For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி நினைவுகள்...

Google Oneindia Tamil News

Tamil cultural exhibition
- முனைவர் மு.இளங்கோவன்

குவைத் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டேன். அன்றைய நாள் முழுவதும் எழுதுவதும், படிப்பதும், ஓய்வுமாகப் பொழுது கழிந்தது (13.12.2012). மாலையில் நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்கள் உணவுடன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார். உண்டபடியே இருவரும் தமிழ் இலக்கியப் போக்கு பற்றி உரையாடினோம். மறுநாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு நண்பர் கிருட்டிணமூர்த்தி விடைபெற்றுக் கொண்டார். காலையில் கண்காட்சி தொடக்கம் என்பதால் இரவில் நன்கு ஓய்வெடுத்தேன்.

14.12.2012 காலையில் ஒரு மகிழ்வுந்தில் கண்காட்சிக் கூடத்திற்குச் சென்றோம். குவைத் வாழும் பொறியாளர்களும், தமிழ் நண்பர்களும் அன்புடன் வரவேற்றனர். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். கண்காட்சி தொடக்கவிழா காலை 10 மணியளவில் அமைந்தது, பொறியாளர் திரு. இராமராஜ் அவர்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்கள்.

கண்காட்சியின் தொடக்கவிழாவில் பொறியாளர் திரு.செந்தமிழ் அரசு அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள். தமிழகத்தில் பொதிகைத் தொலைக்காட்சியில் எங்கள் உள்ளம் இனிக்கும்படி செய்திபடித்த அதே செந்தமிழ் அரசு அவர்களை இருபதாண்டு இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். தோற்றம் மாற்றம்கொண்டு விளங்கினார். அதே இனிமை ததும்பும் தமிழ் ஒலிப்பைக் கேட்டு வியந்தேன். செந்தமிழ் அரசு பொறியாளர் என்று அறிந்ததும் இன்னும் வியப்பு இருமடங்கானது.

பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்களின் தந்தையார் இராமநாதன் செட்டியார் அவர்கள் சென்னைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் எனவும் பரிபாடல் உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதியவர் எனவும் அறிந்தபொழுது ஐயா செந்தமிழ் அரசு அவர்களைச் சந்தித்ததைப் பெருமையாகக் கருதினேன். உடன் பேராசிரியர் இராமநாதன் செட்டியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைத் தந்து உதவும்படி கேட்டேன். இசைவு தந்தார்.

கண்காட்சியைத் திறந்துவைத்த பிறகு மேலோட்டமாக ஒரு பார்வையிட்டேன். தமிழ்நாட்டையே இறக்குமதி செய்தமைபோல் பல்வேறு அரங்குகள் விளங்கின. தஞ்சைக் கோயில், கங்கைகொண்டசோழபுரம், மாமல்லபுரம், இராமேசுவரம், என்று தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்கள் யாவும் படத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தேர், வண்டி, முக்காலி, உலக்கை, உரல், அம்மிக்குழவி, ஆட்டுக்கல் என்று நம் மரபை நினைவூட்டும் பொருட்களைப் பார்த்து மகிழ்ந்தேன். பனைப் பொருட்கள், கோரைப்பொருட்கள் காட்சிக்கு இருந்தன. உணவுப் பொருள்கள், கறிகாய், மலர், மூலிகைப்பொருட்கள், புத்தக அரங்கு என்று அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் பலவகைப் பொருட்கள் காட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. பார்வையிடவும், நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வந்திருந்த பொறியாளர்கள், பல்வேறு நிலைகளில் பணிபுரியும் தோழர்களைக் கண்டு உரையாடி மகிழ்ந்தேன்.

காலை 11 மணிக்கு மேல் மேடை நிகழ்வுங்கள் தொடங்கின. பொங்குதமிழ் மன்றத்தின் தோழர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுக் கண்காட்சியின் நோக்கம் பற்றி உரையாற்றினர். உள்ளூர்ப் பேச்சாளர்கள் பலரும் பலவகைப் பொருளில் பேசினர். நான் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் குறித்து இரண்டு பிரிவாக இரண்டுமணி நேரம் உரை நிகழ்த்தினேன். தமிழக நாட்டுப்புறப்பாடல்களின் தொன்மையை எடுத்துரைத்து நடவுப்பாடல்கள். கும்மிப் பாடல்கள், கோலாட்டப் பாடல்களை நினைவூட்டினேன். அரங்கில் இருந்தவர்கள் அமைதியாக என் உரையைச் செவி மடுத்தனர். பகலுணவு முடிந்தது.

மீண்டும் மாலையில் குவைத் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பேசினர். சிறுவர்களும் பெரியவர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். கண்காட்சிக்கு மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இரவு நண்பர்களிடம் விடைபெற்று, நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களின் மகிழ்வுந்தில் அறைக்குத் திரும்பினேன்.

15.12.2012 காலையில் பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்கள் காலைச்சிற்றுண்டிக்கு அழைப்பு விடுத்தார். நானும் பொறியாளர் இராமன்(திருத்துறைப்பூண்டி) அவர்களும் புறப்பட்டோம். திரு.செந்தமிழ் அரசு அவர்களும் எங்கள் வண்டியைத் தொடர்ந்து வந்தார். எங்கள் வண்டிகள் குவைத்தில் புகழுடன் விளங்கும் சரவணபவன் உணவகத்தில் நின்றன. சரவணபவன் உணவகத்தின் அமைப்பைக் கண்டு வியந்தேன்.

தூய்மைக்கும் சுவைக்குப் பெயர்பெற்ற அந்த நிறுவனம் மேலும் தன் தரத்தைப் பறைசாற்றிகொண்டு அழகிய கடற்கரை ஓரம் நிற்கின்றது. காலைச்சிற்றுண்டியைச் சுவைத்து உண்டோம். தமிழக உணவான இட்டிலி, துவையல், குளம்பியுடன் காலை உணவு முடிந்தது. பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்கள் அந்தக் கடையின் தொடர் வாடிக்கையாளர் என்பதால் கடை ஊழியர்கள் எங்களை மதிப்புடன் நடத்தினர். கடையின் சிறப்பினை அரசு எடுத்துரைத்தார்.

உணவுக்குப் பிறகு நாங்கள் கண்காட்சி அரங்கிற்குச் சென்றோம். பகல் முழுவதும் நண்பர்களுடன் உரையாடுவதில் பொழுது கழிந்தது. அங்கு வந்திருந்த ஒளிப்படக் கலைஞர்கள் என்னைப் பல கோணங்களில் படம் எடுத்து வழங்கினர். கேரளாவிலிருந்து இவர்கள் குவைத்துக்குத் தொழில் நிமித்தம் வந்தவர்கள். இவர்களின் கடமையுணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் கண்டு அனைவரும் பாராட்டினோம். மாலையில் அவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசில் கொடுத்துப் பாராட்டியதில் அவர்கள் மிக மகிழ்ந்தார்கள்.

மாலையில் நிறைவு விழா தொடங்கியது. செந்தமிழ் அரசு அவர்கள் தமிழர் பண்பாடு குறித்து உரையாற்றினார். நான் நிறைவுரையாகச் சிலர் கருத்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்தேன்.

நிறைவாகத் தோழர் தமிழ்நாடன் அவர்கள் நன்றியுரை என்ற அமைப்பில் கண்காட்சி தொடக்கம் முதல் நிறைவு வரை சந்தித்த இடர்களை எடுத்துரைத்து, உதவியர்கள் அனைவருக்கும் முறையாக நன்றி தெரிவித்தார். எனக்கு ஒரு நினைவுப்பரிசு வழங்கினார்கள். இரண்டு மரப்பாச்சி சிலைகளையும் வழங்கினார்கள்.

மரப்பாச்சி மரம் என்று நினைக்காமல் அதனை உயிர் உள்ள குழந்தையாக நினைத்துப்போற்றும் நம் மரபைத் தமிழ்நாடன் நினைவுகூர்ந்து பரிசிலாகக் கொடுத்தமை எனக்கு மகிழ்ச்சி தந்தது. இரண்டு மரப்பாச்சிகளையும் பாதுகாப்பாகத் தமிழகத்திற்குக் கொண்டு செல்வேன். அதுபோல் தமிழகத்திலிருந்து ஒளிப்படங்கள் எடுத்து வழங்கிய புதுவை முருகன், ஓவியர் அன்பழகன், திருமுதுகுன்றம் முனைவர் இரத்தின.புகழேந்தி, ஆசிரியர் சான்போசுகோ உள்ளிட்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கினர். அனைவரிடமும் விடைபெற்றுகொண்டு நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களுடனும் பட்டுக்கோட்டை சத்தியா அவர்களுடனும் இரண்டாம் நாள் இரவு அறைக்குத் திரும்பினேன்.

நன்றி: http://muelangovan.blogspot.in/

English summary
Dr Mu Elangovan ha written his memories at Kuwait Tamil cultural exhibition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X