For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் நகரத்தார் கூட்டமைப்பின் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

By Siva
Google Oneindia Tamil News

INK committee celebrated Tamil New Year in Dubai
துபாய்: துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 139வது கலந்துரையாடல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம் 20.04.2012 அன்று துபாய் இந்தியா கிளப்-கிறிஸ்டல் லாஞ்சில் சிறப்பாக நடைபெற்றது.

செல்வி.சுபஸ்ரீ மணிகண்டன் மற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் இறைவணக்கம் பாட, அதைதொடர்ந்து சங்கப் பாடலை செல்வன். ஜெய்சுந்தர் முழங்க, செல்வன். உடையப்பன் முருகப்பன் மற்றும் கணேஷ் முருகப்பன் குறளமுதம் வழங்கினார்கள். செல்வன். ராமநாதன் குமரப்பன் மகாகவி பாரதியாரின் "தமிழுக்கும் அமுதென்று பெயர்" பாடலைப் பாடி தொடக்கத்திற்கு மெருகேற்றினார்.

பின்னர் சிறப்பு போட்டியாக பெண்களுக்கு "கை முறுக்கு" சுத்தும் போட்டி நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்கள் நடுவர்களாக இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அதை தொடர்ந்து சங்க செயலாளர் திரு. முத்துராமன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து தலைவர் திரு. ரமேஷ் ராமநாதன் தலைமை உரை ஆற்றினர். இதில் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கிக் கூறினார்.

செல்வி. கண்ணாத்தாள் முத்துராமன் "ஓம் நம சிவாய" என்ற பாடலுக்கும், செல்வி மெய்யம்மை வள்ளியப்பன் "கண்ணன் வரும் வேளை" பாடலுக்கும், செல்வி மீனாக்ஷி முத்துராமன், செல்வி அபிராமி முத்துராமன் “மார்கழி திங்கள் அல்லவா” பாடலுக்கும் நடனம் ஆடினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பன்னூலாசிரியர் ஏம்பல் திரு.தஜம்முல் முகம்மது "நகரத்தாரும் தமிழ்ப்பணியும்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினர். இவர் பேச்சு கருத்தாற்றல் மிக்கதாகவும் நகைச்சுவை உணர்வோடும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 7 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. சிறு குழந்தைகள் மாறுவேடமிட்டுமிக அழகாக பேசி காண்பவர்கள் மனதை கொள்ளை கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நடுவராய் இருந்த கூட்டமைப்பின் அரசவை கவிஞர் கல்லல் திரு. தியாகராஜன் அவர்கள் முடிவுகளை அறிவித்து பின்னர் "நந்தன" ஆண்டை வரவேற்று வாழ்த்துக் கவிதை வாசித்தார்.

மதிய விருந்திற்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சிகள் கலை கட்டியது. செல்வி அபர்ணா ரமேஷ் மற்றும் செல்வி மீனா கண்ணன் இணைந்து சிறுவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தினர். இதில் அனைத்து குழந்தைகளும் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் பொது அறிவு திறனை வெளிபடுத்தினார்கள்.

பல குரல் பேச்சாளர் பிரகாஷ்காந்த் பங்கேற்று பல்வேறு நடிகர்கள் குரலில் பேசி அசத்தினார்.

இக்கூட்டமைப்பின் கனி இதழான "பெட்டகம் - வைர ஓலை - 3" இதழ் வெளியீடு விழா நடைபெற்றது. சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு. காசி விஸ்வநாதன் வெளியிட சிறப்பு விருந்தினர் குழிபிறை முத்தையா ராஜேந்திரன் செட்டியார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நகரத்தார் கூட்டமைப்பு "எமிரேட்ஸ் தமிழ் பள்ளிக்கூடம்" என்ற பெயரில் கலிபோர்னிய தமிழ் அகாடமியுடன் இணைந்து தொடங்கவிருக்கும் தமிழ் பள்ளிக்கூடம் பற்றிய சிறப்பு கண்ணோட்டம் நடைபெற்றது. இதில் முதல்வராக இருக்கும் திரு.நாகப்பன் அவர்கள், இப்பள்ளி தொடங்குவதன் நோக்கத்தையும், செயல்பாடுகளையும் விளக்கிக் கூறி இதற்காக முயற்சி செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து பின்னர் இதன் ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்களை அறிமுகப்படுத்தினார். இப்பள்ளி எந்த ஒரு லாப நோக்கோடு இல்லாமல் நம் குழந்தைகளுக்கு தமிழ் போதிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளது என்பது அனைவரும் வரவேற்க்கத்தக்கது.

இக்கூட்டமைப்பின் முக்கிய நிகழ்வான திருமண மற்றும் கல்வி உதவிக்காக வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பொதுக்குழுவின் பரிந்துரையின்படி அனைத்து விண்ணப்பங்களுக்கும் உதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் துணை செயலாளர் நடராஜபுரம் திரு.ராமநாதன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

English summary
Dubai INK committee celebrated tamil new year on april 20 in a grand manner. Various cultural programmes were held and competitions were conducted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X