• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா

|

Dr Mu Elangovan Receives Award
உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் புதினமாக எழுதியவர் கு.சின்னப்ப பாரதி. கவிதைகள், சிறுகதைகளையும், தன்வரலாற்று நூலையும் இவர் எழுதியுள்ளார். இவர்தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை உலக அளவில் தமிழ்ப்படைப்பாளர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பரிசளித்துப் பாராட்டிவருகின்றது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு, பாராட்டு விழா அக்டோபர் இரண்டாம் நாள் நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

காலை 9.30 மணியளவில் தொடங்கிய விழாவிற்குச் செல்வம் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார். இந்த விழாவிற்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் வந்ததுடன் இலங்கை, மலேசியா, இலண்டன் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் ,மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முனைவர் பா,கவீத்ரா நந்தினி, எழுத்தாளர் அந்தோனி ஜீவா, எஸ்.பி.இராமசாமி, எஸ்.கே.சம்பத், ஆர்.செந்தில்முருகன், எஸ்.இராஜ்குமார், ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றறது.

கா.பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். அந்தோனி ஜீவா, கலை இலக்கியத் திறனாய்வாளர் இந்திரன், பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெ.மாதையன்,முனைவர்மு.இளங்கோவன், மலேசியா எழுத்தாளர் பீர்முகமது, இலங்கை கலைச்செல்வன் உள்ளிட்டவர்கள் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறப்பினை எடுத்துரைத்து உரையாற்றினர்.

பரிசளிப்பின் நோக்கத்தைக் கு.சின்னப்ப பாரதி விளக்கிப் பேசினார். சி.ப.கருப்பண்ணன் அவர்கள் பரிசுபெறுபவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராகத் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்மொழிக்கு எனத் தனி சாகித்ய அகாதெமியை அரசு நிறுவ வேண்டும் எனவும், கு.சின்னப்ப பாரதி போன்ற எழுத்தாளர்கள் போற்றி மதிக்கப்பட வேண்டும் என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.

தனது பிறந்த நாளைச் சக எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிக் கொண்டாடும் சிறந்த பண்பாட்டை தமிழகத்துக்கே முன்மாதிரியாக்கிக் காட்டியிருக்கிறார் கு.சி.பா. எனவும் தமிழகத்தில் உள்ள நாவலாசிரியர்கள் பலர் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களைப் போன்று எழுதிக் குவித்து வருகின்றனர். ஆனால் எதைச் சொல்ல வருகிறோம், நமது கதையின் களம் எது, சமுதாயத்துக்கு இதனால் என்ன நன்மை விளையப் போகிறது என்றெல்லாம் யோசித்து எழுதுவதுதான் கு.சி.பா.வின் பாணி.

அவரது கதைகளில் யதார்த்தம் இருக்கும். நிஜ மனிதர்கள், நிஜ உணர்வுகள் போன்றவற்றைப் பதிவு செய்வது கு.சி.பா.வுக்கு கைவந்த கலை எனவும் குறிப்பிட்டார்.

இவருக்கு என்றோ கிடைத்திருக்க வேண்டிய சாகித்ய அகாதெமி, ஞானபீட விருதுகள் ஏன் தள்ளிப் போகின்றன என்று தெரியவில்லை எனத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

பனிநிலவு நூலை எழுதிய இலண்டனில் வாழும் வவுனியா இரா.உதயணன் அவர்களுக்கு முதல்பரிசாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் பத்தாயிரம் அளவில் நூலாசிரியர்களுக்குப் பணப்பரிசும் பாராட்டுச்சான்றும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வழங்கி அனைவரையும் பாராட்டினார்.

பரிசு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் நூல்களின் விவரம்:

வி.ஜீவகுமாரன் (டென்மார்க்)

- சங்கானைச் சண்டியன்

நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு)

- மாத்தகரி

சை.பீர்முகமது (மலேசியா)

- பெண் குதிரை

நடேசன் (ஆஸ்திரேலியா)

- வண்ணத்திகுளம்

தெணியான் (இலங்கை)

- ஒடுக்கப்பட்டவர்கள்

கே.விஜயன் - (இலங்கை)

- மனநதியின் சிறு அலைகள்

சிவசுப்ரமணியன் (இலங்கை) - சொந்தங்கள்

தனபாலசிங்கம் (இலங்கை)

- ஊருக்கு நல்லது சொல்வேன்

கலைச்செல்வன் (இலங்கை) - மனித தர்மம்

உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.

பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:

ஆர்.எஸ்.ஜேக்கப் - பனையண்ணன்,

சுப்ரபாரதி மணியன்

-சுப்ரபாரதி மணியன் கதைகள்

முனைவர் மு.இளங்கோவன் - இணையம் கற்போம்

புவலர். இராச.கண்ணையன் - குறளோசை

ப.ஜீவகாருண்யன் - கவிச்சக்ரவர்த்தி

குறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்

லேனா தமிழ்வாணன்

- ஒரு பக்கக் கட்டுரை 500

வெண்ணிலா - நீரில் அலையும் முகம்

பூங்குருநல் அசோகன்

- குமரமங்கலம் தியாக தீபங்கள்

கூத்தங்குடி அழகு ராமானுஜன்

- காவிரி மண்ணின்

நேற்றைய மனிதர்கள்

வாழ்நாள் சாதனை, கொடைச்சிறப்பு விருதுகள்:

தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மயிலை பாலுவுக்கும், தமிழ் - ஹிந்தி மொழியாக்கத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது தில்லியைச் சேர்ந்த எச். பாலசுப்ரமணியத்துக்கும் அளிக்கப்பட்டது.

அதேபோல், எழுத்தாளர்களுக்கு நிதியுதவி புரிந்து, அவர்களை ஊக்குவதற்காக இலங்கையை சேர்ந்த புரவலர் ஹாசிம் உமருக்கு இலக்கியக் கொடைச்சிறப்பு விருது வழங்கப்பட்டது.

விழாவில், எச்.பாலசுப்ரமணியம் இந்தியில் மொழியாக்கம் செய்த பனி நிலவு, உபாலி லீலாரத்னா சிங்களத்தில் மொழியாக்கம் செய்த தாகம், இந்திய இலக்கியத்திற்குக் கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

நாமக்கல் என்.சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சேவைக்கான பரிசு வழங்கப்பட்டது.

சி.அரங்கசாமி நன்றியுரையாற்றினார். விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார் தொகுப்புரை வழங்கியதுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்..

 
 
 
English summary
Ku.Chinnappa Bharathi trust's literary awards function was held in Namakkal. Puducherry Prof. Dr. Mu.Elangovan and others' books were honoured with awards.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X