For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீர்ச் சண்டைக்கு காரணமான தாமிரபரணி கால்வாய் இணைப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

-தினகர்

எப்போதெல்லாம் நதி நீர் இணைப்பு, காவிரிப் பிரச்சினை என்று பேசப்படுகிறதோ, அப்போதெல்லாம் உடனடியாக சந்திக்கு இழுக்கப்படும் பெயர் ரஜினிகாந்த். 'அவர் ஒரு கோடி தர்றேன்னு சொன்னாரே... அவ்ளோதானா?' என்று கேட்பது வாடிக்கை.

ஒரு கோடி தர்றேன்னு சொன்னது அவர் குற்றமா... அதற்கேற்ப வேலைகளை ஆரம்பிக்காத அரசின் குற்றமா? என்றெல்லாம் சிந்திக்கும் நிதானத்தில் பெரும்பாலோர் இருப்பதில்லை!

இதற்கு உதாரணம், சமீப காலமாக தென்மாவட்டத்தில் தாமிரபரணி நீருக்காக தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம்.

'இந்தியாவிலேயே தமிழகம்தான் நதி நீர் இணைப்புக்கு முன்னோடி , இதோ நாங்கள் நதி நீர் இணைப்பை தாமிரபரணியில் 'வெள்ள வடிகால் திட்டம்" மூலம் ஆரம்பிக்கிறோம்,' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்து, ஸ்ரீவைகுண்டம் கன்னடியன் கால்வாய்ப் பகுதியில் வேலையையும் ஆரம்பித்தார்.

ஆங்கிலேயர்கள் காலத்தில், பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் இணையும் பகுதியில், தாமிரபரணியின் குறுக்கே கன்னடியன் கால்வாய்க்கு நீர் செல்வதற்காக ஒரு மீட்டர் உயரத்தில் தடுப்புச் சுவர் கட்டியுள்ளனர். இந்த தடுப்பு சுவரைத்தான், நதி நீர் இணைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, மேலும் ஒன்றரை மீட்டருக்கு உயர்த்தி, அதாவது இரண்டரை மீட்டர் உயர்த்தி கட்டியுள்ளார்கள். இதில் வெள்ள நீர் எதுவும் சேமிக்கபடுவதில்லை.

ஆனால் பாபநாசம், மணிமுத்தாறு நீர்ப் பிடிப்பு அணைகளின் சேமிப்பு நீருக்கும் சேர்த்து பங்கம் வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கசிவு நீர் கூட கீழே உள்ள பகுதிகளுக்கு வருவதில்லையாம். இங்குள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டால் மட்டுமே, கீழ் மடைப் பகுதிகளுக்கு நீர் வரும் என்ற நிலைமை. கால்வாயைச் சேர்ப்பதாகக் கூறி, கடைமடைப் பகுதிக்கு வந்து கொண்டிருந்த தண்ணீருக்கும் வேட்டு வைத்துவிட்டது இந்தத் திட்டம்.

தாமிரபரணியின் கடைசி அணைகட்டான ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வெள்ள நீர் பாசனத்துக்கு திருப்பி விடப்படும் என்றுதான் விவசாயிகள் அனைவரும் எதிர்ப்பார்த்தனர். காரணம் எல்லா கிளை நதிகள் மற்றும் ஊரணிகளிலிருந்தும் வெளியேறும் வெள்ள நீர், கடைசியாக சேர்வது ஸ்ரீவைகுண்டம் அணையில்தான்.

எனவே, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து திருப்பி விடுவதுதான் சரியான பலன் தரக்கூடிய திட்டம். அணையின் தென்புற கால்வாயை மேலும் வலுப்படுத்தி, வழியில் உள்ள குளங்களை, இணைத்து, ஒவ்வொரு குளமாக வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும்.

ஆனால் அதைச் செய்யாமல், தடுப்புச் சுவரை மட்டும் உயர்த்தியதில், வந்து கொண்டு நீரையும் தடுத்து நிறுத்தியதுதான் மிச்சம். இதற்குக் காரணம் அதிகாரிகளின் தவறான வழிகாட்டல் மற்றும் திட்டம்தான் என்கிறார்கள்.

சமீபத்தில் ஸ்ரீவைகுண்டம் அணை திறந்து தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. சுமார் 5.5 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலந்தது. இது பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு!

ஆனால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய நீர் சேமிப்பு அணைகள் நிரம்ப வில்லை. இதன் மூலம் வெள்ள நீர், கீழ்ப்பகுதியில் உள்ள குளங்கள், ஊரணிகள் நிரம்பித்தான் தாமிரபரணியில் சேர்கிறது என்று தெளிவாகிறது.

"கபிணி, கேஆர் சாகர் திறந்தால் தான் தமிழகத்தின் மேட்டூருக்கு தண்ணீர்" என்ற நிலைதான் இப்போது தாமிரபரணி நீர்ப்பாசனப் பகுதிகளிலும் நிலவுகிறது. கன்னடியன் கால்வாய் போக மீதம் இருந்தால்தான், பழைய விவசாயிகளுக்கு தண்ணீர் என்ற நிலை.

தாமிரபரணி கன்னடியன் கால்வாய்க்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் ஏக போக உரிமை போலாகி விடுகிறது. வருங்காலத்தில் ஒரே மாவட்டதிற்குள்ளேயே புதிய கர்நாடகா-தமிழ்நாடு பிரச்சனையாகும் வாய்ப்புள்ளது. நெல்லை மாவட்டத்தின் கீழ்பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து பாசன குளங்களும் வறண்டு விடும் நிலைமை ஆகிவிடும்.

கன்னடியன் கால்வாய் அருகே தாமிரபரணியின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள ஒன்றரை மீட்டர் தடுப்பு சுவர் உயரத்தை உடனடியாக அகற்றி பண்ணிரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தாமிரபரணி பாசன விவசாயிகளின் நலன் காக்க வேண்டும்" என்பது தாமிரபரணி பாசன விவசாய சங்கங்களின் வேண்டுகோள்.

இந்த மாதிரி தடுப்பணை சுவரை உயர்த்து, அகற்றுவது என்று சிறுபிள்ளைத் தனமான வேலைகளை விட்டு, ஸ்ரீவைகுண்டம் அணையை இன்னும் பலப்படுத்தி வெள்ள நீரை திருப்பி தென் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டு போராடி வருகிறார்கள் விவசாயிகள்.

இதனை முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் பொருட்டு தாமிரபரணி பாசன விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதமும் இருந்தார்கள் கடந்த வாரம். கிட்டத்தட்ட 2000 விவசாயிகள் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு இந்தப் பிரச்சினையை இன்னும் சிக்கலாக்காமல், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் விருப்பம்போல தீர்த்து வைக்குமா? என்பதுதான் இப்போதைய கேள்வி. தேர்தல் நேரம் என்பதால் விவசாயிகளும் நம்பிக்கையிழக்காமல் போராட்டங்களைத் தொடர்கிறார்கள்!

English summary
Tuticorin district farmers protest against interlinking water project of Tamil Nadu govt in Tamirabarani river, due to the misguidance of the officials in the scheme. According to the farmers, project is totally against the welfare of the district farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X