For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கதை வலுவினால் காலத்தை விஞ்சி நிற்கும் செவ்வியல் திரைப்படங்கள்

By Lekhaka
Google Oneindia Tamil News

-கவிஞர் மகுடேசுவரன்

சென்னை: திரைப்படங்கள் வெவ்வேறு காலப்போக்குகளுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஆக்க முறைகள் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நன்றாக மேம்படுகின்றன.

ஊமைப்படம், பேசும்படம், பன்னிறப்படம், அகல்திரைப்படம், பன்னொலிப்படம் என்று அதன் தொழில்நுணுக்கத் தரம் தொடர்ந்து மேம்படுகிறது. அந்த மேம்பாட்டுக்கு இதுதான் இறுதியென்றோ நிறைவென்றோ கூறவும் இயலாது. இன்றுள்ள வளர்ச்சியே சிறிது என்னுமளவுக்கு எதிர்காலத்தில் கற்பனைக்கப்பாற்பட்ட அளவில் மேம்பாடுகள் இருக்கக்கூடும்.

classic movies with strong content

ஒவ்வொரு பத்தாண்டின்போதும் புதிதாய் வரும் பார்வையாளர்கள் பழைய படங்களை இரண்டாமிடத்தில் வைத்துத்தான் பார்ப்பார்கள். தொழில்நுட்ப வரையறையில் ஒரு படம் காலத்தின் முன்னேற்றத்திற்கேற்ப பின்னகர்ந்தபடியே இருக்கிறது. அதனால்தான் அறிவியல் என்பது கலைச்செப்பத்திற்கு உறுதி தர இயலாமல் நிற்கிறது. காலத்தை விஞ்சிய கலைப்பொருள் அறிவியல் உச்சத்தினால் எந்தத் தாழ்ச்சியையும் அடைவதில்லை.

அன்றைய திரைப்படங்கள் ஆக்கப்பட்ட வழிமுறைகளில் இன்று நாம் பலப்பல மேம்பாடுகளை அடைந்துவிட்ட போதிலும், கலைத்திட்பத்திற்கும் மேதைமைக்கும் மீண்டும் மீண்டும் அவற்றையே நாடவேண்டியவர்களாக இருக்கிறோம். நடிப்பு என்றால் சாப்ளினை நாடித்தான் ஆகவேண்டும். ஒரு பாத்திரம் பேசும் திண்மையான சொற்களுக்கு ஷேக்ஸ்பியரை எட்டிப் பார்க்க வேண்டும். இளங்கோவனும் கருணாநிதியும் கண்ணதாசனும் சக்தி கிருஷ்ணசாமியும் ஏபி நாகராஜனும் எழுதிய சொற்றொடர்களைப் பயிலாமல் இங்கே தெறிப்பான உரையாடல்களை எழுதிவிடமுடியுமா, என்ன ? ஆக, பழந்திரைப்படங்கள் என்பவை நாம் பயிலவேண்டிய பாடங்கள். பழைய படங்களில் ஏராளமான குப்பைப் படங்களும் இருக்கின்றனதாம். அவற்றை நீக்கித் தேர்வன தேர்ந்தால் நாம் கண்டடைபவை அனைத்தும் புதையல்கள். செம்படைப்பாக மாறும் திரைப்படங்கள் காலத்தை விஞ்சி நிற்கின்றன.

ஓர் இலக்கியப் படைப்பு செவ்வியல் தன்மையை அடையவேண்டும் என்றால் அதில் மாற்றுக்குறையாத மனித உணர்ச்சிகளின் பெருநடனம் இருக்க வேண்டும். மனிதக் கதைகளுக்கு அப்பால் பேசிய இலக்கியங்கள் பெரும்படைப்புகளாக மாறவில்லை. அஃறிணைகளைப் பற்றியது என்றாலும் அறநூல் என்றாலும் அங்கே மானுட மதிப்பீடுகள் தொடர்ந்து போற்றப்பட வேண்டும். எங்குச் சுற்றினாலும் அங்கே வந்து நிற்க வேண்டும். அவற்றுக்கு அப்பால் விலகிச் சென்றவை காலப்போக்கில் மறக்கப்படும்.

செம்படைப்பாக மாறிய திரைப்படங்கள் எவ்வாறு ஆக்கப்பட்டன என்பதைக் கவனியுங்கள். அவற்றின் கதைப்பொருள்களாக என்னென்ன அமைந்தன என்று கூர்ந்து நோக்குங்கள். அப்படங்களைத் தொடங்கி, காட்சிகளைத் தொடுத்துச் சென்று, எவ்வாறு முடித்தார்கள் என்பதை ஆராயுங்கள். எல்லாவற்றுக்குமான விடைகளும் அவற்றில் அடங்கியிருக்கின்றன.

இரத்தக்கண்ணீர் என்கின்ற படத்தில் கல்வியிருந்தும் செல்வமிருந்தும் அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதை அறியாமல் அடங்காமல் ஆடிய ஒருவன் இறுதியில் எவ்வாறு வீழ்ந்தான் என்பதைக் குறித்து இழையிழையாகக் காட்சியமைத்தார்கள். பராசக்தி என்ற திரைப்படத்தில் உற்றார் உறவுகள் இழந்து நட்புகளை இழந்து தன்னத்தனியனாகத் தவிக்க நேர்ந்தவன் எத்தகைய அடிமட்டத்திற்குச் சென்று போராடினான் என்பதைக் காட்டினார்கள். சீரும் சிறப்புமாய் வெல்வார் யாருமின்றிச் செம்மாந்து வாழ்ந்த வழக்கறிஞர் ஒருவர் 'தன்னடியொற்றி வளர்ந்த வாழையாய்த்' தான் வளர்த்த பிள்ளையாலே வீழ்ச்சியடையும் கதையைச் சொன்னபடம்தான் கௌரவம்.

பெருங்குடும்பத்தைத் தன்னந்தனியளாய்ப் பாடுபட்டுக் கரைசேர்க்கப் போராடும் ஒருத்தியைப் பற்றிய படம்தான் அவள் ஒரு தொடர்கதை. அவளொன்றும் சீமாட்டியாக நினைக்கவில்லை, ஓர் ஆசிரியையாகி நால்வர்க்குப் பாடம் சொல்லித்தரும் நல்வாழ்க்கை வாழ நினைத்தவளின் கனவுகளைச் சீரழித்து, அம்மாவின் பெட்டிக்கடையையே அவளும் நடத்தும்படியாக்கிய கதைதான் பதினாறு வயதினிலே. முதற்காதலின் மறக்க முடியாத சுவடுகளோடு நிற்பவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது, அந்தத் திருமண உறவிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயல்பவள் படிப்படியாக பொருந்திப் போவதைப் பற்றிய படம்தான் மௌனராகம். ஏதுமறியாத சின்னஞ்சிறியவர்கள் காதல் என்ற பெயரில் வாழ முயன்றால் சமூக அமைப்புகள் அவர்களை எப்படிப் பிரித்துப் பிய்த்துப்போடும் என்பதைக் கூறிய படம் காதல். இளங்கன்றாய்ப் பயமின்றித் திரியும் இளைஞர்களைக் காதலும் சூழ்ச்சியும் எப்படியெல்லாம் தன்வழியில் இழுத்துச் சீரழித்துக் கொல்லும் என்பதை விளக்குவதுதான் சுப்பிரமணியபுரம்.

classic movies with strong content

எடுத்துக்காட்டாகச் சொன்ன படங்களில் மனித உணர்ச்சிகள் எவ்வாறு ஊடும் பாவுமாய் இழையோடியிருக்கின்றன என்பதை உணர்க. நிகழ்ந்திருக்க வேண்டிய நன்மைக்கு மாறாக விதிவழிப்பட்ட சீரழிவுகள் அவர்களை வலுவோடு மண்ணில் வைத்துத் தேய்க்கின்றன. அது அவ்வாறு ஆகக்கூடாது என்னும் பதைபதைப்பைப் பார்வையாளர்கள் பெற்றார்கள். அது எனக்கு நேர்ந்திருந்தால் நான் பிழைத்திருப்பேனா என்று தவித்தார்கள். நாம் வாழும் சமூகத்தின் ஒரு புறத்தில் எப்படியெல்லாம் மனிதர்கள் துன்புற்றுத் துடிக்கிறார்கள் என்பது உணர்த்தப்படுகிறது. நிகரற்ற மனித கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்தத் தரத்தை அடைகையில் ஒரு திரைப்படம் செவ்வியல் தன்மையை அடைகிறது.

தொழில்நுட்பங்கள் எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்தாலும் அடிப்படைத் தேவையான மானுடக் கதைக்கு என்றென்றும் தட்டுப்பாடு நிலவுகிறது. கலை என்ற பெயரில் ஆக்கி அளிக்கப்படும் அனைத்திலும் பார்வையாளரின் உணர்ச்சிகரமான பங்கேற்பு இன்றியமையாதது. பெரிய நாயகனின் நாள்கள் தரப்பட்டிருந்தாலும் நல்ல கதை அமையாவிட்டால் படப்பிடிப்பைத் தள்ளிப்போட்டாக வேண்டும். தொழில்நுட்பம் எப்படி வளர்ந்தாலும் "ஒரு ஊர்ல..." என்றுதான் கதைமொழியைத் தொடக்கியாக வேண்டும்.

பிறமொழிப் படங்களிலும் உலகப் படங்களிலும் திரைப்படக்காரர்கள் உற்றுப் பார்த்துத் தேடுவது தொழில்நுட்பங்களையல்ல, கதையைத்தான். திரைப்படத்துறையினர் மறைவாகவேனும் ஓர் இலக்கியப் படைப்பைப் படித்துவிடுவார்கள், அதற்குக் காரணமும் அவர்களுடைய கதைத்தேட்டமே. ஒரு நல்ல கதை எங்கே கிடைக்கும் ? வீழ்ச்சியடைந்த மனிதனின் அருகே செல்லும் அன்புடைமை இருந்தால்தான் கிடைக்கும். ஒருவன் அன்புடைமையாளன் ஆகிவிட்டாலே அவன் முழுமையான கலைஞனாவதில் தடையேதுமில்லை. கதைகள் வேண்டுமென்றால் மனிதர்களை நோக்கிச் செல்ல வேண்டும். செவிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். கண்களுக்குக் கூர்மை கூடவேண்டும். கால அட்டவணை போட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் எந்தக் கதையும் இல்லை.

English summary
Classic Tamil movies with strong content
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X