For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓணம் பண்டிகை-ஆளுநர், முதல்வர் கருணாநிதி, ஜெ. வாழ்த்து

Google Oneindia Tamil News

Onam
சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் மலையாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

அறுவடை திருநாளான ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களுக்கு எனது இதய பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த விழா ஒற்றுமை, அமைதி, முன்னேற்றத்தை தரவேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

கேரள மாநில மக்கள் அறுவடைத் திருநாளாகப் பெரிய அளவில் கொண்டாடும் ஓணம் திருநாள் ஆகஸ்ட் 23 திங்கட்கிழமையன்று, மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத, வேறுபாடு கருதாமல் எல்லா மக்களும் கொண்டாடும் ஓணம் திருநாள் ஆணவம், அகம்பாவம் ஆகிய கொடிய குணங்கள் மனித சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதையும், அன்பு, அமைதி, சகோதர நேயம் ஆகியவை மண்ணில் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் திருநாளைத் தங்கள் குடும்பத்தினர், உறவினர் சூழ மகிழ்ச்சியுடன் கூடிக் கொண்டாடிட வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் அவர்கள் நிறைந்து வாழும் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் 2006ஆம் ஆண்டு முதல் சிறப்பு விடுமுறை வழங்கிய ஆணையிட்ட இந்த அரசு, 2007ஆம் ஆண்டு முதல் சென்னை மாவட்டத்திற்கும் விடுமுறை வழங்கி வருகிறது.

தமிழக மக்களின் உரிமைகளை மட்டுமல்லாமல், தமிழகத்தில் வாழும் அண்டை மாநில மக்களின் நியாயமான உணர்வுகளையும் மதிப்பது இந்த அரசு என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகி நிற்கிறது.

ஓணம் திருநாள் கொண்டாடும் மலையாள மொழி பேசும் அருமை உடன் பிறப்புகள் அனைவர் வாழ்விலும் அன்பும் அருளும், அமைதியும் தழைத்து வளம் பெருகிட தமிழ்ச் சமுதாய மக்கள் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளைச்சல் திருவிழாவான இந்த நன்னாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் திகழ வாழ்த்துவதோடு, ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் இனிய 'ஓணம்' திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X