துவம் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு சான்று கிடைக்கின்றது.

சங்க காலத்தில் பல போர்கள் நிகழ்ந்தமையால் படைக்கருவிகளால் ஏற்படும் ஆழ்ந்த புண்களை ஊசிநூல் கொண்டு தைத்தனர் என்பது தெரிகிறது.

போரில் ஏற்பட்ட புண்களின்மேல் பஞ்சு இடும் முறை பண்டைக்கால தமிழர்கள் உலகிற்கு கற்றுக்கொடுத்த சிறந்த முறையாகும்.

திருவள்ளுவர் திருக்குறளில் உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றில் ஒன்றேனும் அளவுக்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும் என்றும், உண்ணும் உணவை அளவறிந்து உண்டால் மருந்தே தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தமிழ் மருத்துவம், மூலிகைகளை அடிப்படையாக கொண்டே அமைந்திருந்தன என்பதை பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் திரிகடுகம், சிறுபஞ்சமூலம் ஆகிய நூல்களின் பெயர்களே பறைசாற்றி கொண்டிருக்கின்றன.

திரிகடுகம் என்பது மூன்று மருந்துகள் என்னும் பொருளில் அமைந்துள்ளது. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றாலும் ஆகிய மருந்து ஒருவர் உடல் நோயை மாற்றி அவருக்கு சுகம் அளிப்பது போல் ஒவ்வொரு பாட்டிலும் அமைந்த மும்மூன்று கருத்துகளும் மாந்தரின் மனதில் உள்ள அறியாமையைப் போக்கி இன்பம் அளிக்கும் என்பதை உணர்த்துகிறது.

அதே போல, மருத்துவ நூலில் கூறப்பட்ட கண்டங்கத்தரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லிவேர், நெருஞ்சிவேர், பெருமல்லிவேர் ஆகிய ஐந்துவேர்களும் மக்கள் பிணிகளை தீர்ப்பதுபோல் சிறுபஞ்சம் நூலில் அமைந்த ஒவ்வொரு செய்யுளிலும் அடங்கியுள்ள ஐந்து ஐந்து கருத்துகளும் மக்களின் சிந்தனை வளத்தை பெருக்கி அறிவு வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும் என உணர்த்துகிறது.

பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் நீண்ட கால உயிர் வாழ்வுக்கு உடலோம்பல் அவசியம் என்பதை எடுத்துரைக்கின்றார்.

தமிழ் சமுதாயம் பின்பற்றிய மருத்துவம் இன்று, தமிழ் மருத்துவம் எனப்போற்றப்படுகிறது. அந்த தமிழ் மருத்துவமே பழங்காலத்தில் இந்திய மருத்துவமென அழைக்கப்பட்டுள்ளது.

பழங்கால கிரேக்க நாட்டில் கி.மு.460 முதல் 370 வரை வாழ்ந்த மருத்துவ மேதை இப்போகிரேட்டஸ். அவரது மருத்துவ ஆற்றலுக்கு மூல காரணமாக அமைந்தவர் பித்தகோரஸ்.

பித்தகோரஸ் இந்தியாவிற்கு வந்து சென்றதற்கான குறிப்புகள் கிடைப்பதால் பித்தகோரஸ் மூலமே இந்திய மருத்துவம் கிரேக்கம் சென்றது என்று கருத இடமுண்டு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்திய மருத்துவத்தை - தமிழ் மருத்துவத்தை தமிழகத்தில் போற்றி வளர்ப்பதற்காக புத்துயிர் அளித்து வருபவர் நமது முதல்வர் கருணாநிதி.

சித்த மருத்துவத்திற்கு தமிழ் மருத்துவத்தின் பெருமையை நன்கு உணர்ந்துள்ள முதல்வர் கருணாநிதியின் ஆணையின்படி தமிழ்நாட்டில் பல சித்த மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன.

தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு 1999-ம் ஆண்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் திறக்கப்பட்டு சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையமாக திகழ்கிறது.

தமிழ் மருந்துகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்ய தாம்பரம் அமிர்த நகரில் ஐந்து ஏக்கர் நிலத்தை கழக அரசு ஒதுக்கி தந்துள்ளது.

மேலும், படப்பைக்கு அருகில் 25 ஏக்கரில் மூலிகைப்பண்ணை அமைக்க மத்திய அரசு நிலம் கேட்டு தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த வேளையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நவீன மருத்துவர்களும் சித்த மருத்துவர்களும் பேதமின்றி பணியாற்ற வேண்டும்.

தமிழ் அறிஞர்கள் ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றை நூல்களாக்க முயற்சி எடுக்க வேண்டும். பல மொழிகளில் அந்த நூல்கள் வெளிவந்தால் தமிழ் மருத்துவத்தின் பெருமை தரணியெங்கும் பரவும்.

மூலிகைகளை பாதுகாப்பது, ஆராய்ச்சியில் ஈடுபடுவது போன்றவற்றை சித்த மருத்துவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவப்பிரிவு தொடங்க தமிழக அரசு முயன்று வருகிறது என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X