For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கு பார்த்தாலும் வெள்ளை வெயில் – ஊட்டியை நோக்கி பாயும் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

Heavy tourist inflow in Ooty
ஊட்டி: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேரென்று வெயில் வெளுத்துக் கட்டி வருவதால், மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டியில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கி விட்டது. தொடர்ந்து வெயில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில 100 டிகிரிக்குக் குறையாமல் வெயில் வாரிக் கட்டிக் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து தப்ப கோடை வாசஸ்தலங்களுக்கு மக்கள் ஓடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஊட்டிக்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது.

ஊட்டியில் வழக்கமாக ஏப்ரல் 14ம் தேதி குதிரைப் பந்தயம் தொடங்கும். அன்று முதல் ஜூன் மாதம் வரை குதிரைப் பந்தயம் தொடர்ந்து நடைபெறும். அதுவரைதான் ஊட்டியின் சுற்றுலாப் பருவமாகும். அதில் மே மாதத்தில்தான் பெரும் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

இருப்பினும் மார்ச் கடைசி முதலே கூட்டம் அலை மோத் தொடங்கி விட்டது ஊட்டியில். தற்போது பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனராம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் ஊட்டிக்கு வந்து சென்றுள்ளனராம்.

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் அரசினர் தாவரவியல் பூங்காவைப் பார்க்கத் தவறுவதில்லை. ஆனால், இப்பூங்காவில் மலர்கள் இன்னமும் முழுமையாக பூக்காத நிலை உள்ளது. அத்துடன் அரசினர் தாவரவியல் பூங்காவைத் தவிர வேறு ஏதாவது புதிய இடங்களுக்குச் செல்ல நினைத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 1 முதல் 19 வரை 1.60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டிலும் இதே அளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர். ஆனால், கடந்தாண்டில் இப்பூங்காவில் நுழைவுக் கட்டணம் சிறியவர்களுக்கு ரூ.5ம், பெரியவர்களுக்கு ரூ.10மாக வசூலிக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் சிறியவர்களுக்கு ரூ.10ம், பெரியவர்களுக்கு ரூ.20ம் வசூலிக்கப்படுகிறது.

உதகையில் தற்போது பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8.8 டிகிரியாகவும் உள்ளது. தற்போதைய சூழலில் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் நினைத்துப் பார்க்க முடியாத தட்பவெப்ப நிலை இதுவாகும். இதுவே கடந்த ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரியாகவும் இருந்துள்ளது.

தற்போதும் தினந்தோறும் மழை பெய்து வருவதால் அடுத்துவரும் நாட்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல மலைகளின் இளவரசி எனக் கூறப்படும் கொடைக்கானலுக்கும் மக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதுதவிர ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மலைக்கு செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அங்கு இன்னும் பெரிய அளவில் சீசன் சூடு பிடிக்காவிட்டாலும் கூட தட்பவெப்பம் இதமாக இருப்பதால் அங்கும் மக்கள் போக ஆரம்பித்துள்ளனர்.

கொடைக்கானலை சுற்றி பார்க்க சிறப்பு பேருந்து

இதற்கிடையே, கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை பொது மக்கள் கண்டு ரசிக்க அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், குறைந்த கட்டணத்தில் சிறப்பு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை அழைத்துச் செல்லும் இந்த பஸ், கோக்கர்ஸ்வாக், 500 வருடமரம், அப்பர்லேக் வியூ , பைன்பாரஸ்ட், மோயர் பாய்ண்ட், குணா குகை, தூண்பாறை, கால்ப் கிரவுண்ட், பசுமை பள்ளத்தாக்கு, பாம்பார்புர நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா போன்ற பகுதிகளிலுக்கு சென்று வரும்.

இந்த பேருந்தில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு பெரியவர்களுக்கு ரூ 60 -ம், 12 வயதுக்குட்பட்ட சிறியவர்களுக்கு ரூ 30 ம் கட்டணமாக வசூல் செய்யப்படும்.

ஒவ்வொரு சுற்றுலா இடங்களிலும் அரை மணி நேரம் இந்த பஸ் நின்று செல்லும்.

காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பேருந்துக்கான முன்பதிவு மதுரை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, தேனி, கொடைக்கானல் போன்ற கிளை அலுவலகத்தில் செய்யப்படுகிறது.

இல்லை எனில் கொடைக்கானல் பஸ் நிலையத்திலும் நேரடியாக டிக்கெட் பெறலாம்.

தற்போது பள்ளி கல்லூரிகளில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகளுக்கு விடுமுறை என்பதாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிளில் கடும் அனல் வெயில் தாக்குவதாலும் பலர் கொடைக்கானலுக்கு விரும்பி செல்கின்றனர்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

இந்த நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் நீர் மட்டம் குறைவு காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு முழுமையாக படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மட்டம் தாழ்ந்து காணப்படுகின்றது. இதனால், திருவள்ளுவர் சிலை படகு தளத்தில், படகு நிறுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது.

மேலும், அடிக்கடி படகு சேவை ரத்து செய்யப்பட்டு, பின்னர் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதும், படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக மீண்டும் படகு நிறுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது.

இதனையடுத்து , திருவள்ளுவர் சிலைக்கு, படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X