For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகாகோவில் பிரம்மாண்டமாய் அரங்கேறிய 'பொன்னியின் செல்வன்'

By Chakra
Google Oneindia Tamil News

தமிழர் சமுதாய வரலாற்றில் 200 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிலையான சாம்ராஜ்யத்தை நிறுவி, கோலோச்சிய பெருமைக்கு உரியது சோழர்குலத்தின் சரித்திரம். அந்த சாம்ராஜ்யத்தின் ஒரு முக்கியமான காலகட்டம், அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" என்ற நாடக வடிவில் மிகப் பிரம்மாண்டமாக சிகாகோவில் அரங்கேறியது.

1000க்கு மேலாகத் திரண்டிருந்த ரசிகர் கூட்டத்தில் இந்த நாடகம் காண வேண்டி மிச்சிகன், நியூ ஜெர்சி, மில்வாக்கீ என்று மற்ற வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் இருந்தனர்.

சிகாகோ தமிழ்ச் சங்கம் பெரும் பொருட் செலவில் தயாரித்த இந்த படைப்பு 2013 மே மாதம் நான்காம் தேதி ஆஸ்வீகோ கிழக்கு உயர்நிலைப் பள்ளியின் (Oswego East High School, Oswego, Illinois) நவீன கலையரங்கில் கர்நாடக இசைக் கலைஞர் பத்மஸ்ரீ திருமதி. சுதா ரகுநாதன் அவர்களின் தலைமையில்அரங்கேறி, காண்பதற்கரிய கலை விருந்தாய் அமைந்தது. கல்கி அவர்கள் இயற்றிய "காற்றினிலே வரும் கீதம்" என்ற கீர்த்தனையை தன் சுய அர்ப்பணம் என்று அவர் பாடி, நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தது மிகப் பொருத்தமாக இருந்தது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கின்ற புதினம் தமிழன்னைக்கு கிடைத்த ஓர் அரிய காணிக்கை. எத்தனையோ பெரிய காப்பியக் கருவூலங்கள் தமிழில் இருந்த போதிலும், காலங்கள் கடந்தும் இன்னும் அனைத்துத் தரப்பட்ட தமிழர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஓர் அதிசய படைப்பு!. "பொன்னியின் செல்வனை" ப்பற்றி கேள்விப்படாதவர்கள் மிகக்குறைவு.

ஆனால், முழுக்கதையையும் படித்தவர்கள் சற்று குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நீண்ட, நெடிய சரித்திரத் தொடரை திருமதி பாகீரதி சேஷப்பன் (அபிராமி பைன் ஆர்ட்ஸ்) அவர்கள் மூன்றரை மணி நேர நாடகமாகச் சுருக்கி, உட்கருத்தைச் சிறிதும் சிதைக்காமல், எல்லோருக்கும் புரியும்படியாக, காட்சியமைப்புகளைச் சிறந்த கலை நுணுக்கத்துடன் திறம்பட வடிவமைத்து, இயக்கிய அற்புதத்தை அனைவரும் பாராட்டியேத் தீர வேண்டும்.

கண்டிப்பாகப் பெருமை படக்கூடிய ஒரு சாதனைதான்!. அவையோரை வரவேற்றுப் பேசிய சங்கத் தலைவர் அறவாழி இது ஒரு மகா சம்பவம் என்றும், ஒரு உன்னத நாள் என்றும், நாடகப் படைப்பாக்கத்தின் பின்னணியில் நடந்த பெரும் முயற்சிகளை குறிப்பிட்டு இந்த முழு நீள சரித்திர நாடகத்திறகான முன்னேற்பாடுகள் எப்படி சென்ற ஆண்டு மே மாதம் துவங்கி, நடிகர்கள் தேர்வு பாகீரதி அவர்கள் தலைமையில் செப்டம்பர் மாதம் நடந்து, வாரம் ஒரு முறை என்று நவம்பரில் ஆரம்பித்த ஒத்திகை மற்றும் பயிற்சி அமர்வுகள் எண்ணிக்கையில் 25-யைக் கடந்து இன்று நல்ல ஒரு படைப்பை அளிக்கின்றோம் என்ற பெருமிதமும், மன நிறைவும் தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

அடுத்துப் பேசிய துணைத் தலைவர் சோமு, "சிகாகோ தமிழ்ச் சங்க வரலாற்றில் மே 4 ஒரு மைல் கல். கல்கியின் இந்த அற்புதமான படைப்பினை நாடக உருவில் வழங்க எங்களுக்கு அருள் புரிந்த தமிழ்த் தாயை தலை வணங்குகிறோம். இந்த நாடகம் வெற்றியடைய வாழ்த்துக்கள் அனுப்பிய டாக்டர் அப்துல் கலாம், செரிடியன், சக்திபெருமாள், கல்கி இராஜேந்திரன், டாக்டர் அப்துல் காதர், பட்டிமன்றம் ராஜா, திரைப்பட ஆலோசகர் வெங்கட், டெல்லி கணேஷ், பிரதாப் போத்தன் அவர்களுக்கும் பொருளதவி செய்த அனைத்து தொழில் அமைப்புகளுக்கும், நன்றி கூற சிகாகோ தமிழ்ச் சங்கம் கடமைப்பட்டுள்ளது" என்று கூறினார்.

முழுதும் சிகாகோவாழ் கலைஞர்களைக் கொண்டு மேடையேறி, இடைவேளையே இல்லாமல் மூன்றரை மணிக்கும் மேலாக நடந்த இந்த நாடகத்தைக் கண்ட பெரும்பாலானோர் ‘நேரம் போனதே தெரியவில்லை' என்றுதான் சொன்னார்கள். உன்னிப்பான கவனத்துடன் பார்த்து ரசித்த சபையோர் பாராட்டுக்குரிய இடங்களில் கைதட்டி நடிகர்களை ஊக்குவித்தனர், கரகோஷத்தில் சிறப்பிடம் பெற்ற காட்சிகளில் சில: கட்டியங்கூறல், கடற்கரையில் பார்த்திபேந்திரன் நந்தினியை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டி விடும் அழைப்பு, ஆத்திதனின் மரணம், சக்ரவர்த்தியின் வேண்டுதல்படி பூங்குழலி பாடுவது, எரியும் கப்பலிலிருந்து குதிக்கும் வந்தியத்தேவன், மந்தாகினி மடியும் இடம், அன்ன வடிவில் வரும் படகு, பெரிய பழுவேட்டரையர் காயம் படும் காட்சி!

கலிபோர்னியா ஸ்ரீதர் மைனர் உருவாக்கிய இசைக்கோர்ப்புகள் சரியான அளவில் காட்சிகள் ஊடே, பின்னிப் பிணைந்து நடிப்புக்கும், கதை நிகழ்வுக்கும் தேவையான உணர்ச்சிப் பின்பலம் தந்தன.

கதையோட்டத்திற்கு இணங்கிய காட்சி அமைப்புகள் வெகுவாகப் பாராட்டும்படி இருந்தன.

இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட பின் திரைகளும், அரங்க பரிமாணங்களையே ஆட்கொள்ளும்படியான பெரிய படகுகள், தீப்பிழம்பாய் வெந்தெரியும் கப்பல், ராஜ பல்லக்கு, கோட்டை மதில் சுவர், அடர்ந்த காட்டு வெளி, வேட்டை மண்டபம் என்று காட்சிக்குக் காட்சி புதுமைகள் தோன்றி, இவற்றை சிறிதும் எதிர்பாராத அவையோரைத் திணறச் செய்தன என்றால் மிகையாகாது.

Set Properties and Special effects அனைத்தும் பங்கு பெற்ற கலைஞர்களாலும், தொண்டுள்ளத்தினர்களாலும் (ரவிகுமார், பிரசாத், பாலா,கணபதி, ஸ்ரீராம், வர்தீஷ், தர்ஷனா, முத்து வேலு) செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு சரித்திர நாடகத்திற்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் கடின உழைப்பின் மூலம் பெற்று, எல்லா நடிகர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்தனர். கல்கி அவர்களின் வரிகளிலும், மணியம் செல்வன் சித்திரங்களிலும் உலா வந்த சோழ சாம்ராஜ்யத்தின் பாத்திரங்களுக்கு உயிர் வடிவம் கொடுத்தவர்கள்: சேகர் (பெரிய பழுவேட்டரையர்), அரவிந்த் (சேந்தன் அமுதன்), சரண்யா (வானதி), மணிகண்டன் (வந்தியத் தேவன்), ஸ்ரீராம் (ஆழ்வார்க்கடியான் நம்பி), நிவேதா (பூங்குழலி),

ரங்கா (அருள்மொழி வர்மர்), ஆனந்தன் (அநிருத்த பிரம்மராயர்), சுதா (ராக்காயி), முத்துவேலு (ரவிதாசன்), பிரேமானந்த் (கந்தமாறன்), சந்திரா (புத்த பிக்க்ஷு), பூமா (செம்பியன் மாதேவி), ரவிக்குமார் (பார்த்திபேந்திர பல்லவன்), வித்யா (குந்தவை), வரதீஷ் ( வீரன்-1), ராஜ் (குடந்தை ஜோதிடர்), லக்ஷ்மி (மணிமேகலை), கமலா பாபு (நந்தினியின் தோழி), ஷோபா சுரேஷ் (மந்தாகினி), தேவி (நந்தினி),

அருள் (முருகையன்), சுமேஷ் (பாண்டிய இளவல்), கல்யாண் குமார் (சுந்தரச்சோழர்), சபரி (மதுராந்தகர்), மகேந்திரன் (இடும்பன் காரி), ரமேஷ் (ஆதித்த கரிகாலன்), நம்பி (சோமன் சாம்பவன்), சக்திவேல் (சம்புவரையர்), சுதர்ஷன் (பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி), இந்திரராஜ் (மலையமான்), ஸ்ரீராமன்( வீரன்-2), ராம் (சின்ன பழுவேட்டரையர்), காந்திமதி (சம்புவரையர் துணைவி), வசுமதி (சந்திரமதி), முற்றும் தீபா (வானவன் மாதேவி).

கடம்பூரில் வந்தியத்தேவேன் பார்த்துக் களிப்புறும் குரவைக் கூத்தை நாடகத்தில் இழைத்துச் சேர்த்த பதாஞ்சலி நாட்டியக் குழு மாணவியரின் நடனமும் ரசிக்கும்படி இருந்தது..

நாடகத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், நாடகம் எங்கும் உணர்வுகளுக்குப் பொருந்திய ஒளி அமைப்பு.

கிருஷ்ணகுமார், கார்த்திக், பழனி ஆகியோரது கடும் உழைப்பில் எடுத்து சொல்லக் கூடியவை: குந்தவை- வந்தியத்தேவன் படகில் இருக்கும் காதல் காட்சி, அரண்மனை உட்புறத்தில் மந்தாகினி நினைவில் சுந்தரச் சோழர் பயமுறும் இரவுக் காட்சி. இது போக பார்ப்போருக்கு தமிழில் ஒரு OPERA பார்ப்பது போன்ற பிரமையை உண்டு பண்ணும் விதத்தில் துல்லியாமான ஒருங்கிணைப்பு, அதி வேகமான காட்சி மாற்றங்கள் என்று அரங்க நிர்வாகத்தை ஒரு பெரிய குழுவுடன் நிர்வகித்த கணபதி மற்றும் ரவிக்குமார் ஆகியோரது திட்டமமைப்பும், நிர்வாகமும் பெரும் பாராட்டுக்குரியது.

கமலா பாபு, கலை சோமு, ஷோபா சுரேஷ் அடங்கிய உடை வடிவமைப்புக் குழுவின் செயல் திறன் பாத்திரங்கள், மற்றும் சம்பவ நிகழ்வுகளுக்கு ஏற்ப இருந்த உடை அலங்காரங்களிலும், அணிகலங்களிலும், ஒப்பனையிலும் நல்ல வண்ணம் தெரிந்தது.

பாத்திரங்களுக்கும், காட்சிக்கும் ஏற்ற உப பொருட்களைத் (small set properties) தேர்வு செய்து, தயாரித்து காட்சியோட்டத்திற்கேற்ப நிர்வகித்தவர்கள், ரம்யா மணியும், கமலா பாபுவும்

காட்சி தோறும், வசனங்கள் நிரம்பி வழியும் ஒரு நீண்ட சரித்திர நாடகத்திற்கு ஒலி வடிவம் தருவது ஒரு சவாலான காரியம். புதிய, நவீன கலையரங்கின் ஒலி அமைப்புகளை முழுமையாய் பயன்படுத்தி ஒலியால் நாடகத்திற்கு பக்கபலம் சேர்க்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருப்பவர், சீனி குருசாமி.

நாடக உருவாக்கத்தில் மற்ற துறைகளில் பங்களித்தவர்கள்: ராஜி அறவாழி (பயிற்சி அமர்வுகள் திட்டமிடல், விருந்தோம்பல்) சந்திரக்குமார் (செய்தி தொடர்பு, மேற்பார்வை), சங்கீத் (இணைய தளம்), கார்த்திக் (விளம்பரப் படங்கள்) மற்றும் ஆனந்தன் (ஊடக வழி செய்தி விளம்பரம்) நாடகம் நிறைவேறியதும் அறவாழி அவர்கள் இந்த நாடகத்தின் வந்தியத்தேவன் என்ற கடினமானப் பாத்திரத்தை ஏற்று நடித்ததோடல்லாமல், கடந்த ஆறு மாதங்களாக நடந்த பயிற்சி அமர்வுகளின் நிர்வாகத்தையும் முன் நின்று செய்த மணிகண்டனைப் பாராட்டி அறிமுகம் செய்து, மணியின் அயராத உழைப்பும், கலைக்கான அர்ப்பண போதமும் நாடகத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று சொன்னார்.

அதன்பின், மணிகண்டன் பெருந்திரளாய் வந்திருந்த அவையோருக்கும், முழு ஒத்துழைபைக் கொடுத்த சக நடிகர்களுக்கும் நன்றி கூறி, மேடையின் முன்னும், பின்னும் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

சிகாகோ தமிழ்ச் சங்கம் இது வரை கண்டிராத அளவில் திரண்டு வந்திருந்த கூட்டமே இந்த படைப்புக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்கு சாட்சி! வந்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ஆவலையும் இந்த நாடகம் முழுமையாகப் பூர்த்தி செய்திருந்தது என்பதை இறுதியில் அரங்கெங்கும் உயர்ந்தெழுந்த கரவொலிகள் நிரூபித்தன.

இந்த நாடக அரங்கேற்றம் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் மட்டும் அல்லாது தமிழர் சார்ந்த சமூக நிகழ்வுகளின் சரித்திரத்திலும் ஒரு சாதனையாகவே இனி வரும் காலங்களில் கருதப்படும். கூடவே, இந்த பெரும் சாதனைக்கு ஆதார சுருதியாய் இடைவிடாது அரும்பாடு பட்ட அறவாழி, சோமு, மணிகண்டன் மற்றும் ஷோபா சுரேஷ் ஆகியோருக்கும், சிகாகோதமிழ்ச் சங்கத்திற்கும்தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றி பாராட்டும்.

செய்தி: ரமிதா சந்திரன் (சிகாகோ), காந்தி நாதன் (சிகாகோ)

www.chicagotamilsangam.org

English summary
Legendary novelist Kalki's Ponniyin Selvan was staged as a drama in Oswego East High School, Oswego, Illinois. This mega play was conducted by Chicago Tamil Sangam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X