For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரை அறிவிக்கும் தும்பைப்பூ மாலை

Google Oneindia Tamil News

பச்சைப் பசும்இலைகளின் மேல் வெண்ணிறத்தில் பூத்திருக்கும் மென்மையான பூக்களான தும்பைக்கு மன்னர்கள் காலத்திலேயே சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மன்னன் தும்பைப் பூ மாலை அணிந்து விட்டாலே போருக்கு தயாராகிவிட்டான் என்று பொருளாகும்.

“அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்."

என்று சங்க இலக்கியங்களில் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .

தொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணமே கூறி இருப்பதாகக் கூறுவர். ராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்து சென்றதாகக் கம்பர் ராமாயணத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மற்றும் வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான்.

ராவணனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து, அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர்.

தும்பையின் வகைகள்

தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு. ஆனால் அந்தக்காலத்திலோ மன்னர் தும்பைப்பூ மாலை அணித்து விட்டால் அடுத்து வருவது போர் தான்.

"அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'

கழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.

விஷ முறிவான தும்பை

பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்தவர்களுக்கு தும்பை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு எடுத்து பாம்பு கடித்தவர்களுக்கு கொடுத்தால் இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். பாம்பு கடித்த நஞ்சு இறங்கும்.

தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும்.

மாதவிலக்கு பிரச்சினை தீரும்

தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும். தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும்.

கண்பார்வை தெளிவாகும்

தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் பூசி வரத் தேமல் குணமாகும். தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சிரங்கு , சொறி , நமச்சல்போகும்.

தலைவலியை குணமாக்கும் தும்பை

தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.

தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, கோர்திருந்தால் இறங்கிவிடும். தலைவலி, தலைக்குத்தல் குணமடையும்.

இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு உண்டு. பாரம்பரியமாக நம் நாட்டு மக்களிடையே தும்பைப் பூவின் பயன்பாடு இன்றைக்கும் இருந்துவருகிறது.

English summary
Leucas aspera or Thumbai, Siddha remedy for Nasal congestion, Cough, Cold, Fever, Headache, Sinusitis, Snake bites etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X