For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழைகளின் ஊட்டி ஏலகிரி

Google Oneindia Tamil News

'ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் பெருமையுடைய ஏலகிரி, வேலூர் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோடைவாசஸ்தலமாகும். பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து கிராமிய சூழலில் அமைந்துள்ள இப்பகுதியில் தூய்மையான காற்று வீசுவதால் அதை அனுபவிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப் பகுதியை அடைய பொன்னேரி கூட்டுச் சாலையில் இருந்து 14 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும். வாகனங்களில் சுமார் 30 நிமிட மலைப்பாதை பயணம் ஒரு சுகமான அனுபவமாக அமையும். மலைப் பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகவும், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், கபிலர், அவ்வையார், பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நல்லி, பேகன் ஆகிய பெயர்களை இந்த கொண்டை ஊசி வளைவுகள் தாங்கியுள்ளன.

14 குக்கிராமங்களைக் கொண்ட 28.2. சதுர கி.மீ. அமைந்துள்ள இப்பகுதி யில் அதிக குளிர் இன்றி மிதமான குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

செயற்கை ஏரி:

ஏலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த இடம் புங்கனூர் செயற்கை ஏரி. 55 ஆயிரம் சதுரடியில் அமைந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி உண்டு. ஏரியின் நடுவில் செயற்கை நீருற்றும், ஏரியை சுற்றிலும் அழகிய பூங்காவும் நிறுவப்பட்டுள்ளன.

ஏரியின் அருகே சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. பூங்காவில் இருபுறமும் புல் தரைகள், அழகிய செடிகள், 5 செயற்கை நீரூற்றுகள், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று, செயற்கை சிற்றருவி, தொட்டில் மீன்கள், ரோஜா தோட்டம் என கண்கவர் அம்சங்களும் உண்டு.

மூலிகை பண்ணை:

ஏரியின் அருகே மங்கலம் கிராமத்தில் மூலிகை பண்ணை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான மூலிகைகள் கிடைக்கின்றன. அரசு பழப் பண்ணை ஒன்றும் உள்ளது. இதில் மலையில் விளையும் பழங்களை பயணிகள் வாங்கிச் செல்லலாம்.

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி:

ஏலகிரி வழியாக பாயும் அத்தாறு ஆறு இங்கு நீர்வீழ்ச்சியாக பாய்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 30 மீ. இந்த அருவிக்கு நேர்வழி இருந்தாலும் பலநேரங்களில் அந்த வழி மூடியே இருப்பதால், நிலவூர் கிராமத்தில் இருந்து மலையில் 5 கி.மீ நடந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இந்த அருவிக்கு அருகே சிவலிங்கம் வடிவில் ஒரு கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய கடவுளாக முருகப்பெருமானை வழிபடுகின்றனர். மூலிகை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது பல நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

சுவாமி மலை:

சுவாமிமலை என்ற பெயரில் அழகிய சிவன் கோயில் ஒன்றும் ஏலகிரி மலையில் அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் இடமான இந்த சுவாமிமலைப் பகுதிக்குச் செல்ல மங்கலம் கிராமத்தில் இருந்து 3 கி.மீட்டர் தூரத்திற்கு சுற்றுலாத் துறை நடைபாதை அமைத்துள்ளது. புங்கனூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிலாவூரில் அம்மன் கோயிலும், அதையொட்டி சிறிய பூங்காவும் உள்ளது. ஏலகிரி தாயார் சமேத கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கோயில் உள்ளது. காட்டு வழிப் பயணமாக, மலைப்பாதையில் 8 கி.மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று ஜலகம்பாறை முருகன் கோயிலை அடையலாம்.

பாராகிளைடிங்:

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் புங்கனூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அத்தனாவூரில் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்னதாக பாராகிளைடிங் சாகசங்களை உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து செய்து காட்டுவதும் கண்கொள்ளக் காட்சி. ஏலகிரியில் சுற்றிபார்ப்பதற்கான இடங்களும் குறைவு, இருந்தாலும் மலையேற்ற பயிற்சிக்கு சிறந்த இடம்.

தொலைநோக்கி இல்லம்:

மலைக்கு செல்லும் பாதையில் 14-வது கொண்டை ஊசி வளைவில் தொலைநோக்கி இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறை பராமரிப்பில் உள்ள இந்த இல்லத்தில் நிறுவப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளையும், தொலைவில் அமைந்துள்ள வாணியம்பாடி, திருப்பத்தூர் நகரப் பகுதிகளையும் கண்டுகளிக்க முடியும். இரவு நேரத்தில் மலைப்பாதையில் இருந்து வாகனங்களில் கீழே இறங்குவோர் இப்பகுதிகளில் மின்விளக்குகள் நட்சத்திர கூட்டமாக மின்னுவதைக் கண்டுகளிக்க முடியும்.

தங்கும் வசதி:

ஏலகிரியை சுற்றி 40-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன. தனியார் விடுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.3 ஆயிரம் வரை வசதிக்கேற்ப அறைகள், ரிசார்டுகள் கிடைக்கும்.

சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்யும் வகையில் யாத்ரி நிவாஸ் தங்குமிடமும் உள்ளது. இங்கு 10 பேர் முதல் 20 பேர் வரை குழுவினராக தங்கும் அளவிலும் அறைகள் உள்ளன.

எப்படி செல்வது?:

வேலூர் மாவட்டத்தின் எல்லையான திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் இருந்து நகர பேருந்துகளும் ஒரு மணி நேர இடைவெளியில் இரவு 9 மணி வரை ஏலகிரி மலைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொன்னேரி கூட்டுச் சாலையில் இருந்து ஏலகிரி மலைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருப்பத்தூருக்கு செல்லும் வழியில் பொன்னேரி கூட்டுச் சாலை அமைந்துள்ளது. இச்சாலை திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், வாணியம்பாடியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அத்துடன் மிகப் பழமையான ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இச்சாலை வரை பஸ் வசதி எப்போதும் உண்டு.

English summary
The Yelagiri Hills are located in Tamil Nadu. These hills are spread over an area of 30 square km having an altitude of 3500 feet. It lies between four mountains, at an elevation of 920 m above sea level. These hills lie in the Vellore District of Tamil Nadu, near the Vaniyambadi Tirupattur road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X