For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமி தினம்- ஆனால் விளக்கு வெள்ளத்தில் போட்டியை நடத்தும் ஐபிஎல்

By Staff
Google Oneindia Tamil News

Earth Hour
சென்னை: உலகம் முழுவதும் இன்று பூமி தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பு விளக்கு வெள்ளத்தில் பிரமாண்ட போட்டியை நடத்துவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது. சனிக்கிழமை இரவு எட்டு முப்பது மணி முதல் ஒன்பது முப்பது மணி விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனி மனிதர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கான உலக நிதியம் அமைப்பு நிறுவனம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் 100 நாடுகளில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

பூமியின் இயற்கை சுற்றுச்சூழல் அழியாமல் பாதுகாக்கவும், புவி வெப்ப அதிகரிப்பின் அபாயத்தை உணர்த்தவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இயற்கையுடன் இணைந்து மக்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியுள்ளது.

இந்தியாவிலும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பு மக்களும் தயாராகி வருகின்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்து வருகின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மட்டும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படவே இல்லை என்று தோன்றுகிறது.

காரணம் நாளை ஐபிஎல் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் நாளை மொஹாலியில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. படு பிரகாசமான விளக்கொளியில், இந்தப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் புகை மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ள ஒன்று இந்தியா. பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் நாமும் வெளியேற்றி வருகிறோம். இந்தியாவில் மின்சாரத்தின் மூலமான கார்பன் மாசுக்கள்தான் அதிக அளவில் வெளியேறுகின்றன. அதாவது பாதி புகை மாசு மின்சாரத்தால்தான் ஏற்படுகிறது.

இந்தியாவின் 80 சதவீத அளவிலான மின்சாரம் நிலக்கரியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் விளக்கு வெள்ளத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை போட்டிக்கு இடையில் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்கத் திட்டமிட்டுள்ளனரா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், பல்வேறு ஹோட்டல்களை உறுப்பினர்களாகக் கொண்ட இன்டர்கான்டினென்டல் ஹோட்டல் குழுமம் பூமி நேரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தனது வாடிக்கையாளர்களுடன் வித்தியாசமான முறையில் அனுசரிக்கவும் அது ஏற்பாடு செய்துள்ளது.

பூமி நேரமான இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தங்களது குழுமத்திற்குட்பட்ட ஹோட்டல்களில் தங்கியிருப்போர் தங்களது அறைகளில் விளக்குகள், மின்விசிறி உள்ளிட்டவற்றை அணைத்து விட்டு சிறப்பு விருந்தினர் ஒன்று கூடலில் பங்கேற்க வருமாறு அது அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த குழுமத்தின் பிராந்திய பொது மேலாளர் ஷான் லாங்க்டான் கூறுகையில், நாங்களும் பூமி நேரத்தில் கலந்து கொள்கிறோம். அதற்கான அடையாளம்தான் இது. இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தையும் கணிசமான அளவில் சேமிக்க நாங்கள் உதவுகிறோம் என்றார்.

இதேபோல பெங்களூரில் உள்ள கிரவுன் பிளாசா எலக்ட்ரானிக் சிட்டியில், மெழுகுவர்த்தி காக்டெய்ல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஊட்டியில் உள்ள ஹாலிடேன் இன் ஜெம் பார்க் ஹோட்டலில் நாளை பூமி நேர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த சமயத்தி்ல் ஹோட்டலில் தங்கும் விருந்தினர்கள், முடிந்தவரை விளக்குகளை அணைத்து இதில் பங்கேற்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேபோல இந்தியாவில் உள்ள பல்வேறு ஹோட்டல்களிலும் விளக்குகள் அணைப்பு, மெழுகுவர்த்தி விருந்து உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் உள்ள ஹாலிடே இன் ஹோட்டலில் முக்கிய விளக்குகளை மட்டும் அந்த சமயத்தில் எரிய விட முடிவு செய்துள்ளனர். பிற விளக்குகள் அப்போது அணைக்கப்பட்டிருக்கும்.

இன்டர்கான்டினென்டல் ஹோட்டல் குழுமத்திடம் 1400 ஹோட்டல்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எர்த் ஹவர்- அதிகாரப்பூர்வ தளம்: http://www.earthhour.org/

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X