For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடிக்கிருத்திகை-திருத்தணியில் திரண்ட பக்தர்கள் வெள்ளம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Thiruthani
ஆடிக்கிருத்திகையை ஒட்டி முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அறுபடைவீடுகளில் ஐந்தாம்படை வீடான திருத்தணியில் லட்சக்கணக்கான பக்கர்கள் பால்காவடி பன்னீர்காவடி எடுத்துவந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

கார்த்திகை பெண்களுக்கு மரியாதை

ஆறுமுகப்பெருமானுக்கு திதியில் ஷஷ்டியும், கிழமைகளில் வெள்ளியும் நட்சத்திரத்தில் கார்த்திகையும் சிறப்பானது.

முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்றாலும், அக்னியில் உதித்த ஆறுமுகனை பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்கின்றன புராணங்கள். அவர்களுக்கு முன்னுரிமை தரும் விதமாக கார்த்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனாலேயே முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு.

“கந்தன் தனை நீர் போற்றிய கடனால்

இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயராகுக!"

என்றும் அருளியதோடு மேலும் அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து, இந்தக் கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும், என்று அருளிச் செய்தார் சிவபெருமான்.

ஆடிக்கிருத்திகை விஷேசம் ஏன்?

மழைக்காலத் தொடக்கமான தட்சிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது.

தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

பிரச்சினைக்கு காரணம்

சிலருக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனாலும் மன நிம்மதி அரிதாகவே இருக்கும். சிலருக்கு வீடு, வாசல் இருக்காது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப் படுவார்கள். ஆனாலும் அவங்களுக்கு இருக்கும் ஆனந்தம் மற்றவரிடம் காண முடியாது. ஆனாலும் பணம், காசு இல்லாதவர்கள் என்று மட்டுமே பொருள் கொள்ளாமல்,சரியான வாழ்க்கைத்துணை அமையாதவர்கள், நன்கு படித்தும் அறிவு சரியாகப் பயன்படுத்தத் தெரியாம இருப்பவர்கள், குழந்தை பேறு கிடைக்காதவர்கள், குழந்தைகள் இருந்தாலும் அவர்களால் துன்பம் அனுபவிப்பவர்கள் என்று வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்னை இருந்தே தீரும்.

ஆகையால் இத்தகைய பிரச்னைகள் தீர விரதங்கள் அவசியம் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். ஆடிக்கிருத்திகை குறைகளை எத்தகையை குறைகளையும் தீர்க்கும் வல்லமை படைத்தது என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி தெப்ப உற்சவம்

ஆடிக்கிருத்திகை. முருகப் பெருமானின் தலங்கள் அனைத்திலும் விஷேசம் என்றாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகையில்தான். வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள். இதனைக் காண திரண்டுவரும் லட்சக்கணக்கான பக்தர்கள் "திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்று கூறும் சரணகோஷம் வானைப் பிளக்கும். காணும் இடமெங்கும் காவடியாய் ஊரே திருவிழாக்கோலம் பூண்டு எங்கும் ஆனந்தமாக இருக்கும். ஆடிக்கிருத்திகையையொட்டி நடைபெறும் தெப்ப உற்சவத்தைக்காண கண் கோடி வேண்டும்.

வடபழனி முருகன்

சென்னையில் வடபழனி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி அதிகாலை 3 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. தங்ககவச அலங்காரம் ராஜஉடைஅலங்காரம், சந்தனகாப்பு புஷ்ப அலங்காரம் என இரவு 11 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் முருகப்பெருமான்.

English summary
Aadi Krithigai (Kiruthigai or Kaarthigai) is celebrated on July 25 2011 (Monday). Generally on all Krithigai special abhishekam, alankaram and pujas are done to Lord Muruga in temples.Aadi Krithigai is very special. Many devotees fast in this day and take Kavadi, Pal Kuddam and do padayatra (walk) to Lord Muruga Temples. Chanting of Lord Muruga hymns and playing of percussion instruments by devotees can be seen in temples.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X