For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓர் நதியின் குமுறல்..!

Google Oneindia Tamil News

- சாந்தி பழனிசாமி

ஒரு தாயின் கருவறையைப் போல என்னுள் பிறந்து என்னுள் வளர்ந்து துள்ளி விளையாடி எனக்கு பொழுது போக்காய் இருந்த என் மீன் குஞ்சுகள் எங்கே?
என் மீது சூரிய ஒளி படாமல் எனக்கு குடை பிடித்து பாதுகாத்து எனக்கு மேலும் அழகு சேர்த்த ஆகாயதாமரைச் செடிகள் எங்கே?
கோடைகாலம் என்றாலே வெட்கை தீர்ப்பதற்காக என்னுள் வந்து நீந்தி குதூகளித்த உன் பிள்ளைகள் எங்கே?
ஆடி மாதம் என்றால் நான் ஆடிப்பாடும் அழகைக் காண ஆயிரக்கணக்கனோர் வருவார்களே!
ஆடிப்பெருக்கு நாளன்று என்னுள் நல்லெண்ணெய் மணம் வீச
திருவிழா போல் கோலாகலமாய் எனக்கு பொங்களிட்டு என்னை மண்டியிட்டு வழிபட்ட உன் இனம் எங்கே?

A Rivers tears

"ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்களே", நான் இல்லாமல் உன் இனம் விவசாயத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறது?.
மானிடா ! நீ எங்கோ என்னை தொலைத்துவிட்டாய் என்று மட்டும் எனக்கு நன்றாகத் தெரிகிறது.

நான் எங்கு சென்றேன், நான் எங்கு இருக்கிறேன். அன்று நான் இருந்த இடத்தில் இன்று தலையை உயர்த்திப் பார்க்கும் அளவுக்கு கட்டிடங்கள் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் கனரக இயந்திரங்கள் என் தொப்புள்கொடியை வெட்டி எடுத்து வேறொருவரிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி அன்றோ என்னுள் துள்ளி விளையாடி மகிழ்ந்த உன் பிள்ளைகள் இன்று என்னுள் கோலூன்றி மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் பார்க்கும்பொழுது என் மனம் கல்லெறிந்த கண்ணாடி போல சிதறிப்போய் விட்டது.

ஐயோ !! மானிடா என்னை எங்கு தொலைத்தாய்?.

நீ ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் கொள். என்னை மணல் குவாரிகளுக்கு நீ தாரை வார்த்ததைப் போல கூடிய விரைவில் உன் இனத்தையும் அவற்றின் பிள்ளைகளையும் கடல் மாதாவுக்கு தாரைவார்க்க போகிறாய். ஆதி காலத்தில் இரண்டு காளைகளையும் ஒரு வண்டியையும் கொண்டு எருது வண்டி என்ற பெயரில் என்னிடம் வந்தாய். என் தொப்புள் கொடியை சிறிது சிறிதாக வெட்டி எடுத்தாய், அதன் வலியை பொறுத்துக்கொண்டு உன் இனத்தின் வயிற்றுப்பசி போக்குவதற்கும் வாழ்வாதாரம் உயர்வதற்கும் உறுதுணையாய் இருந்தேன். ஆனால் நீயோ இன்று விஞ்ஞான உத்தியைப் பயன்படுத்தி தயாரித்த இயந்திரங்களைக் கொண்டல்லவா என் தொப்புள் கொடியை அறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறாய், இந்த வலியையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் உன்னையும் உன் இனத்தையும் நீயே அழிக்கப்போகிறாய் என்பதை எங்ஙனம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்.

மானிடா ! நீ என்னை தொலைத்ததற்கான காரணம்தான் என்ன? உன் தமிழினத்தால் நான் காவிரி , அமராவதி , பவானி... என்று அற்புதமான பெயர்களால் அழைக்கப்பட்டேன் என்று பொறாமை கொண்டு என்னை தொலைத்துவிட்டயா? இல்லை, நான் துள்ளிக் குதித்து , ஆடிப்பாடி , கரைதழுவி , நுரைபொங்க ஓடும் அழகைப் பார்த்து பொறாமை கொண்டு என்னை தொலைத்து விட்டாயா? எப்படி உனக்கு மனம் வந்தது. சற்றும் உன் இனத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமல் என்னை தொலைத்துவிட்டு நீ மட்டும் நிம்மதியாக வாழ்வதற்கு.

பாலாறு என்ற பெயரில் வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஊர்மக்களின் பசி தீர்த்து , ஐந்தறிவு கொண்ட உயிரினங்களுக்கும் ஆறறிவு கொண்ட உன் இனத்திற்கும் பாகுபடில்லாமல் அல்லவா நான் இருந்தேன். ஆனால் நீயோ, என்னை எங்கோ தொலைத்து, இன்று என் இருப்பிடத்தை பாலைவனம் போல மாற்றி விட்டாயே. இதை பார்க்கையில் என் மனம் பற்றி எரிகிறது மானிடா. சென்னை மாநகர மக்கள் என்னை அடையாறு என்று அழைத்து கடைசியில் என்னை அடையாளம் தெரியாமல் நிறம் மாற்றி மாறுவேடம் போட வைத்துவிட்டார்கள். எங்ஙனம் சொல்வது இக்கொடுமையை?

மதுரை மாவட்டத்தில் வைகை என்னும் பெயரில் வலம் வந்து உன் இனத்தின் தாகம் தீர்த்து , சித்திரை மாதத்தில் கள்ளழகர் என்னை சந்திக்க வெறும் வேளையிலே, துள்ளி மகிழ்ந்து விளையாட உன் இனத்திற்கு உறுதுணையாய் இருந்தேன் என்பதை மறந்து என்னை தொலைத்து விட்டாயே மானிடா ! அந்த கள்ளழகர் என்னை தொலத்ததற்கான காரணம் கேட்டால் நீ என்ன செய்வாய்?

அமராவதி என்ற பெயரில் சற்றும் அமராமல் கரூர் மாவட்டத்திலும் நொய்யல் என்ற பெயரில் சற்றும் நோகாமல் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் ஓடித்திரிந்தேன். பின்னர், நீ என்னுள் அணை கட்டி என் மகிழ்ச்சியை குழைத்தாய், ஆனால் நானோ உன் இனத்தின் பசி தீரப்போகின்றது என்று எண்ணியல்லவா அமைதி காத்தேன். அதற்கு நீ காட்டிய நன்றிக் கடன் , சாயப்பட்டறை கழிவை என்னுள் கலக்கச் செய்து என் நிம்மதியை அடியோடு குழைத்தாய். அதையும் சகிப்புத் தன்மையோடல்லவா ஏற்றுக் கொண்டேன். அந்த சகிப்புத்தன்மைக்கு நீ கொடுத்த பரிசு, கனரக இயந்திரங்கள் என்னுள் இறங்க அனுமதி இல்லை எனத் தெரிந்ததும் மீண்டும் எருது வண்டிகளைக் கொண்டல்லவா என் தொப்புள்கொடியை அறுத்து எடுதுக்கொண்டிருக்கிறாய்? எப்படி என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியும்?

தென் தமிழகத்தில் தாமிரபரணி என்று உன் இனம் என்னை அழைத்ததால் நான் பரணியை ஆளும் மிடுக்குடன் பாமர மக்களுக்கு உதவியாக இருந்தேன். ஆனால் நீயோ, " தும்பை விட்டு வாலை பிடித்த கதை " போல யாரோ ஒருவன் என்னுள் துளையிட்டு, என் மூச்சுக் காற்றை உறிஞ்சு எடுத்து குளிர்பானம் தயாரிக்க என்னை கைக்கூலியாய் மாற்றி விட்டு, நீ இன்று எனக்காக வேறோருவரிடம் கையேந்தி நிற்பதை பார்க்கையில் என் உள்ளம் குமுறுகிறது. சற்றே சிந்தித்துப் பார் மானிடா, நீ உன் எதிர்கால இனத்தையும் சேர்த்து அழிதுக்கொண்டிருக்கிறாய் என்பது உனக்கு நன்றாக புரியும்.

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் காவிரி என்று அழைக்கப்பட்டு பரந்து விரிந்தோடி உன் இனம் விவசாயம் செய்ய உறுதுணையாக இருந்தேன். ஆனால் அன்று நான் இருந்த இடத்தில் இன்று கருவேல முள் மரங்களும் காய்ந்து தோய்ந்த விவசாயிகளின் கண்ணீர் தாரைகளும் இருப்பதை எண்ணிப் பார்க்கையில் என் மனம் நெகிழ்ந்து போகிறது. மானிடா ! நீ என்னை மட்டும் தொலைக்கவில்லை. தமிழகத்தின் நெற்களஞ்சியத்தையும் சேர்த்துத் தொலைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நன்றாக புரிந்து கொள்.

நீயோ.. என்னைத் தொலைத்துவிட்டாய், ஆனால் கரிகால மாமன்னன் எனது குறுக்கே கட்டிய கல்லணையை கண்டு ரசிப்பதற்கு சாரை சாரையாய் உன் இனம் வந்து செல்லும் அல்லவா, அந்த இனம் என்னைப் பற்றிக் கேட்டால் உன்னால் என்ன சொல்ல முடியும்? எதிர்காலத்தில் உன் பிள்ளைகள் காவிரித் தாய் எங்கே எனக் கேட்டால் உன்னால் என்ன பதில் கூற முடியும்?.

மானிடா ! மீண்டும் உனக்கு ஒன்று கூறுகிறேன். நீ என்னை முழுவதுமாக தொலைக்கவில்லை, நான் ஊசலாடும் உயிர் போல வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன். நீ விழித்துக்கொண்டால் உன்னால் எனக்கு மறுபிறவி கொடுக்கமுடியும், நீ முயற்சி செய்தால் என்னை முழுவதுமாக மீட்டெடுத்து உன் இனம் காக்க முடியும். உன் பெற்ற தாயை மீட்டெடுப்பாய் என்ற நம்பிக்கையோடும் ஏக்கத்தோடும் காத்துகொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு
நதி

English summary
Writer Shanthi Palanisamy has written about the pathetic conditions of our Rivers in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X