• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மங்கையராய்ப் பிறப்பதற்கே!

By Staff
|

Women
''மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா''

உண்மைதானே!

உலகில் நடைபெறக் கூடிய அனைத்து செயல்களையும் ஆக்குபவளும் பெண்ணே, தீயவற்றை, அநீதியை அடியோடு அழிப்பவளும் பெண்ணே.

அதனால்தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று இன்று வரை நிலவி வருகிறது.

ஏன் இந்த வெற்றுப் பெண் ஜென்மம் என்று தவித்துத் துடிக்கும் அன்புச் சகோதரிகளே, இதோ உங்களுக்காகவே இந்த Energy Booster.

குழந்தையைக் கருவறையில் சுமப்பது முதல் அதைப் பாதுகாத்து வெளிக் கொணர்ந்து உலகத்தைப் பார்க்கச் செய்கிறவள் பெண்.

அந்தக் குழந்தை பிறப்பெடுக்கிற மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்களாகப் பெண், குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை இறுதி வரையிலும் செவிலியர்களாக பணிபுரிந்து தன்னலமற்ற சேவை புரிபவர்களாக பெண், அந்தக் குழந்தையைப் பள்ளியில் சேர்த்ததும் அரிச்சுவடி சொல்லிக் கொடுத்து இன்னொரு தாயாக இருந்து நல்ல மாணவர்களாக, குடிமக்களாக உருவாக்கி, உயர்த்தும் ஆசிரியைகளும் பெண்களே.

ஒரு நல்ல மாணவியாய், மகளாய், மருமகளாய், மனைவியாய், தாயாய், மாமியாராய், பாட்டியாக பல அவதாரம் எடுத்து வாழும் பெண் குடும்பச் சூழலையும், சமூகச் சூழலையும் எதிர்கொண்டு, வென்று நிற்கின்றனர்.

அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு, ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே என்ற ஒரே செயலோடு முடிந்து போவதல்ல பெண்ணின் பிறவி. சாதிக்கப் பிறந்தவர்கள், சாதனை படைப்பவர்கள் பெண்கள்.

இத்துறை என்றில்லாமல், இன்று எத்துறையிலும் மகளிரின் சாதனைத் தடத்தைப் பார்க்கலாம்.

விறகு வெட்டிக் கட்டி ஏற்றி விடுகிறாள், விதம் விதமாக உணவை சமைத்து விடுதி நடத்துகிறாள், பல்வேறு கலைகளில் கற்றுத் தேர்ந்து சாதனை படைக்கிறாள்.

நடனம், நாட்டியம், இசை, கவிதை, கதை, நாவல், திரைப்படம், பாடல், ஓவியம், இயக்கம் என எங்கெங்கு காணினும் பெண்களின் சக்தி பெரிதாகவே இருக்கிறது.

விளம்பரம், பேஷன், கிராமியக் கலை, செய்தி வாசிப்பு, எழுத்து, பத்திரிக்கை, விளையாட்டு, வங்கிகள், நீதிமன்றங்கள், மருத்துவம் என பெண்களின் தடம் பதியாத துறைகளே இல்லை.

மண்ணில் மட்டுமின்றி, காற்றில் ஏறி விண்ணையும் சாடி விடடார்கள் இன்று பெண்கள்- கல்பனா சாவ்லாக்களாக.

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று அஞ்சியிருந்த காலம் கப்பலேறிப் போய் விட்டது. கல் உடைப்பதிலிருந்து, கற்றுக் கொடுப்பதிலிருந்து, சிலை வடிப்பதிலிருந்து, சில்லறை வியாபாரம் செய்வதிலிருந்து, சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் வல்லுனர்களாகவும், சாதனை படைத்து சிகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளனர் இன்றைய மகளிர்.

இத்தனையையும் தாண்டி இன்று நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் இட ஒதுக்கீட்டைப் பெற்று இனி ஆட்சிப் பொறுப்புகளிலும், அதிகாரங்களிலும் தங்களது சாதனைப் பணிகளை சரித்திரமாக வடிக்கப் புறப்பட்டு விட்டனர் பெண்கள்.

பெண் வெறும் போகப் பொருள், வர்ணிக்கப்படக் கூடிய பொருள் என்ற வர்த்தக பார்வை போய், இன்று வரலாற்று நாயகிகளாக, சமூகத்தைத் தாங்கும் சாதனைத் தூண்களாக மாறி விட்டனர் பெண்கள்.

எழுதுங்கள் இனி உங்கள் ஏடுகளில் - புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்டு விட்டனர் எங்கள் மகளிர் என்று.

(கட்டுரையாளர் நசீமா சிக்கந்தர், துணைப் பேராசிரியை, தமிழ்த்துறை, முகம்மது சதக் அறிவியல் கலைக் கல்லூரி)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X