For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமீரகத்தில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்: இஐஎப்எப் ஏற்பாடு

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ப்ரெடர்னிடி ஃபோரம்( இஐஎப்எப்), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்தது தான் வாழ்க்கை. சிலருக்கு வாழ்க்கையில் தென்றல் வீசும். சிலருக்கு சூறாவளியாக மாறும். மனிதன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகின்றான். ஆனால் பிரச்சனைகள் வரும்பொழுது மனமுடைந்து போகின்றான்.

பிரச்னைகளைத் தீர்க்கவே முடியாது என்று எண்ணுகின்றவன் தற்கொலை எனும் கோழைத்தனமான முடிவை எடுக்கின்றான். வாழ்க்கையைப் பற்றிய தவறான பார்வை தான் அவனை இந்த முடிவுக்குக் கொண்டு செல்கிறது. இன்று சமூகத்தில் பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலைகள் நிகழ்கின்றன.

உளவியல் வல்லுனர் சிகமன் ஃப்ராய்ட் மனிதன் தற்கொலையின் பக்கம் உந்தப்படுவதற்கான நியாயத்தை உளவியல் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார்:

“பொதுப்படையாக மனித உள்ளத்தில் வாழ வேண்டும் என்ற ஆசையும், சாக வேண்டும் என்ற ஆசையும் அடிப்படை உணர்ச்சிகளாகத் தேங்கியுள்ளன. இவை மனிதனை எதிரெதிர்த் திசைகளில் இழுத்துக்கொண்டும், ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டும் உள்ளன. ஏதேனுமொரு காரணத்திற்காக சாக வேண்டும் என்ற எண்ணம் வாழ வேண்டும் என்ற விருப்பத்தை மிகைத்து வெற்றி கொள்ளுமாயின் வாழ வேண்டும் என்ற அதீத விருப்பு குறைந்து பின்தள்ளப்பட்டு பயனற்றுப் போகும். எனவே சாவது தான் சிறந்த தீர்வு என்ற முடிவுக்கு மனிதன் வருகிறான்."

சமூகவியல் ஆய்வாளர் எமைல் துர்ஹம் என்பவர் தற்கொலை செய்வதற்கு சமூகச் சூழ்நிலைகளும் உணர்வுகளும் கூட காரணமாகின்றன என்கிறார். தற்கொலைகளை இவர் 3 வகைப்படுத்துகிறார்:

1. தன்னலம் கருதிய அல்லது தன்முனைப்புத் தற்கொலை (Egoistic Suicide): காதல் தோல்வி, திருமண உறவில் பிரச்சனை, கடன் தொல்லை, மன அழுத்தம் போன்ற தனிநபர் தொடர்பான பிரச்சனைகள் இதில் அடங்கும்.

2. நியம மறு தற்கொலை (Anomic Suicide): இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்வு, அகதி வாழ்வு, போர், கலவரம், இனப்படுகொலை போன்ற சமூகத்தில் ஏற்படும் எதிர்பாரா இடர்களால் வாழ்க்கை சீர்குலைவதைக் கண்டு கலங்கி செய்துகொள்ளும் தற்கொலைகள் இதில் அடங்கும்.

3. உன்னத அல்லது பொதுநலத் தற்கொலை (Altruistic Suicide): இனம், தேசம், கலாச்சாரத்திற்காகச் செய்யப்படும் தற்கொலைகள். ஆனால் இவை அரிதாகவே நிகழ்கின்றன.

உலகளவில் வருடாவருடம் 10 லட்சம் தற்கொலைகள் நடைபெறுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகின்றது. அதாவது ஒரு லட்சம் மக்களுக்கு 16 பேர் தற்கொலை செய்கின்றனர். இந்தியாவில் 2008-ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 17 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்றப் பதிவகம் கூறுகின்றது. தற்கொலை செய்துகொள்வதில் இலங்கைதான் முதலிடத்தில் உள்ளது. அங்கே ஒரு லட்சம் பேருக்கு 47 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அமீரகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 147 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமீரகத்தின் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஃபாத்திமா அல் மஸ்கரி தலைமையில் அல் அய்னைச் சேர்ந்த 239 கட்டடத் தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் நான்கில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், 6 சதவீதம் பேர் தற்கொலை எண்ணத்தில் இருப்பதாகவும், 2.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்பங்களும், துன்பங்களும் எவருடைய அனுமதியைப் பெற்றுக்கொண்டும் வாழ்க்கையில் நுழைவதில்லை. மாறாக, இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கின்றன. “ஒவ்வொரு கஷ்டத்துடனும் ஒரு இலேசும் இருக்கின்றது" (அல் குர்ஆன் 94:6) என்று சிந்தித்தாலே துயரங்கள் எல்லாம் தூசிகளாக மாறிவிடும்.

இஸ்லாம் தற்கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. “இன்னும் உங்கள் கரங்களாலேயே உங்களை நீங்கள் அழிவின்பால் இட்டுச் செல்லாதீர்கள்" (அல் குர்ஆன் 2:195). மனித வாழ்க்கை இறைவன் மனிதனுக்குக் கொடுத்த ஓர் அமானிதம். எனவே, தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கு ஒருவனுக்கும் உரிமை கிடையாது. மனிதனை இறைவன் பரீட்சிக்க நாடுகின்றான். “உங்களில் மிகச் சிறந்த செயல் புரிபவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்" (அல் குர்ஆன் 67:2).

தற்கொலைக்கான காரணிகள் அனைத்திற்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறது. ஒரு மனிதனது வாழ்க்கைக் காலம் அவன் தாயின் கருவறையில் 4 மாதச் சிசுவாக இருக்கும்போதே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, தன்னுயிரை மாய்த்துக்கொள்பவனது நிலை மிகக் கொடுமையானதாகவே அமையும்.

“யார் ஒரு மலையிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்கிறானோ அவன் நரகிலும் அவ்வாறே தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருப்பான். யார் விஷமருந்தி தற்கொலை செய்கிறானோ அவன் நரகிலும் விஷம் அருந்திக் கொண்டே இருப்பான். யார் தன்னுயிரை ஓர் இரும்புக் கருவியால் அழித்துக் கொள்கிறானோ அவன் மறுமையில் நெருப்புக் கிடங்கில் நிரந்தரமாக இரும்புக் கருவியால் தன்னைக் குத்திக் கொண்டே இருப்பான். (நூல் : புகாரீ)

தற்கொலை செய்வதால் இம்மை, மறுமை ஈருலகிலும் கொடூரமான விளைவுகளை அனுபவிக்க வேண்டி வரும். எனவே தற்கொலை என்னும் மாபாதகச் செயலிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வோம். ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.

English summary
Emirates India Fraternity Forum(EIFF) UAE has arranged for an awareness campaign against suicide from june 24 till 30 there. 147 Indian workers in UAE had committed suicide in 2010. A recent study has found that depression and stress as the major reasons for the suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X