For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஷ்டமியில் அவதரித்த கண்ணன்

By Chakra
Google Oneindia Tamil News

தர்மம் எங்கெல்லாம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கே நான் அவதரிப்பேன் என்று மகாவிஷ்ணு பகவத் கீதையில் அருளியுள்ளார். இறைவனின் அருள் வார்த்தை ஒவ்வொரு யுகங்கள் தோறும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிருத யுகத்தில் இரணியகசிபுவை அழிக்க திருமால் நரசிம்மமாக அவதரித்தார். எடுத்தார் . திரேதா யுகத்தில் ராவணனையும் கும்பர்ணனையும் அவனுடன் சேர்ந்த அரக்கர்களையும் கொல்ல ராமனாக அவரித்தார். துவாபராயுகத்தில் கம்சன், சிசுபாலன் , துரியோதனன், நூற்றுக்கணக்கான கௌரவர்களுடன், கர்ணனையும் சேர்த்து அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு.

அவதார நோக்கம்

ஆவணிமாதம், அஷ்டமி திதியுடன் கூடிய ரோகினி நட்சத்திர நன்னாள் அந்த இறைவன் அவதாரம் செய்த நாள் என்பதால் புண்ணியம் தேடிக்கொண்டது. அன்றுதான் தன் தாய்மாமன் கம்சன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து மண்ணுலக மக்களை காக்க மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள்.

தர்மத்துக்குப் புறம்பாக பல அநியாயங்கள் செய்த கம்சனை அழிக்கும்படி, பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமாதேவி. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என, அவருக்கு வாக்குறுதி அளித்தார் பிரம்மா. அதன்படி வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாய் கண்ணனை பிறக்க வைத்து தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.

கிருஷ்ணாவதாரம்

தேவகியும், கம்சனும் சகோதர சகோதரிகள். தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் கூற, அதனால் அச்சமுற்ற கம்சன், தேவகியை கொல்ல முயன்ற போது அதனை தடுத்த வசுதேவர் தனக்கு பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படி சிறையில் அடைத்து அவர்களை கண்காணித்த கம்சன், தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவதாக கருவுற்றதும், திருமால், மாயை என்ற பெண்ணைப் படைத்து, “தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்!" என்றார்.

அதன்படியே, மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது; கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் பிறந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று அவளுக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே அருள்வாக்களித்தார்.

அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் குழந்தை கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!" என்று சொல்லி மறைந்தது. பின்னர், கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.

அவதார தின கொண்டாட்டம்

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கூறிய ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையாக போற்றப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கண்ணன், கோபியர்களைப் போல அலங்கரித்தும் மகிழ்கின்றனர். கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர்.

இந்த நாளில் உரியடித் திருவிழாவும், மனித பிரமிடுகளை எழுப்புதலும் நடைபெறும். அதாவது மிக உயர்ந்த இடத்தில் வெண்ணை நிரப்பப்பட்ட பானை கட்டி தொங்கவிடப்படும். அதை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி - பிரமீது போன்ற தோற்றத்தில் - அந்த பானையை உடைத்து அதில் இருக்கும் வெண்ணையை உண்பது சிறப்பம்சமாகும்.

English summary
Krishna Jayanthi is the birthday of Lord Krishna. It falls on August 21st- in the Vedic month of Avani (August-September), when Ashtami (8th phase of waning moon) coincides with the Rohini star. Ashtami is the half way mark between the Full Moon and the New Moon, and is a time with potential for great transformation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X