For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்னி ரூபாமாய் ஒளிரும் கார்த்திகை மாதம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Lord Murugan
தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபாமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் துலாராசியில் இருந்த சூரியன் நீச்சம் மாறி உச்சம் ஆகிறார் என்கின்றன புராணங்கள். சூரியனின் நகர்வைக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் சூரியன் தன் உச்சவீடான மேஷத்தில் பிரவேசம் செய்வது தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

இதன் பின்னர் சூரியன் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளைக் கடந்து தன் நீச்ச வீடான துலாத்திற்கு வந்து விடுவார். நீச்ச வீடு வரும் போது சூரியன் தன் பலத்தை இழந்து விடுவார். பின்னர் மீண்டும் தன் உச்ச ராசியான மேஷத்திற்குச் செல்ல, விருச்சிக ராசியில் இருந்து தன் ஏறுமுகமான பயணத்தைத் தொடங்குவார். அவ்வாறு பயணம் செய்யும் போது ஒளிக் கடவுளான சூரியனுக்கு மரியாதை செய்யும் விதமாக கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.

தீபத் திருவிழா

கார்த்திகை நட்சத்திரத்திற்கான அதிபதி சூரியன். அதனால்தான் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அத்துடன் பெரும்பாலான கோயில்களிலும், வீடுகளிலும் கார்த்திகை மாதம் முழுவதும் மாலை விளக்கேற்றி வைக்கும் பழக்கமும் உண்டு.

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டுவாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

கார்த்திகை சோமவார விரதம்

அக்னி ரூபமான அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம். சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. இந்தநாளில் அனைத்து சிவ ஆலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

சிவ பெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருவானதாக கூறுகிறது ஸ்கந்த புராணம்.

முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை 'அக்னி". கிருத்திகா ப்ரதமம் என்று வேதத்தில் கார்த்திகை நட்சத்திரம் முதலாவதாக கூறப்படுள்ளது. அந்த மாதத்தின் கார்த்திகை மற்றும் பௌர்ணமி இணைந்த அந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம்.

விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள், பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள் என்கின்றன புராணங்கள்.

மாமிசம் தவிர்ப்பது நல்லது

கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. இந்த மாதத்தில்தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து மலைக்கு செல்கின்றனர்.

தானத்தின் புகழ்

மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஐதீகம். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் "திருமண மாதம்" என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

கார்த்திகை மாதப் பௌர்ணமி நாளில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும் என்று கருதப்படுவதால் இந்து மதச் சடங்குகளில் கார்த்திகை ஸ்நானம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. தினமும் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகும். கார்த்திகை மாதம் தீபம் தானம் செய்வது லட்சுமிகடாட்சம் தரும். வெண்கலப்பாத்திரம், தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும்.

English summary
Karthigai masam is the eight month of Tamil calendar. This month karthigai got its name from the Tamil star of Karthiga. Karthigai masam is the favourite month of Lord Muruga, Lord Shiva, and Lord Vishnu as per the Tamil Beliefs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X