• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூரியனுக்கு நன்றி சொல்லும் தைத்திருநாள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இப்பூவுலகில் சூரியன்தான் முதல் கடவுள். விவசாயத்திற்கு பெரிதும் உதவிபுரிவது சூரியன். சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

சூரியன் என்றால் இயக்குபவன் என்பது பொருள். சூரியனால்தான் ஒளியும் வெப்பமும் தோன்றுகின்றன. உலக உயிர்கள் அனைத்தையும் வாழ வைப்பவன் சூரியன். ஆதி மக்கள் சூரியனைத்தான் கடவுளாக கையெடுத்து வணங்கியிருக்கின்றனர்.

விவசாயிகள் மட்டுமல்லாமல் உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் அடிப்படை சூரியன்தான். சூரியனே இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. இதனால் தைப்பொங்கல் தினத்தன்று வாசலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கின்றனர்.

இதிகாசங்களில் சூரியன்

இதிகாசங்களில் சூரியன்

பண்டைய காலத்தில் சூரிய வழிபாடு பல நாடுகளில் காணப்பட்டன. ரோமாபுரியில் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி சூரியனின் பிறந்த நாளாகக் கொண்டாடப்பட்டது. செளரம் சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயமாகும். புராணங்களிலும் இதிகாசங்களிலும் சூரியனைப் பற்றி பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. குந்திதேவியின் முதற் கணவன் சூரியன் என்று மகாபாரதம் குறிப்பிடுகின்றது.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்

ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்

சூரிய பகவான், ஏழு குதிரைகள் பூட்டிய ஒன்றைச் சக்கரத் தேரில் பயணிக்கும் உருவமுடையவனாக பட்டினப்பாலை நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளான். ஏழு குதிரைகள் ஏழு நாட்களைக் குறிக்கும். இந்த நாட்களை இயக்குபவன் சூரியன்.

நடுநாயகமான இறைவன்

நடுநாயகமான இறைவன்

ஞாயிறு என்ற சொல்லில் ஞா என்றால் நடுவில் தொங்கிகொண்டு என்பது பொருள். யிறு என்றால் இறுகப் பற்றிக் கொண்டுள்ள கிரகங்கள் என்று பொருள். எனவே நடு நாயகமாக விளங்கும் சூரியன் மற்றைய கிரகங்களைப்பற்றிக் கொண்டுள்ளது. சூரியனின் இயக்கத்தில்தான் உலகம் இயங்குகிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்த பெயர் அமைந்துள்ளது.

கால தேவன் சூரியன்

கால தேவன் சூரியன்

கால தேவனும் சூரியனே. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிப்பதற்கு இடைப்பட்ட காலம் ஒரு நாள் எனப்படுகின்றது. ஒரு நாள் சென்றால் நமது ஆயுளில் ஒரு நாள் கழிந்து விடுகின்றது. அதனால்தான்

நாள் என ஒன்று போல் காட்டி உயி்ர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின். என்றார் வள்ளுவர்.

எண்ணற்ற பெயர்கள் சூரியனுக்கு

எண்ணற்ற பெயர்கள் சூரியனுக்கு

சூரியனுக்கு ஞாயிறு என்ற பெயரைத் தவிர கதிரவன், ஆதவன், செங்கதிரோன், கதிர்செல்வன் உள்ளிட்ட பல பெயர்கள் இருக்கின்றன. கோவலன் கொலையுண்ட போது கண்ணகி சூரியனைப் பார்த்து தாய்கறிச் செல்வனே! கள்வனோ என் கணவன் எனக் கேட்டதாக சிலப்பதிகாரம் கூறுகின்றது.

நன்றி தெரிவிக்கும் நாள்

நன்றி தெரிவிக்கும் நாள்

பொங்கல் திருநாள் முழுக்க முழுக்க நன்றிப் பெருக்கின் வெளிப்பாடாகும். மழைக்குரிய தெய்வமாக இந்திரனை புராணங்கள் வர்ணிக்கின்றன. எனவே செய் தொழிலுக்கு மழை அவசியமாகையால் இந்திரனுக்கு விழா எடுத்தனர். இந்திர விழாவே பொங்கல் பண்டிகையின் தொடக்க விழா என புராணங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு முந்திய நாளில் நடைபெறும் போலிப் பண்டிகை இந்திர விழாவையே குறிக்கின்றது. தை முதல்நாள் சூரிய உதயத்தின் போது வாசலில் விளைந்த முதல் அரிசியை பொங்கிப் படைத்து சூரியனை வணங்கி தன் நன்றிப் பெருக்கை வெளிப்படுத்தினான் உழவன். இதுவே தைத்திருநாளாக போற்றப்படுகிறது.

புதுப்பானை புத்தரிசி

புதுப்பானை புத்தரிசி

தை முதல்நாள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலமிட்டு அதில் விளக்கேற்றி வைப்பார்கள். பின்னர் அடுப்பு மூட்டி புதுப்பானையில் மஞ்சள் கட்டி புத்தரியில் வெள்ளம், பால் சேர்த்து பொங்கல் வைப்பார்கள். தேங்காய், பழம், கரும்பு, உள்ளிட்டவைகளை படைத்து வாழை இலையில் சமைத்த பொங்கல் சிறிதளவு படைத்து சூரியனை வணங்குவார்கள். சூரியன் முழுமுதற் கடவுள் என்பதாலேயே நன்றி தெரிவிக்கும் விதமாக தைத்திருநாளினைக் கொண்டாடுகின்றனர்.

English summary
Surya Pongal is the second day of four-day Pongal festival in Tamil Nadu. As the name suggests, the festival is dedicated to Surya or Sun God. he Sun God is offered boiled milk and jaggery. The Sun God is given pride of place during Pongal. In the villages, people gather in the courtyard and prepare the Pongal in the open. The pot in which the Pongal is cooked is decorated with flowers, sugarcane pieces, turmeric plant etc. The first offering is made to the Sun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X