For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆலய தரிசனம் – அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பக்தரின் துயர் துடைக்க தானே பக்தனாக ஆயிரத்து எட்டாவது ஆளாக வந்த விநாயகரின் பெருமையை நாம் இன்றைய நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் தரிசிக்கவிருக்கிறோம். அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் ஆயிரத்தெண் விநாயகரை குளக்கரையில் வைத்து வழிபட்டு வந்தனர் பிறகு காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மன் சந்நதிகளுடன் மகாமண்டபம் கட்டப்பட்டது. திருவாடுதுறை ஆதினத்தின் திருப்பணிகளாக பிறகு தேர், கொடிமரம் செய்ய்யப்பட்டு உற்சவ மூர்த்திகளும் கொடுக்கப்பட்டு கோயில் விரிவடைந்தது.

Aayala Dharisanam- Arulmigu Ayirathen Vinayagar Temple

தலவரலாறு:

கொற்கை பாண்டிய மன்னருக்கு குழந்தை செல்வம் இல்லை எனவே அவர் ஒரு ஜோதிடரை கலந்தாலோசித்தார் ஜோதிடரும் மன்னரின் ஜாதகத்தை விரிவாக அலசி ஆராய்ந்து மன்னரிடம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலுக்கு சென்று ஆயிரத்தெட்டு நபர்களுக்கு அன்னதானம் செய்தால் குழந்தைபேறு கிடைக்கும் என்று கூறினார். அதனால் மன்னரும் மக்களை விருந்துக்கு அழைத்தார்.

ஆயிரத்தேழு நபர்கள் மட்டுமே வந்திருந்தனர். ஒருவர் மட்டும் குறைவாக வந்திருந்ததை கண்டு மனம் வெதும்பி நின்றார். விநாயகப்பெருமானை வேண்டினார். விநாயகப்பெருமானே கற்றரிந்த பண்டிதர் உருவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து மன்னரளித்த விருந்தில் கலந்துகொண்டார். மன்னருக்கும் புத்திர பாக்கியம் கிடைத்தது. எனவே இத்திருக்கோயிலுக்கு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் என்று பெயர் உண்டானது.

புராண சிறப்பு:

ஆண்டாள் கவிராயர் என்பவர், ஆறுமுகமங்கலத்துக்கு சென்ற போது உண்பதற்கு உணவு கிடைக்கவில்லை அதனால் வருந்திய கவிராயர் ‘ஆறுமுகமங்கலத்திற்கு யார் போனாலும் சோறு கொண்டு போங்கள் சொன்னேன் சொன்னேன்' என்று பாடினார். இப்பழிச் சொல்லை நீக்கும் பொருட்டு இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைவருக்கும் அன்னதானம் செய்து வருகின்றனர்.

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் ‘கணேச பஞ்சரத்தினம்' பாடி பின் திருச்செந்தூர் சென்று ‘ சுப்ரமணிய புஜங்க ஸ்தோத்திரம்' பாடி வியாதி நீங்கப்பெற்றார் என்கிறது தல புராணம்.

கல்வெட்டு சிறப்பு:

இத் திருக்கோயிலின் மகா மண்டபத்தில் இறைவன் திருநாமம் ஏற்பட்டதற்கான செய்திகள் பதிக்கப்பட்டுள்ளன. பாண்டியமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதும் திருக்கோயில் அமைப்பு குறித்த விபரமும் கல்வெட்டில் வட்டெழுத்து வடிவில் காணப்படுகிறது.

திருமணம் கைகூடும்

திருமணமாகாதவர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகை தந்து கல்யாணசுந்தரி அம்மனை தரிசித்தால் திருமணம் விரைவில் கைகூடும். எனவே இத்திருக்கோயிலின் கல்யாணசுந்தரி அம்மனுக்கு மஞ்சள் பட்டுப்புடவை எடுத்து சாத்தி வேண்டுவது இன்றும் நடைபெற்று வருகிறது.

விநாயகருக்கு வேண்டுகோள்

படிப்பில் கவனக்குறைவு, வழக்குகள் இழுபறி நிலை, பணப்பிரச்சினைகள் போன்றவை தீர்ந்திட இங்கு வந்து வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பின்பு விநாயருக்கு நூற்றியெட்டு அல்லது ஆயிரத்தெட்டு தேங்காய்கள் உடைத்து வழிபடுகிறார்கள். நூற்றியெட்டு அல்லது ஆயிரத்தெட்டு தீப வழிபாடும் நடத்துகிறார்கள்.

அமைவிடம்:

தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் முக்காணி என்ற ஊரின் அருகே ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ளது.

இறைவன்: அருள்மிகு விநாயகர்
தலவிருட்சம்: வில்வமரம்
ஆகமம்: காணாபத்யம்

English summary
More than 2000 years old vinayaga temple. The main temple devoted to Lord Vinayaga is probably the oldest Ganapathy temple in Tamilnadu as Ganapathi worship in other places has commenced only after the Pallava periods, much later
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X