For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அப்போ சரியா இருந்தது; இப்போ சரியா இல்லே'-அறிவொளி!

By Chakra
Google Oneindia Tamil News

கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று கலை இலக்கிய நிகழ்ச்சிகள் களை கட்டின.

குறிப்பாக முனைவர் சோ.சத்தியசீலன் தலைமையில்
'தமிழர் வாழ்வு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, நவீன இலக்கியமே' ஆகிய மூன்று தலைப்புகளில் மூன்று அணியினர் வாதாடினர்.

இவர்களில் சங்க இலக்கியமே என்ற அணிக்கு தலைமை தாங்கி இலங்கை தமிழ் அறிஞர் ஜெயராஜ் பேசினார். அவர் கூறும்போது, "நான் பேசிய பிறகு, அடுத்த அணிகள் பேச வேண்டியதே இல்லை. காரணம் சங்க இலக்கியம் இல்லாமல் தமிழே இல்லை. தமிழர் வாழ்வு பெரிதும் சார்ந்து நிற்பது சங்க இலக்கியத்தைத்தான்" என்றார்.

இடைக்கால இலக்கியமே என்று வாதாடினார் முனைவர் அறிவொளி. இவரது பேச்சைத்தான் முதல்வர் கருணாநிதி வெகுவாக ரசித்தார்.

தனது வாதத்தின் போது, "ஒரு காலத்தில் நல்லா இருந்தது, இருப்போது நல்லா இல்லை. அப்போ சரியா இருந்தது, இப்போ சரியா இல்லே..." என்றார்.

உடனே நடுவர் சத்யசீலன் குறுக்கிட்டு, "அது எப்படிங்க... நல்லா இருக்கிறது எப்பவும் நல்லாதானே இருக்கும்?" என்றார்.

அதற்கு அறிவொளி, "ஐயா.. ஒரு 15 வருஷத்துக்கு முன்ன ஒருத்தன் கல்யாணம் பண்ணான். 15 வருஷத்துக்கு அப்புறம் சொல்றான்.... 'ஏமாந்துட்டேன்... என் வாழ்க்கையே போச்சு. அவ சரியில்லே' என்று புலம்புகிறான். ஆனா இந்த உண்மை அவன் மனைவிக்கு கல்யாணமான 15 நாள்லயே தெரிஞ்சிடுச்சி. அப்படின்னா, ஒரு காலத்துல சரியா இருந்தது, இன்னொரு நேரத்துல சரியா இல்லன்னுதானே அர்த்தம்?" என்று திருப்பிக்கேட்க, முதல்வர் கருணாநிதி சிரிப்பில் குலுங்கினார்.

"ஐயா... கல்யாணம் பண்ணிக்காதவங்க (குமரி அனந்தனைப் பார்த்து) ஆயிரம் சொல்வாங்க அதை விடுங்க... நான் கல்யாணமாகி காவி உடுத்தினவன். என் வீட்டு கதவைத் திறந்தா காத்து மட்டும்தான் வரும்" என்று நித்யானந்தா கதையை நயமான நுழைத்து அடுத்த நகைச்சுவை அஸ்திரத்தை வீச, முதல்வர் பலமாகச் சிரித்தார்.

"சங்க இலக்கியங்கள் பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள், மன்னர்களைப் பேசியது. இடைக்கால இலக்கியமே, மக்களையும் சேர்த்துப் பேசியது" என்ற அறிவொளியின் வாதத்தை வெகுவாக ரசித்தார் முதல்வர்.

நவீன இலக்கியமே என்ற தலைப்பில் பேராசிரியை அரங்கமல்லிகா பேசினார்.

பட்டிமன்றத்தின் இரண்டாம் சுற்றில், மீண்டும் சங்க இலக்கியத்தை ஆதரித்துப் பேசினார் அந்த அணியின் சுந்தர ஆவுடையப்பன்.

அவர் பேசுகையில், "சங்க இலக்கியத்தைத்தான் தமிழர் வாழ்வு சார்ந்திருக்கிறது என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பே பளிச்சென்று சொல்லிவிட்டார்கள். எனவே இந்த பட்டிமன்றமே அவசியமற்றது. ஆம், இந்த செம்மொழி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர், சங்க காலச் சிறப்பை தமிழகத்திலே கொண்டு வர முதல்வர் பாடுபடுகிறார் என்று கூறியது நினைவிருக்கலாம். ஆக, இந்த அரசின் நோக்கம் என்னவென்று துணை முதல்வரே கூறிவிட்டார். அவரே எங்க கட்சிதான். அவரை மீறி நீங்கள் தீர்ப்பு சொல்லிவிடுவீர்களா?" என்று கேட்க, "என்னய்யா இப்படி பயமுறுத்துறீங்க.." என்றார் சத்யசீலன்.

இப்போது துணை முதல்வரும் முதல்வர் குடும்பத்தினரும் அடக்க முடியாமல் சிரித்தனர்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X