For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னொரு தலைமுறையாவது..!

Google Oneindia Tamil News

-மயூரா அகிலன்

அமைதிப் பூங்கா!. இது எங்க தெருவோட பேரு. அப்படி ஒரு பேரு வந்ததுக்கு காரணமே இங்க அடிக்கடி சண்டை, சச்சரவு நடக்கிறதுனாலதான், எங்க தெரு எளவட்டப் பயளுங்கல்லாம் சேர்ந்து அப்படி ஒரு பேரு வச்சிட்டானுங்க.

அன்னைக்கும் வழக்கம் போல சச்சரவோடத்தான் விடிஞ்சது. யார் வீட்டுல என்ன பிரச்சினையோன்னு ஆளாளுக்கு விசாரிச்சிட்டு இருக்கப்ப பிரச்சனை யார் வீட்டுலையும் இல்லை தெரு முனையில இருக்கிற வீர நாகம்மன் கோயில்தான்னு தெரிய வந்துச்சு.

எல்லோரும் கோயிலை பார்த்த படியே பேசிட்டு இருந்தாங்க. யாரும் உள்ள போன மாதிரி தெரியலை. எதுன்னாலும் ஆகாசத்துக்கும், பூமிக்கும் குதிக்கிற எளவட்டப் பசங்களும் அன்னைக்கு அமைதியா நின்னு குசு குசுன்னு பேசிட்டு இருந்தாங்க. எனக்கோ பொறுக்க முடியல. மெல்ல அந்த பயலுக பக்கத்துல போயி மெதுவா பேச்சுக்கொடுத்தேன்

டேய் என்னாங்கடா ஆச்சு? ஏன் எல்லோரும் கோயிலப்பாத்து பேசிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன்.

அதுக்கு நமட்டு சிரிப்பு சிரிச்ச ஒரு பய “ இதப்பார்றா, ஆல் இந்தியா ரேடியோ பாட்டிக்கே விசயம் தெரியாதான்னு" கேட்டான்.

எனக்கு வந்த கோவத்த அடக்கி கிட்டு, “ நக்கல் பேச்ச விட்டுட்டு விசயத்தை சொல்லுங்கடான்னு" கேட்டேன்.

அதுக்கு அந்த பயலுக சொன்னது என் தலையில இடியா எறங்கிச்சு. பெரிய வீட்டுப் பொண்ணு பிரேமா, கீழ் சாதிக்கார பயலை கட்டிக்கிருச்சின்னு பயலுக சொன்னதை என்னால நம்பவே முடியவே. இருந்தாலும் ஊரே கூடி பேசுறப்ப நம்பாம இருக்கவும் முடியல.

அது சரிடா அதுக்கு எதுக்கு எல்லோரும் வீரநகம்மா கோயில் வாசல்ல காத்துக் கெடக்கீங்கன்னு. மறுபடியும் அவங்க கிட்ட கேட்டேன்.

ஆங்…. கல்யாண ஜோடி இப்ப கோயிலுக்குள்ளதான் இருக்குன்னு சொல்லிட்டு மறுபடியும் பயலுக அவங்களுக்குள்ளயே பேசிக்க ஆரம்பிச்சுட்டானுங்க.யாரும் கோயிலுக்குள்ள போன மாதிரி தெரியலை.

நான் மெதுவா கோயில் முன் வாசல்ல நின்னு எட்டிப் பாத்தேன். ஆம்பளையும், பொம்பளையுமா சேர்ந்து மொத்தம் ஏழெட்டு பேரு இருந்தாக.

தெனமும் வேலைக்கு போறப்ப என்ன பாட்டி சவுக்கியமான்னு கேட்டுட்டு போற பிரேமா தலைய குனிஞ்சி உட்காந்துட்டு இருந்தா. அவள கட்டிக்கிட்ட பய புள்ள சிநேகித பசங்களோட பேசிட்டு இருந்தான்.

நான் எட்டிப் பாக்குறத பாத்துட்டு பேச்சை நிப்பாட்டிட்டு என்னைவே எல்லாரும் பாத்தாங்க. அதுக்குள்ள பின்னாடி இருந்த பயளுங்க எல்லாம் கொரலு கொடுத்தாங்க.

ஏய் பாட்டி, நாங்களே ஊர் பஞ்சாயத்தாளுங்க வரட்டும்னு தானே வாசல்ல நிக்கிறோம், நீ என்னத்தை நாட்டாமை செய்யப்போற பேசமா ஒன் வீட்டு திண்ணையில போயி உட்காருன்னு கத்துனாங்க பயளுக.

நா எதுவும் பேசாம திண்ணைய பார்த்து நடந்தேன். என் மனசு 50 வருசத்துக்கு பின்னோக்கி போச்சு. அன்னைக்கு நடந்த விசயத்தை இப்ப நினைச்சா கூட மனசல்லாம் ரணமா வலிக்குது.

பருவ வயசுக் கோளறுல வர்ற காதல் எனக்கும் வந்துச்சு. அத காதல்னு சொல்றதை விட அன்புக்கு ஏங்குன மனசுக்கு கொடுத்த அடைக்கலம்னு தான் சொல்லனும். கருப்பா இருக்கிறவங்க மத்தியில செக்கச் செவேல்னு இருந்த மணி என் மனசுல நுழைஞ்சிட்டான்.

அப்ப எங்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு டென்ட் கொட்டகையும், சந்தைப்பேட்டையில போட்ட பாவுக்கூத்தும்தான் படம் பாக்குறதை விட்டுட்டு ஒருத்தருக் கொருத்தர் பாத்துக்கிட்டே பொழுத ஓட்டுனோம்.

நல்லா போன எங்க வாழ்க்கையில நச்சுப் பாம்பா நுழைஞ்சா பெரிய வீட்டுப்பையன் காளியப்பன். அவனுக்கு எப்பவுமே எம்மேல ஒரு கண்ணு இருந்துச்சு.

ஒருநாள் நா பம்பு செட்டுல குளிக்கப் போனப்ப என் கைய பிடிச்சு இழுத்தான். நா பயந்து கத்தவும், அந்த சத்தத்தை கேட்டு அங்க வந்த மணி, உடனே காளியப்பன் முகத்தப் பாத்து ஒரு குத்து விட்டார். எனக்கு மயக்கம் வந்து நான் விழுந்துட்டேன். எந்த விசயம் ஊருக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிரும்னு பயந்து கெடந்தோனோ அது நடந்துருச்சி.

அடிபட்ட காளியப்பன் ஊருக்குள்ள போயி விசயத்தையே மாத்திச்சொல்லி பஞ்சாயத்தை கூட்டிட்டான்.

ஆளாளுக்கு ஒரு பேச்சு. எங்க பக்கத்து நியாயத்தை கேட்க யாருமில்லை. சின்ன சாதிப்பயலோட இந்த ஓடுகாலி கம்மாக்கரையில கொலாவிக்கிட்டு இருந்தான்னு காளியப்பன் சொன்னதை ஊரு சனம் மொத்தமும் நம்பிச்சு. கடைசில அவன் சொன்னதுதான் உண்மையாச்சு.

என்னைய காப்பாத்துன மணியை ஊரை விட்டே வெரட்டுனாங்க. எனக்கு மொட்டையடிச்சு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்தி ஊர்வலமா கொண்டு போனங்கா. அப்ப என்னோட முதுகுல பளேர்னு ஒரு அடி கொடுத்தான் காளியப்பன்.

அன்னைக்கு என்னைய அவன் அடிச்ச அடி, அவன் தலையில இன்னைக்கு இடியா எறங்கியிருக்கு. அதே பெரிய வீட்டு காளியப்பனோட பேத்தி தான் இன்னைக்கு வேற சாதிப்பயலை கல்யாணம் கட்டிக்கிட்டு வந்திருக்கா.

அன்னைக்கு ஊரே பஞ்சாயத்து பேசி நடக்காத ஒரு விசயத்துக்கு எனக்கு அநியாயமா தீர்ப்பு சொன்னாங்க. இன்னைக்கு அதே ஊரு சனம் என்ன தீர்ப்பு சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு நிக்குது.

பஞ்சாயத்துக்காரங்க மெதுவா பேச ஆரம்பிச்சாங்க. “ என்னப்பா, இப்படி ஒருத்தருக்கொருத்தர் பார்த்துட்டு நின்னா என்ன அர்த்தம். விவகாரம் வீதிக்கு வந்திருச்சி, தீர்ப்பு சொல்ல வேண்டியவரே தலைகுனிஞ்சி நிக்கிறாரு. பேச வேண்டியதை பேசுனாத்தானே வெவகாரம் முடியும்" அப்படின்னு ஒரு பெரிசு அடி எடுத்து கொடுத்துச்சு.

இதுல பேசுறதுக்கு ஒண்ணுமில்லைங்க. அவ கழுத்துல கட்டியிருக்கிற தாலிய கழட்டி கொடுத்துட்டு அவனோட எந்த ஒறவுமில்லைன்னு எழுதி தரச்சொல்லுங்கன்னு பெரிய மனுசன் காளியப்பன் சொன்னான். இதக்கேட்டு யாருக்கும் பேச்சு வரலை.

ஏன்னா இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் காளியப்பன் என்ன தீர்ப்பு கொடுப்பான்னு ஊருக்கே தெரியுமே. தப்பு பண்ணினது தன்னோட பேத்திங்கிறதுனால பழசை மறந்துட்டு பேசுனான் காளியப்பன்.

நான் மெதுவா பஞ்சாயத்தார பாத்து போனேன். என்னப்பார்த்துட்டு அவன் புருவத்தை சுருக்கினான். ஏன்னா அவனுக்கு மட்டுந்தானே உண்மை தெரியும்.

பஞ்சாயத்துல நா என்ன பேசப்போறேன்னு கேட்குறதுக்கு எல்லோரும் ஆவலா காத்துட்டு இருந்தாங்க. ஊர் தலைங்க என்ன பேச அனுமதிக்கணும் கேட்டுட்டு நா பேச ஆரம்பிச்சேன்.

இதே பஞ்சாயத்தால இரண்டு தலைமுறையா என்மனசுல பட்ட வலி ஆறலை.அதே மாதிரி இந்த பொண்ணோட மனசுலயும் ஆறாத வடுவை ஏற்படுத்திடாதிங்க. சாதி, மதம்னு பாத்து கழட்டி வீசுறத விட அந்த பையனை மனுசன்னு மட்டும் பார்த்து மனசைக்கொடுத்தாளே பிரேமா, அவளை வாழவிடுங்க….

அவங்க நினைச்சிருந்தா எங்கயாவது போயிருக்க முடியும். நம்ம ஊரு கட்டுப்பாடு தெரிஞ்சும் இங்க வந்திருக்காங்கன்னா அவங்க சொல்ல வர்றதை எல்லாரும் காது கொடுத்து கேட்கணும்னு சொன்னேன்.

காளியப்பனால ஒண்ணும் பேச முடியல.

பிரேமா என்ன சொல்லப்போறான்னு எல்லாரும் அவளையே பார்த்துட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த பிரேமா மொத தடவையா வாயை தொறந்தா.

உங்க யார் கிட்டையும் சம்மதம் கேட்காம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு எல்லோரும் எங்களை மன்னிக்கனும்னு ஆரம்பிச்சா.

அம்பது வருசத்துக்கு முன்னாடி செய்யாத குத்தத்துக்காக இந்த ஊர விட்டு தொரத்துன மணியோட பேரனத்தான் நான் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கேன்னு பிரேமா சொன்னதும் யாரோட மொகத்துலயும் ஈயாடலை.

எங்க தாத்தா பண்ணின பாவத்துக்கு நான் பரிகாரம் தேடிக்கிட்டேன். சாதி வெறி பிடிச்சு அலைஞ்சதெல்லாம் நம்மளோட போகட்டும் இனி வர்ற தலைமுறையாவது சாதின்னா என்னா? அது எப்படி இருக்குன்னு கேட்கணும் அப்படின்னு பிரேமா சொல்லிட்டு இருக்கும் போதே காளியப்பன் என் காலப்பிடிச்சு கதற ஆரம்பிச்சான்.

இப்ப எனக்கு மட்டுமில்லை எங்க ஊருக்கே தெரியும் அவன் எதுக்காக அழறான்னு.

English summary
This story is saying about the caste problem. Caste is dividing the people and caste problem is very big problem of our world and opposite of unity. If you are educated so think broad and independent,be global.forget the caste only remain human. you converse the parents and don't do compromise with your life. follow the heart because heart has a god. your parents love you and parents will happy if their child will happy.so pray god and convenes the parents. be brave and Avoid the Caste Problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X