For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

By Chakra
Google Oneindia Tamil News

Vairamuthu
கோவை: கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் கருணாநிதி என்று கவியரங்கில் கவியரசு வைரமுத்து கவிதை பாடினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அப்போது வைரமுத்து படித்த கவிதை:

''மேற்கு தொடர்ச்சி மலை மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுகள்
தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள்

ஏ ஆகாயமே! உன் நட்சத்திரங்கள் காணோமென்று இரவோடு முறையிடாதே
எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடி விட்டன

நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்கு?.
முத்தமிழறிஞரே மூத்த முதலமைச்சரே.
செம்மொழி தங்கமே, எங்கள் செல்லச் சிங்கமே
தாய்த் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர். இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்

உங்கள் உயரத்தை நீங்களே தாண்டுகிறீர்கள்
வள்ளுவர் கோட்டம் வனைந்தீர்கள்
அன்னை தமிழ் நாடே அண்ணாந்து பார்த்தது
வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அனைத்து இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது
செம்மொழி மாநாடு கண்டீர்கள், அனைத்து உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கிறது

எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்துள்ளீர்கள் உங்கள் உள்ளங்கை விரிந்தால்
சூரியன் குவிந்தால் கூட்டணி கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்

உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உழவன் சேர்ந்தான்
உழைப்பாளி சேர்ந்தான்
அன்னத்தாய் சேர்ந்தாள்
பொன்னுத்தாய் சேர்ந்தாள் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்
உன் திட்டம் தெரியும் எனக்கு
காப்பீட்டு திட்டத்தில் தமிழ் தாயை சேர்க்கத்தானே இந்த தடபுடல் மாநாடு
கலைஞர் கனவு கண்டால் தமிழ்நாடு முதல் நாடு.

நீங்கள் பெருங்கவிஞர், நானுமொரு கவிஞன்
ஜனநாயக தர்மத்தில் அமெரிக்க ஜனாதிபதி இரு முறை தான்
மேற்கு வங்கத்தின் செந்தலைவன் ஐந்து முறை தான் தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்
ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை
நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது-ஆறு காவிரி ஆறு
உங்கள் தந்தை முத்துவேலர் எண்ணிப்பார்த்தால் எழுத்துகள் ஆறு
முதலெழுத்தோடு சேர்த்தால்-உங்கள் முழுப் பெயரின் மொத்த எழுத்து ஆறு
நீங்கள் பிறந்த மாதம் ஆறு. பெற்ற பிள்ளைகள் ஆறு
அரசாளப் போவதும் ஆறு. இது வரலாறு
வயது தடுக்கிறதே என்று நீங்கள் வருந்தாதீர்கள்
தளபதியிடம் சொல்லி காப்பீட்டு திட்டத்தில் கட்டாயம் சேர்த்து விடுகிறோம்

வீடு கொடுத்தீர்கள். வீடென்றால் அது என்ன வெறும் வீடா?
தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு
அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு
தியாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு
ஆண்ட பெரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே
ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.

மாநாடு கூட்டுவதற்கு பெருத்த நிலம் பல உண்டு
கோவையை போல ஒரு பொருத்த நிலம் உண்டா?
ஐவகை நிலமும் கூடிக் கிடந்து கும்மி கொட்டும் ஊரல்லவோ கோவை

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
இங்கே குறிஞ்சி உண்டா? உண்டு.
ஆனைமலை ஒன்று அருலிருப்பதால் முல்லை உண்டா? உண்டு.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.
நீலகிரி சிகரங்கள் முகில் கொண்ட எப்போதும்முக்காடுபோடுவதால் காடுண்டு-அதனால் முல்லையுண்டு.

மருதமுண்டா? உண்டு.
ஒரு மலையே இங்கு மருதமென்று நிற்பதனால் மருதமுண்டு.
நெய்தல் உண்டா?. உண்டு.
நெசவுக்கு தலைநகரம்-இங்கு நெய்தல் இல்லாமலா?
பாலை இல்லையே என்று பார்க்கிறீரா?. பாலை உண்டு நோக்குமிடந்தோறும் நூற்பாலை உள்ளதால் பாலையும் உண்டு.
நெய்தல் உண்டு. கோவைக்கு கடல் உண்டா?
இல்லை.. கடல் இல்லா ஊருக்கு கடல் கொண்டு வரத்தானோ கலைஞர் இனக்கடல் திரட்டி ஜனக்கடல் கூட்டினார்?

செம்மொழியாமே செம்மொழி சிவப்பு மொழியோ என்று கேலி பேசும் ஒரு கீழ்க் கூட்டம்
நேற்று ஒரு தாயொருத்தியை பார்த்தேன்
மாநாடு பார்க்கவா என்றேன்
என் மகன் பார்க்க என்றாள்
ஏன் என்றேன்
என் மகுடத்தில் செம்மொழி என்ற மாணிக்கம் சூட்டிய மகனுக்கு நனைந்த கண்ணோடு நன்றி சொல்ல என்றாள்

இவ்வாறு கவிதை பாடினார் வைரமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X