For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரான்சில் நடந்த கம்பன் கழகத்தின் 10ம் ஆண்டு விழா

Google Oneindia Tamil News

பிரான்ஸ்: பிரான்ஸ் கம்பன் கழகத்தின் 10 ஆம் ஆண்டு விழா கடந்த 12, 13 ஆகிய 2 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கார்ஜிஸ் லீஸ் கோனிஸ்சி பகுதியில் பிரான்ஸ் கம்பன் கழகத்தின் 10ம் ஆண்டு விழா கடந்த 12, 13 ஆகிய 2 தேதிகளில் சிறப்பாக நடந்தது. கடந்த 12ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கழக இணையர் ஆதிலட்சுமி வேணுகோபால் குத்துவிளக்கெற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார்.

கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலாளர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் ஆகிய மூவரும் கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க என்று உரத்த குரலில் கம்பன் வாழ்த்தை முழங்கினர். அதன்பிறகு கழக மகளிர் அணி உறுப்பினர் கவிஞர் சரோசா தேவராசு 6 காண்டங்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்களையும் அழகாகப் பாடினார்.

மகளிர் அணி உறுப்பினர்கள், 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்று பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினர். நாட்டிய கலாசோதி செல்வி சாரநாயகி கோபாலகிருட்டிணனின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் விழா சிறப்பாக நடந்தது.

பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் விழாவில் நகைசுவை கலந்த வரவேற்புரை ஆற்றினார். புதுச்சேரி சமூகத் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பெ.ராசவேலு தலைமை உரையாற்றினார்.

புதுவைக் கம்பன் கழக இணைச் செயலாளர் கி.கலியாணசுந்தரம் 10ம் ஆண்டு கம்பன் மலரை வெளியிட்டார். அதன்பிறகு பிரன்ஸ் கம்பன் கழக செயற்குழு உறுப்பினர்களுக்கும், மகளிரணி செயற்குழு உறுப்பினர்களுக்கும் கி.கலியாணசுந்தரம் பொன்னாடை போர்த்தினார். 'கம்பனில் பண்பாடு" தலைப்பில் தமிழருவி மணியன் உரையாற்றினார்.

'தெய்வக் கவியில் தெய்வப் புலவன்' என்ற தலைப்பில் உரையாற்றிய த.இராமலிங்கம், கம்பனின் காவியத்தில், திருவள்ளுவரின் திருகுறள் நிறைந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். கம்பன் கழக கவிஞர் தேவராசு, புதுவைக் கவிஞர் வைத்தி.கச்தூரி கவிமலர் வழங்கினர்.

கம்பன் விழாவின் முதல் நாளின் இறுதி நிகழ்ச்சியாக, நகைச்சுவை தென்றல் திருவாரூர் இரே.சண்முகவடிவேல் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இன்றைய வாழ்வுக்குப் பெரிதும் வழிகாட்டுபவன் - 'கும்பகருணனா ? வீடணனா?" என்ற விவாதம் நடந்தது.

'வீடணன்' என்று முனைவர் பர்வின் சுல்தானா, கவிஞர் பாரீசு பார்த்தசாரதி, சுகுணா சமரசம் ஆகியோரும், 'கும்பகர்ணன்' என்று லூசியா லெபோ, ஆதிலட்சுமி வேணுகோபால், கவிஞர் அருணா செல்வம் ஆகியோரும் தங்கள் கருத்துகளை கூறி வாதிட்டனர். இறுதியில் இன்றைய வாழ்வுக்கு நல்ல வழி காட்டுபவன் 'வீடணனே' என்று தீர்ப்பு வழங்கினார் நடுவர் இரெ.சண்முகவடிவேல்.

13ம் தேதி காலை 11 மணிக்கு இணையர் கவிமணி விசயரத்தினம் இராசலட்சுமி விளக்கேற்றி வைக்க 2ம் நாள் விழா துவங்கியது. சரோசா தேவராசு கடவுள் வாழ்த்தும், இளையோரணி தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர். கம்பன் கழகச் செயலாளர் பேரா. பெஞ்சமின் லெபோ வரவேற்றார்.

புதுச்சேரியின் சாதனைச் சிகரம் வே.பொ.சிவக்கொழுந்து துவக்க உரை நிகழ்த்தினார். புதுவை கல்விச் செம்மல் வி.முத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். பரோடா நகர் தமிழ் சங்கத்தின் தலைவராக 26 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் கலியன் எதிராசன் நிகழ்த்திய தலைமை உரையில் பெண்மையை எப்படி எல்லாம் கம்பன் ஏற்றிப் புகழ்ந்து போற்றி உள்ளான் என்று எடுத்துரைத்தார். 'கம்பனில் பெண்மை" என்னும் தலைப்பில் முனைவர் சுல்தானா உரையாற்றினார்.

அதன் பிறகு த.இராமலிங்கம் தலைமையில் 'கம்பனைக் கற்போர் நெஞ்சத்தில் களிநடம் புரிவது – நீதியின் மேன்மையா ? தமிழின் இனிமையா? காக்கும் இறைமையா? சகோதரப் பெருமையா? என்ற தலைமையில் சொற்போர் நடந்தது. நீதியின் மேன்மை என்பதற்கு முனைவர் பர்வின் சுல்தானாவும், தமிழின் இனிமை என்பதற்கு பேரா.பெஞ்சமின் லெபோவும், காக்கும் இறைமை என்பதற்கு நகைச்சுவைத் தென்றல் இரே. சண்முகவடிவேல் ஆதரித்து பேசினார். 'சகோதரப் பெருமையே" என்ற பாசத்தோடு பேச வந்தார் கவிஞர் சரோசா தேவராசு.

சொற்போரின் முடிவில் 'நீதியின் மேன்மை", "காக்கும் இறைமை", 'சகோதரப் பெருமை" ஆகிய வண்டிகளை இழுத்துச் செல்வது தமிழின் இனிமை தான் என்று தலைவர் இராமலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.

இந்தியத் தூதரகத்தின் அதிகாரி கன்யலால் தமிழில் வணக்கம் சொல்லிவிட்டு உரையாற்ற ஆங்கிலத்துக்கு தாவினார். அவரது ஆங்கில உரையை பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தமிழில் மொழிப்பெயர்த்தார்.

கம்பன் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நடந்த வழக்காடு மன்றம் நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் நடுவராக இருந்தார். மக்கள் சார்பாக மன்னர்கள் மீது த.இராமலிங்கம் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை நகைச்சுவைத் தென்றல் இரே.சண்முகவடிவேல் மறுத்தார். நகைசுவை கலந்து சிறப்பாக நடந்த பட்டிமன்றத்தின் முடிவில், 'மன்னர்கள் குற்றவாளிகளே' என்று நடுவர் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கம்பன் கழக விழாவின் இறுதி நிகழ்ச்சியாக விருந்தினர், மேடையில் பங்கேற்றவர்கள், விழா ஏற்பட்டாளர்கள் ஆகியோருக்கு கம்பன் கழகத் துண்டு, சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. கம்பன் பட்டயம் 4 பேருக்கும், கம்பன் விருது 13 பேருக்கும் வழங்கப்பட்டது.

கம்பன் கழக விழாவின் 2 நாட்களும் நடந்த வாழ்த்துக் கவிதை, கவிமலர், பரத நாட்டியங்கள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் பேரா. பெஞ்சமின் லெபோ தொகுத்து வழங்கினார். கம்பன் கழகப் பொருளாளர் சமரசம் தணிகா நன்றியுரை வழங்கினார்.

English summary
French Kamban Kazhagam celebrated 10th anniversary on November 12 and 13. Cultural programmes were held on 2 days and 13 persons were given Kamban award.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X