For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கத் தமிழின் சுவை.. தைவானில் மணக்க மணக்க நடந்த தமிழ் விருந்து!

Google Oneindia Tamil News

தைபே: தைவான் தமிழ்ச்சங்கத்தினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் ஏழாம் அமர்வு தைபே (Taipei) நகரில் உள்ள தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (National Taiwan University of Science and Technology) சிறப்பாக நடைபெற்றது. முனைவர். மு.திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.

முதலாவதாக 'சங்கச் சுவை' என்ற தலைப்பில் பட்டிமன்றம் புகழ் பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் காணொளி வழியாக நேரிடையாக சிறப்புரையாற்றினார். அவர் தன்னுடைய உரையின் தொடக்கமாக தைவான் தமிழ்சங்கத்திற்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறினார். சங்க இலக்கியம் பற்றி பேசுகையில் நியூட்டனின் கூற்றான 'அறிவியல் எனும் கடற்கரையில் கிளிஞ்சல்கள் பொறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் நான்' என்பது போல சங்க இலக்கியம் எனும் கடற்கரையில் தனக்கும் அதே உணர்வே உள்ளதாக கூறினர்.

அவர் தம் உரையில் அகநானுறு புறநானூறு பற்றி கூறுகையில் இரண்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட நானூறு பாடல்களை கொண்டது. இந்த நானூறு பாடல்கள் மட்டும் அல்லாமல் மேலும் ஆயிரக்கணக்கில் பாடல்கள் இருந்திருக்கக்கூடும், அவைகள் நமக்கு இப்பொழுது கிடைக்காமலே போய்விட்டது. சங்க காலப் பாடல்களை முதலில் படிக்கும் போது புரியாது, ஆனால் படிக்கப் படிக்க பிடிக்க ஆரம்பித்துவிடும் என்றார். சங்க இலக்கியத்தின் சிறப்பம்சம் என்னவெனில் மற்ற கவிகளான சேக்கிழார், கம்பன், வள்ளுவன் ஏன் இக்கால கவிஞர்களான பாரதி முதற்கொண்டு வாலி வரை அதில் எந்த ஒரு பொருளையும் அதிகமாய் வருணிப்பது இல்லை. மிக எளிமையாக, மென்மையாக குறிப்பிடுவர்.

இயற்கையான, இதமான, மென்மையான

இயற்கையான, இதமான, மென்மையான

சங்க இலக்கியங்களை வாசிக்கையில் புதிதாய் பிறந்த குழந்தையை தொடுதல் போல இயற்கையான, இதமான, மென்மையான உணர்வைக் கொடுக்கும். வாழ்க்கையை அதன் எல்லா எளிமையோடும் விரிவுபடுத்தி மிக நுட்பமாய் சொல்லக்கூடியது சங்க நூல்கள். ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக நற்றிணையில் வரும் ''நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று ஓவத்து அன்ன" என தொடங்கும் பாடலில் தலைவன் தலைவியைக் காண வரும் காட்சியானது, இரு பாதம் கொண்ட யானை வீராவேசமாய் மரங்களை முறித்துக் கொண்டு ஒரு வெறியோடு வருவது போல இருப்பதாகவும் அவனைக் காண தலைவி தொலைந்த தங்க ஆபரணத்தை கண்டெடுத்த பெரும் மகிழ்ச்சியில் ஓடுவது போல ஓடோடி சென்று அவன் மார்பில் வீழ்ந்து கட்டிக்கொள்வாயாக என அவளின் தோழி சொல்வது போல அமைந்திருக்கும். இப்பாடல் ஒரு தலைவியின் காதலை மிக அழகாக விரிவாக இயற்கையோடு ஒன்றிணைந்து சொல்கிறது, இதுதான் சங்கக்கப்பாடல்களின் தனிச்சிறப்பு, கவிதையை வைத்து வாழ்க்கையை புரிதல் ஆகாது, ஆனால் வாழ்க்கையை வைத்து கவிதையை புரிந்து கொள்ளல் ஆகும் என்பதற்கு மேற்கண்ட பாடல் ஓர் எடுத்துக்காட்டு ஆகும். மேலும் தனக்கு பிடித்த சங்கப்பாடல்கள் என்ற வரிசையில் பல நற்றினை பாடல்களை கூறி அதனை தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி சிறப்புரையாற்றினார்.

கங்கை கொண்ட சோழன் - இந்திரா பாண்டியன்

கங்கை கொண்ட சோழன் - இந்திரா பாண்டியன்

இரண்டாவதாக திருமதி. இந்திரா பாண்டியன் அவர்கள் "கங்கை கொண்ட சோழன்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தம் உரையில் பண்டைய தமிழகத்தை சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும், பெரும் நிலப்பரப்பை, நீண்ட காலமாக பெரும் புகழோடு ஆட்சி செய்தவர்கள் சோழர்களே ஆவர். சோழர்களில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் புதல்வன் ராஜேந்திர சோழனின் ஆட்சியே பொற்கால ஆட்சி என்றும், சோழ மன்னர்களிலே அவனுக்கு ஒப்பாரும், மிக்காரும் எவருமிலர் என்றும் பல வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளதை படித்தபோது தனக்கு, ராஜேந்திர சோழனை பற்றி மேலும் படிக்கும் ஆர்வத்தினை தூண்டியதாக குறிப்பிட்டார். சோழர்கள் வரலாற்றில் மற்ற சோழர்களை விட ஆயிரம் மடங்கு புகழ் மற்றும், வீரத்தோடு ஆண்ட ராஜராஜ சோழனை தாண்டி எவ்வாறு ராஜேந்திர சோழனால் பெரும் பெயர் ஈட்ட முடிந்தது என்றும் விளக்கங்களோடு எடுத்துரைத்தார். இதற்கு சான்றாக, கல்வெட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள இளவரசனாக இருந்தபோது ராஜேந்திர சோழனின் கன்னி போரினை பற்றிய செய்தியை கூறினார்.

தூதுவனை சிறை மீட்ட வரலாறு

தூதுவனை சிறை மீட்ட வரலாறு

இந்த போரானது சோழ தூதுவனை சேர மன்னனனின் சிறையில் இருந்து மீட்கும் பொருட்டு, போரில் எதிரி நாட்டு 18 தளபதிகளின் தலை கொய்து தூதுவனை சிறைமீட்டதை மிகவும் அழகாக எடுத்துரைத்தார். ராஜேந்திர சோழனின் பிரமாண்டமான கப்பற்படையில் சுமார் நானூறு கப்பல்கள் இருந்ததாகவும், அவற்றை பல்வேறு பிரிவுகளாக 'கலம், 'கண்ணி', 'ஜாதனம்', 'மண்டலம்' என்று இருந்ததாகவும், ஒவ்வொரு பிரிவும் தனிப்பட்ட பொறுப்புகளுடன் செயல்பட்டதாகவும், அப்படிப்பட்ட பிரமாண்டமான கப்பற்படைகளைக் கொண்டே இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, கடாரம், ஜாவா, சுமத்திரா ஆகிய நாடுகளை ராஜேந்திர சோழன் பிடித்ததாக எடுத்துரைத்தார். தன்னுடைய சிறப்புரைக்கு தேவையான தகவல்களை எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் "கங்கைகொண்ட சோழன்" புத்தகத்தில் இருந்தும் எடுத்தாண்டதாக குறிப்பிட்டார்.

பெண்ணியம் - முனைவர் சே. கல்பனா

பெண்ணியம் - முனைவர் சே. கல்பனா

மூன்றாவதாக முனைவர். சே. கல்பனா அவர்கள் "பெண்ணியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அமெரிக்க எழுத்தாளர் சார்லெட் பஞ்ச் என்பவருடைய பெண்ணியம் பற்றிய கருத்தை மேற்கோள் காட்டி தன்னுடைய உரையை அவர் ஆரம்பித்தார். பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமையை பெற்றுத்தருவது மட்டுமல்ல, இந்த சமுதாயத்தையே மாற்றி அமைப்பது ஆகும் என்றார். பெண்ணியம் என்பதே ஆங்கிலத்தில் "Feminism" என்று அழைக்கப்படுகிறது. "Feminism" என்னும் ஆங்கிலச் சொல் Femina எனும் இலத்தீன் மொழியிலிருந்து உருவானது. இதன் பொருள் பெண்மைக்குரிய இயல்புகளை உடையவள் என்பதாகும். இச்சொல் தமிழில் பெண்ணியம், பெண்ணிலைவாதம், பெண் நிலை ஏற்பு, மகளிரியல், பெண் நலக்கொள்கை ஆகிய சொற்களால் அழைக்கப்பட்டு வருகிறது. பெண்ணியம் என்ற சொல் நடப்பில் நிலைபெற்று விட்டது என்பதாலும், கருத்துக் குழப்பத்திற்கு இடம் தராமல் தெளிவாக உள்ளதாலும் பெமினிசம் என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழ் இணைச் சொல்லாக இது வழங்கப்பட்டு வருகிறது.

பெண்களை சிறுமைப்படுத்தும் கட்டமைப்புகள்

பெண்களை சிறுமைப்படுத்தும் கட்டமைப்புகள்

பெண்ணியம் என்பது பெண்களை சிறுமைபடுத்தும் சமூக கட்டமைப்புக்கள், அரசியல், பொருளாதார நடைமுறைகள் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியமானது பல்வேறு குறிக்கோள்களை உள்ளடக்கியதாக உள்ளது. அவையாவன: 1. அணைத்துப் பெண்களுக்கும் சம உரிமை; 2. ஆண், பெண் இருபாலரும் சமத்துவ உரிமைகளை ஒருங்கிணைந்து நிலைநாட்டுதல்.; 3. பெண் உரிமை மற்றும் உரிமைக்காக போராடுதல்; 5. பெண்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்; 6. பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தை நிலைநாட்டுதல்; 7. பெண்களின் மீதான அனைத்துவகை ஒடுக்குமுறைகளையும் ஆராய்ந்து களைதல் போன்றவையாகும். பெண்ணியம் பற்றி மகாகவி பாரதியார், திருவள்ளுவர், சுவாமி விவேகாந்தர் ஆகியோர்களின் கருத்துக்களை நயம்பட எடுத்துரைத்தார். கல்வி பெண்களை சென்றடைந்தால் அவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை தாங்களாகவே தீர்மாணித்துக்கொள்வார்கள் என்றும் சிறப்புரையாற்றினார்.

பூம்புகார் ஒரு வரலாற்று ஆய்வு - கோகிலா ரமேஷ்

பூம்புகார் ஒரு வரலாற்று ஆய்வு - கோகிலா ரமேஷ்

நான்காவதாக திருமதி. கோகிலா ரமேஷ் அவர்கள் "பூம்புகார் ஒரு வரலாற்று ஆய்வு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். இங்கிலாந்தை சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹங்கூக் என்பவர் பூம்புகாரில் நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சியை பற்றிய கட்டுரையை விளக்கி எடுத்துக்கூறினார். அந்த ஆய்வறிக்கையில் கடல் கொண்ட பூம்புகார் நகரமானது நாகரீக வளர்ச்சி அடைந்த காலத்தை சேர்ந்ததாகவும், மேலும் பூம்புகார் கடற்கரையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் 75 அடி கடல் ஆழத்தில் பூம்புகாரின் எச்சங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது பற்றிய தகவல்களை விவரித்து, இந்த ஆய்வானது நிதி நெருக்கடியால் தடை பட்டது பற்றியும் எடுத்துரைத்தார். ஐரோப்பாவில் அட்லாண்டா என்கின்ற நகரம் கடலுக்குள் மூழ்கியது, தற்பொழுதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் பூம்புகார் பற்றிய ஆழ்கடல் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் பண்டைய தமிழரின் நாகரீகம், வாழ்க்கை சிறப்பு மட்டுமின்றி அவர்கள் பெருமையும் கடல் கடந்து பரவும். பூம்புகார் நகரத்து புகழும் பெருமையும் யாராலும் மூழ்கடிக்க முடியாது. செந்தமிழ் வித்தகர் இளங்கோவடிகள் ஏற்றிய சிலப்பதிகாரம் இருக்கும் வரையில் பூம்புகாரின் புகழும், மதுரையின் மான்பும், வஞ்சியின் வீரமும், பொதுவாக பழந்த்தமிழரின் செழிப்பும், சிறப்பும் தாளாது தாளாது என்று கூறினார்.

புதுமுக மாணவர்கள் வரவேற்பு

புதுமுக மாணவர்கள் வரவேற்பு

முன்னதாக நடைபெற்ற தைவானுக்கு படிக்க வருகை தந்துள்ள இந்த ஆண்டிற்கான புதுமுக மாணவர்களை தைவான் நாட்டிற்கு வரவேற்கும் விதமாக ஒருங்கினைக்கப்பட்ட நிகழ்ச்சியில் இந்தியா-தைபே கூட்டமைப்பின் உதவி இயக்குனர் திரு. ரிஷிகேஷ் அவர்கள் கலந்துகொண்டு, புதுமுக மாணவர்களை வரவேற்று பேசினார். தமிழ் அமர்வு மற்றும் வரவேற்பு நிகழ்வுகளில் தமிழ் ஆர்வளர்களும், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ்ச்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

English summary
7th Tamil literary session was held in Taipei, conducted by Taiwan Tamil Sangam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X