For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னடியன் கால்வாய் பிரச்சினை - இதோ ஒரு மாற்றுத் திட்டம்!

By Shankar
Google Oneindia Tamil News

தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில், முக்கிய தென் மாவட்டங்களான தூத்துக்குடி - திருநெல்வேலி விவசாயிகளிடையே பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது தாமிரபரணியின் கன்னடியன் கால்வாய் தடுப்புச் சுவர் பிரச்சினை.

கடந்த புதன்கிழமை, தாமிரபரணி விவசாயிகள் ஒன்று திரண்டு நெல்லை வி.எம் சத்திரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அதற்கு முன் தூத்துக்குடி மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கடையடைப்புப் போராட்டத்தையும் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இவர்களின் ஒற்றை வரி கோரிக்கை 'கன்னடியன் கால்வாய் அருகே தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும்' என்பதே.

புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர், சாதாரண நாட்களில் தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரை திசை திருப்பிவிடும். தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒரு விஷயத்தை எப்படி அனுமதிக்க முடியும்? என்பது தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் ஆதங்க கேள்வியாக உள்ளது.

தாமிரபரணி பாசனம்:

தாமிரபரணி ஆற்றை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் 46,126 ஏக்கரும், நெல்லை மாவட்டத்தில் 40,000 ஏக்கர் பாசன நிலங்களும் உள்ளன.

பாபநாசம் அணைதான் தாமிரபரணியின் முக்கிய நீராதாரம். அத்துடன் மணிமுத்தாறு அணையும் சேரும் போது வற்றாத நதியாகிறது. இரண்டு அனணகளிலிருந்து வரும் நீர் சேருமிடத்தில்தான் கன்னடியன் கால்வாய் அமைந்துள்ளது.

மொத்தம் 11 கால்வாய்கள். உச்சியிலிருந்து நான்காவதாக வருவது கன்னடியன் கால்வாய். இதற்குக் கீழே உள்ள 7 கால்வாய்களின் பாசனப் பகுதி விவசாயிகள்தான் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கன்னடியன் கால்வாய்க்கு கீழேதான் தாமிரபரணி சமவெளியில் பாய்ந்தோடுகிறது. போகும் போக்கில் கடனா நதி, சிற்றாறு ஆகிய இரண்டு பெரிய கிளை நதிகளில், அந்தந்த அனணகள் நிரம்பிய பிறகு, கிடைக்கும் வெள்ள நீரும் சேர்கிறது. தவிர திருநெல்வேலி போன்ற, வழியில் உள்ள ஊர்களில் கிடைக்கும் மழை நீரும் தாமிரபரணியில் கலக்கிறது.

ஏற்கெனவே இருக்கும் கன்னடியன் கால்வாய் தடுப்புச் சுவரை இன்னும் ஒன்றரை மீட்டர் உயர்த்தி கட்டியதுதான் பிரச்சனை. அதை அகற்ற வேண்டும், பழைய நிலை தொடர வேண்டும் என்று தாமிரபரணி விவசாயிகள் ஒன்பது மாத காலமாக அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள், உண்ணாவிரதம் என்று பல வழிகளில் போராடி பார்த்து விட்டு இப்போது சாலை மறியல் நடத்தியுள்ளார்கள். ஓவ்வொரு கட்ட போராட்டத்தின் போதும் ஆதரவு பெருகி கொண்டே சென்று தற்போது மாவட்ட அளவில் வியாபாரிகள் கடை அடைப்பு செய்து ஆதரவு தரும் நிலை வரை சென்றுள்ளது.

அரசின் 'நதி நீர் இணைப்பு திட்டத்தை' எதிர்ப்பது போல் உள்ளதே என்று கேட்டால் இது 'வெள்ள கால்வாய் திட்டம் தான்', வெளியே அவ்வாறு சொல்லிக் கொள்கிறார்கள் என்று விவசாய பிரதிநிதிகளிடம் பதில் வருகிறது.

சரி அப்படியே இருக்கட்டும், அரசின் திட்டத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களே, ஏன்?

தாமிரபரணி பாசன திட்டக்குழு தலைவர் உதயசூரியனிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தபோது, அவர் சொல்லும் காரணங்கள் இவை:

"முதலில் ஒன்றை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் அரசின் திட்டத்தை எதிர்க்கவில்லை. எங்களுக்கு உரிமை உள்ள தாமிரபரணி நீரை, தடுப்பு சுவர் எழுப்பி நிறுத்தக் கூடாது என்று தான் சொல்கிறோம்.

சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே தாமிரபரணியை நம்பி பரம்பரையாக விவசாயம் செய்து வரும் எங்கள் வாழ்வாதாரம் பாதிப்படையக் கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை.

வெள்ள நீரை பயன்படுத்த நினைக்கும் அரசின் திட்ட நோக்கம் சரியானதுதான். ஆனால் திட்ட வடிவம் மற்றும் நடைபடுத்தும் விதம் மிக மிக தவறானது. இதனால் தாமிரபரணி நதியே வறண்டு விடும் அபாயம் உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் பாசனத்திற்குரிய தாமிரபரணி தண்ணீர் தான் திருப்பப்படுகிறது.

வெள்ளக் கால்வாய் என்றால் அனைத்து நீர் நிலைகள், குளங்கள், நிறைந்த பின் கடலுக்கு வீணாக செல்லும் நீரைத்தான் திருப்பிக் கொண்டு செல்லவேண்டும்.

ஆற்றின் தலைப்பகுதியில் தடுப்பு சுவர் எழுப்பி வேறு பகுதிக்கு எடுத்து செல்வது 'வெள்ளக் கால்வாய்" திட்டம் இல்லை. அது தாமிரபரணி ஆற்றை திசை திருப்பும் செயல்.

கடைசி அனணக்கட்டான ஸ்ரீவைகுண்டத்திற்கு பிறகு கடலுக்கு செல்லும் நீரை கால்வாய் அமைத்து தென் பகுதிகளுக்கு எடுத்து செல்வதே சரியான திட்டம்.

மேலும் உபரி நீர் என்று அதிகாரிகள் சொல்கிறார்களே, எங்கள் நிலைமையை முதலில் கேளுங்கள். ஸ்ரீவைகுண்டம் வடகால்வாய், தென்கால்வாய் பகுதிகளுக்கு முன் கார் பருவம் உட்பட மூன்று போகம் நெல் விவசாயத்திற்கு அனுமதி கொடுத்து அரசு ஆனண உள்ளது.

இதில் பேய்குளம், பொட்டைக்குளம், கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 40 வருடங்களாக இரண்டாம் போகத்திற்கே தண்ணீர் கொடுப்பதில்லை.

முதல் போக நெல் விவசாயத்திற்கே சில சமயங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. 5 வருடங்களுக்கு முன்னால் இதே பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் நெல் விவசாயம் பொதி பருவத்தில் நீர் கிடைக்காமல் கருகி விட்டதை யாரும் மறக்கவில்லை. அன்றைய தினத்தில் அணையில் சுமார் 65 அடி மட்டம் இருந்தும் அதிகாரிகள் தண்ணீர் திறக்க மறுத்துவிட்டனர்.

இப்படி ஏற்கனவே அரசு ஆணைப்படி கொடுக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்க முடியாத போது, எப்படி உபரி நீர் கிடைக்கும்?

1981 ம் ஆண்டுக்கு பிறகு முப்பது வருடங்களாக எந்த கால்வாயிலும் பராமரிப்பு பணி நடக்கவில்லை. தாமிரபரணி பாசன குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரியாக பராமரிக்கப்பட்டாலே கடலுக்குச் செல்லும் வெள்ள நீர் பாதி அளவுக்கு மேல் குறைந்துவிடும்.

தமிழ் நாட்டிலேயே முன் கார் சாகுபடிக்கு அரசு ஆணை உள்ள ஒரே பகுதி, கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் வடகால்வாய் மற்றும் தென்கால்வாய் மட்டுமே.

தாமிரபரணியின் மற்ற ஒன்பது கால்வாய்களுக்கு கூட அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆண்டு முழுவதும் நதியின் கடைசி வரை நீர் வரத்து இருக்க வேண்டும் மற்றும் வழியில் உள்ள ஊர்களுக்கு, கால்நடை தேவைகளுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்று ஆணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது தடுப்பு சுவர் கட்டியதன் மூலம் இந்த ஆணைக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும் நிலை உள்ளது..."

அரசுக்கு இந்தக் காரணங்கள் தெரியவில்லையா? எப்படி இதற்கு உலக வங்கியின் அனுமதி பெற்றார்கள்?

உதயசூரியன் தொடர்கிறார்.

"உலக வங்கியின் அறிவுரைப்படிதான் விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்படும் பாசனக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு முழுவதும் ஒன்பது பாசனக் குழுக்கள் இருக்கின்றன. உறுப்பினர்கள் மற்றும் தலைவர் நேரடியாக விவசாயிகளால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு விவசாய திட்டமும் உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டால், சம்மந்தபட்ட பாசனக் குழுவுடன் கலந்தாலோசித்து, அதன் சம்மதத்துடன்தான் திட்டம் அறிவிக்கப்படவேண்டும்.

இந்த திட்டம் தாமிரபரணி விவசாயிகளுக்கு எதிரானது என்று அதிகாரிகளுக்கே தெரிந்ததால்தான், தாமிரபரணி பாசன திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவரின் கவனத்திற்கு தெரியாமலேயே, நடைமுறைப்படுத்த துவங்கி விட்டனர்.

உலக வங்கி இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்திருந்தால் அது விதிமுறைகளுக்கு எதிரானது. அவர்கள் மீண்டும் திட்டவடிவத்தை பரிசீலித்து, தாமிரபரணி பாசன திட்டக்குழுவின் ஒப்புதல் கிடைத்தால்தான் அதை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்.

ஆனால் திட்ட அறிவிப்பு பலகையில் உலக வங்கி நிறைவேற்றும் திட்டம் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

சரி... மாற்று திட்டம் என்ன?:

கன்னடியன் கால்வாய் விவகாரம் சுமூகமாக முடியவும், வறண்ட பகுதிகளுக்கும் நீர் கிடைக்கவும் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்துள்ளனர் விவசாயிகள்.

கடற்கரைக்கு அருகாமையில் உள்ள உடன்குடி, சாத்தான்குளம், திசையன்விளை, ராதாபுரம் உள்ளிட்ட நம்பியாறு, கருமேனியாறு பகுதிகளில்தான் அதிக வறட்சி உள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து குடிநீருக்கும் தட்டுப்பாடு இருக்கிறது. தாமிரபரணி வெள்ள நீரை கடற்கரைக்கு அருகாமையில் உள்ள இந்த வறட்சி பகுதிகளுக்கு கொண்டு வந்தால் மக்கள் பெருமளவு பயனைடவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆக, கடற்கரையை ஒட்டிய வறட்சி பகுதிகளுக்கு நீர் கொண்டு வர, தாமிரபரணி ஆற்றின் உச்சிப்பகுதியில் இருந்து ஏன் கால்வாய் தோண்ட வேண்டும்? அதைவிட ஸ்ரீவைகுண்டத்திற்கு கீழே, ஏரலில் இருந்து தென்புறமாக கால்வாய் அமைத்தால் இந்த வறண்ட பகுதிகளுக்கு நேரிடையாக கொண்டு செல்லலாமே..

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து சென்னை வழியாக காஞ்சீபுரம் மாவட்டம் மரக்காணம் வரை 420 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கோதாவரி, கிருஷ்ணா நதி, அடையாறு, பாலாறு என பல ஆறுகளை இனணத்து, பக்கிங்காம் கால்வாய் கட்டி உள்ளார்கள். தற்போது இந்த கால்வாயை பராமரிப்பு செய்து தேசிய நீர்வழி எண் 4 (NW 4 ) என்ற பெயரோடு தெற்கே புதுச்சேரி வரை நீட்டிப்பு செய்கிறார்கள்.

அதே போல் தாமிரபரணி ஆற்றின் ஏரல் பகுதியிலிருந்து உடன்குடி, சாத்தான்குளம் , திசையன்விளை வழியாக ராதாபுரம் வரை தென்பகுதியில் கால்வாய் அமைக்கலாம். நவீன கட்டமைப்பு வசதிகள் உள்ள இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நம்மால் நிறைவேற்ற முடியாத திட்டங்கள் என்று ஏதும் உண்டா?

முழுமையான வெள்ள நீர் பயன்பாடு:

ஏற்கனவே ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பனண கட்டும் திட்டம் இருக்கிறது. கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீர் முழுவதையும் வறண்ட பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பி விடலாம். தாமிரபரணி விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

தனி நபர் ஒருத்தருக்கு பாதிப்பு என்றாலும் திட்டதை அனுமதிக்க மாட்டோம் என்று உலக வங்கியில் விதி இருக்கிறது. தாமிரபரணி விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.

தமிழக அரசு மற்றும் உலக வங்கி இந்த மாற்று திட்டத்தை கவனிக்குமா?

English summary
The Thamirabarani riverbed farmers gave an alternative plan to solve the present Cannadian Canal issue. According to their plan, a new canal should be created in the southern side of the river through Eral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X