For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்குனி உத்திரம்: தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த தினம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பூர்: தெய்வீகத் திருமணங்கள் நிகழ்ந்த தினமான பங்குனி உத்திரம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட திருத்தலங்களில் பக்தர்கள் திரளாக குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தெய்வீகத் திருமணங்கள்

தெய்வீகத் திருமணங்கள்

வைகாசி விசாகம், தை பூசம், போல பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில்தான் பார்வதி - பரமேஸ்வரன், முருகப்பெருமான் -தெய்வானை, ஆண்டாள் - ரெங்கமன்னார், சீதை - ராமர், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என பல தெய்வ திருக்கல்யாணங்கள் நடந்திருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவி விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம் பெற்றதும் இந்த நாளே என்பது ஐதீகம். இதேபோல விரதம் இருந்து சரஸ்வதி தேவி பிரம்மாவையும், இந்திராணி இந்திரனையும் அடைந்தார்கள் என்றும் புராண, இதிகாசங்கள் கூறுகின்றன. மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமான் பின்னர் ரதி தேவியின் பிரார்த்தனையை ஏற்று அவனை மீண்டும் உயிர்ப்பித்த தினமும் இதுதான்.

கலியுகத்தை காக்கும் கடவுளாக சபரிமலையில் ஸ்ரீதர்ம சாஸ்தாவாக கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஐயப்பன் அவதரித்ததும் இந்த பங்குனி உத்திர நன்னாளில்தான். ஜென்ம நட்சத்திர நாளில் சபரிமலை உள்பட அனைத்து ஐயப்பன் கோயில்களிலும், ஐயனார் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

வில் வித்தகன் அர்ஜுனன் பிறந்தது, வள்ளி அவதாரம் நடந்தது. ராமன் உள்பட தசரதரின் நான்கு புதல்வர்களின் திருமணம் நடந்தது என இந்த நாளுக்கு மேலும் பல சிறப்புகளும் உள்ளன.

பங்குனி உத்திர நாளில் சிவ ஸ்தலங்கள், முருகனின் அறுபடை வீடுகள், பெருமாள் ஆலயங்கள் என எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், நடைபெறுகின்றன.

பழனியில் பங்குனி உத்திரம்

பழனியில் பங்குனி உத்திரம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறுகிறது. பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் காவடி எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து குளிர்விக்கின்றனர். நேற்றிரவு திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது இன்று மாலை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.

திருச்செந்தூரில் வள்ளி திருமணம்

திருச்செந்தூரில் வள்ளி திருமணம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம் மற்றும் வள்ளியம்மன் தபசு காட்சியும் நடைபெற்றது.

இன்று இரவு 10 மணிக்கு மகாதேவர் சன்னதி முன்பு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம்

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாணத்தை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில் இன்று தீர்த்தவாரியும், இரவில் தபசுக்காட்சியும், நாளை வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. மார்ச் 28ல் தந்த பல்லக்கில் பட்டின பிரவேசமும், விழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

வடபழனியில் தெப்பத் திருவிழா

வடபழனியில் தெப்பத் திருவிழா

பங்குனி உத்திர விழாவை ஒட்டி அறுபடை வீடுகளிலும் சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறுவதால் பக்தர்கள் அனைத்து கோவில்களிலும் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திரவிழாவை ஒட்டி தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

English summary
Panguni Uthiram was celebrated with fervour at various Murugan temples in all over Tamil Nadu. “Kavadis” were adorned with flowers and peacock feathers. Some devotees pierced their back with hooks to pull small chariots, carrying idols of Lord Muruga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X