For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூடிக்கொடுத்த சுடர்கொடியாளுக்கு திருவிழா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Aandal
வைணவ தலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் ஆடிப்பூரமும் ஒன்றாகும். பன்னிறு ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரமாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூரில் 8 நாள் சீறும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரை தினம் ஒரு அலங்காரத்தில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் வாகனங்களில் நகர்வலம் வருவதைக் காண கண்கோடி வேண்டும்.

கருட சேவை

5 – ம் திருநாள் அன்று காலையில் பெரியாழ்வார் மங்கலாசாசனம் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பெருமாள், காட்டழகர், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆகிய 5 பெருமாள் ஆலய உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளி ஆண்டாள் ரங்கமன்னாரை தரிசனம் செய்வர். அன்றைய தினம் இரவு விடிய விடிய கருடசேவை நடைபெறும். இதனைக் காண ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் கோவிலில் குவிந்திருப்பார்கள். மக்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி மகிழ்ச்சியுடன் ஆண்டாள், ரங்கமன்னாரை தரிசனம் செய்வர். ஆடிப்பூரம் தினத்தன்று ஊர் கூடி தேர் இழுக்க அதில் ஆண்டாள் ரங்கமன்னார் சமேதராக நான்கு மாட வீதிகளிலும் வலம் வரும் தேரினை பல்லாயிரக்கணக்கனோர் கண்டு தரிசிப்பார்கள்.

ஆண்டாள் அவதாரம்

நளவருடம் ஆடி மாதம் சுக்ல பட்சம். சதுர்த்தி செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அந்த திருநாள், பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டது. இந்த தினத்தில் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் , பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழ் லட்சுமியின் அம்சமாய் அவதரித்தாள் ஆண்டாள்.

பிறந்தது முதலே அந்த கண்ணனின் மேல் தீராத பக்தி அந்த கோதைக்கு. அது நாளாக நாளாக வளர்ந்து காதலாகி கசிந்துருகியது. கண்ணனையே நினைந்து உருகி கடைசியில் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனின் திருவடிகளில் சரண்புகுந்தாள் ஆண்டாள்.

சூடிக்கொடுத்த சுடர்கொடி

நந்தவனத்தில் இருந்து சுத்தமாய் பறித்த மலர்களை மாலையாக தொடுத்து அரங்கனுக்கு சூட்டுவது பெரியாழ்வாரின் முக்கிய பணிகளில் ஒன்று. அனுதினமும் தவறாமல் மாலை தொடுப்பதை கண்ட கோதைக்கு அரங்கனின் மாலை மீது அப்படி ஒரு ஆவல். பெரியாழ்வார் வைத்து விட்டு சென்ற பூமாலையை எடுத்து தன் கழுத்தில் சூடி ரசித்து பார்ப்பாள் அந்த பேதை. ஒருநாள் இதை கண்டு பிடித்த பெரியாழ்வார் சொல்லெனா துயரம் கொண்டார். கோதையில் கழுத்தில் ஏறிய பூமாலையை இனி எப்படி அரங்கனுக்கு சூட்டுவேன் என்று அழுது அரற்றினார். ஆனால் அரங்கனோ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைதான் வேண்டு மென்று பெரியாழ்வாருக்கே கட்டளை இட்டான். அதுமுதல் அந்தகோதை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானாள்.

மணக் கோலம் கொண்ட கோதை

சிறுமியாய் இருந்த ஆண்டாள் மணப்பருவம் எய்தினாள். பெரியாழ்வாருக்கோ ஆண்டாளை எப்படி மண முடித்துக்கொடுப்பது என்ற கவலை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனை உணர்ந்த அரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி ஆண்டாளை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டான்.

பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக என்றருளினான். மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.

உலகளந்த உத்தமன், சீதைக்காக நடையாய் நடந்து காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த அந்த ராமன், அரங்கனாய்ப் படுத்திருக்கும் அந்நிலையை கண்ட கணமே ஆண்டாள் அவனுள் ஐக்கியமானாள். அவனைவிட்டு என்றும் பிரியாதிருக்கும் வரம் கேட்டவளாயிற்றே! அரங்கன் அதை நிறைவேற்றி வைத்தான்.

ஆண்டாள் மாலை

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது திருமாலிருஞ்சோலையில் இருந்து இறங்கி வைகை ஆற்றில் இறங்க வரும் கள்ளழகர் சூடுவதும் ஆண்டாளின் அழகு மாலைதான்.

திருமலையில் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமுடையவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாளின் மாலை திருப்பதிக்குச் செல்கிறது. அந்த மாலையை திருவேங்கடவன் அணிந்து கொள்ள அவரின் அருட்பிரசாதமாக புடவை ஒன்று ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அம்மனுக்கு வளைகாப்பு

இந்த ஆடிப் பூர தினத்தில் தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள். அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.

English summary
Aadi Pooram is one the major festival celebrated in every Vaishnavite temples. It falls on the Aadi month , the fourth month of the Tamil calender , and on the Pooram star . This year it falls on August 2nd. This day is considered as Goddess Andal's Birthday , and it is also believed that Andal is the incarnation of goddess Lakshmi. Andal is one among the 12 Alwars , and she is a great poetess , who is well known for her works which include Thiruppavai and Nachiar Thirumozhi . Andal and all other alwars are the most famous devotees of Lord Vishnu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X