For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களின் கலைச்செல்வம் தேடி...!

Google Oneindia Tamil News

-முனைவர் மு.இளங்கோவன் ([email protected])

காலை பத்து மணிக்கெல்லாம் இலெய்டனில் உள்ள அருங்காட்சியகத்தை அடைந்துவிடுவது என்று திட்டமிட்டுத், தொடர்வண்டி ஏறினோம். வானம் வெளுத்துக் காணப்பட்டது. இன்றும் மழை இருக்காது என்று நேற்றே கோபி குறிப்பிட்டார். நெதர்லாந்தில் மழை இல்லாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குத் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஐந்தாறு குடைகள் வைத்துள்ளனர். அவரவர் கைபேசியிலும் வானிலை அறிவிப்புகளை அறிவதற்குரிய செயலிகளை நிறுவியுள்ளதால் வானிலை விவரங்களை அனைவரும் உடனுக்குடன் தெரிந்துகொள்கின்றனர்.

நெதர்லாந்து நாட்டின் இனப்பண்பாட்டு அருங்காட்சியகம் (National Museum of Ethnology (Dutch: Rijksmuseum Volkenkunde or RMV) நுழைவுவாயிலை காலை 10 மணியளவில் அடைந்தோம். வரவேற்பறையில் நாங்கள் இந்தியாவிலிருந்து வருகிறோம் எனவும், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி உள்ளிட்ட எங்களின் நாட்டுப்பகுதிகளில் தங்கள் நாட்டினர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வணிகம் செய்த விவரங்களை அறிய விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டோம். எங்களை அன்புடன் வரவேற்றனர். ஆராய்ச்சியாளர்கள் என்பதால் சிறப்புச் சலுகைகள் வழங்கினர். இந்தியப் பகுதிக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்று கூறினோம்.

ஆசியப் பகுதி என்ற பிரிவில் ஆசிய நாடுகளின் பண்பாடு, பழக்க வழக்கம், வாழ்க்கைமுறை குறித்த பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. டச்சுக்காரர்கள் இந்தோனேசியா, சுமத்ரா, திபேத், சீனா, மலேசியா, பர்மா உள்ளிட்ட பகுதிகளைச் சிறப்பாக ஆண்டதால் அப்பகுதியின் பண்பாட்டுச் சின்னங்கள் இக்காட்சியகத்தில் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் தென்னாப்பிரிக்கா, பாகித்தான், அரேபியா நாடுகளைச் சேர்ந்த கத்திகள், விளக்குகள், யானைத் தந்தத்தில் அமைந்த பொருள்கள், தோல்பொம்மைகள், பல்வேறு இன மக்களின் ஆடைகள், வாழ்க்கை முறைகள் விளக்கும் சிலைகளும், பொம்மைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அழகினைக் கண்டு வியந்தோம்.

ஜாவா துர்க்கா தேவி சிலை

ஜாவா துர்க்கா தேவி சிலை

ஜாவாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த துர்க்கா தேவி சிலை, கிழக்கு ஜாவாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள், நந்தி சிலை, மகா காலா(Mahākāla) சிலை, தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள பைரவர் சிலை, அர்த்தநாரி சிலை, நடராசர் சிலை யாவும் கண்ணைக் கவரும் வகையில் உள்ளன. இந்தியாவில் - தமிழகத்தில் வழங்கும் பல்வேறு புராணச்செய்திகள் ஆசியா முழுவதும் பரவியுள்ளமையை அங்குள்ள கலைப்பொருள்களால் அறிந்தோம்.

பொன் மணிகள், சிலம்புகள், வளையல்கள்

பொன் மணிகள், சிலம்புகள், வளையல்கள்

மேலும் பொன்னில் அமைந்த மணிகள், சிலம்புகள், வளையல்கள், காப்புகள், தோடுகள், மூக்கணிகள், கத்தி, வாள், கேடயம் உள்ளிட்ட ஆயுதங்கள், விளக்குகள் உள்ளிட்ட பூசைப் பொருள்கள், இசுலாமியப் பெருமக்கள் அமர்ந்து படிக்கும் அழகுப் பொம்மைகள், நாகசுரம், தாளம், பறை, யாழ், வீணை, முழவு உள்ளிட்ட இசைக்கருவிகள், பலவகை வடிவில் உள்ளன. டச்சுப் படை மறவர்கள் பிறநாடுகளுக்குச் சென்றபொழுது அங்குக் குதிரைகளில் உலா வரும் காட்சிகள், பல்வேறு வகையான படகுகள், கப்பல்களின் மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த அந்த அருங்காட்சியகப் பொருள்கள் இணையத்தில் பார்வைக்கு உட்படும் வகையில் பாதுகாக்கப்படுகின்றமை போற்றத்தகுந்த ஒன்றாகும். இந்த அருங்காட்சியகம் ஒலி, ஒளிக்காட்சிகளுடன் உள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும். பல்வேறு பேச்சுகளையும், காட்சிகளையும், பண்பாட்டுக் கலைநிகழ்வுகளையும் அமர்ந்தபடி கண்டுசுவைக்க நல்ல வசதிகளைச் செய்துள்ளனர்.

நாம் நாட்டின் சாபக் கேடு

நாம் நாட்டின் சாபக் கேடு

நம் நாட்டில் இதுபோன்ற நிலை இல்லை. அறிவுக் கருவூலமாகவும், கலைக்கருவூலமாகவும் விளங்கும் தமிழகத்தில் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திச் சுற்றுலாவுக்கு வழிவகுக்கும் செயல்களில் நம்மவர்கள் ஈடுபடவேண்டும். அரசுக்குச் சரியான ஆலோசனைகள் வழங்குவோர் அருகிப் போனமையும், அறிவார்வம் நிறைந்த அதிகாரிகள் இல்லாமல் போனமையும் நம் நாட்டின் சாவக்கேடு என்று குறிப்பிடலாம். தமிழ்ப்பற்றும் செயல்திறனும் வினையாண்மையும் இல்லாதார் கையில் தமிழ் சிக்கிச் சீரழிந்துகொண்டிருப்பதைக் கவலையுடன் எண்ணிப் பார்ப்பதைத் தவிர வழியில்லை. நம் நாட்டில் உள்ள கோயில்கள், அருங்காட்சியகங்கள், அகழாய்வு வைப்பகங்கள், சுற்றுலாத் தலங்கள், நூலகங்கள், ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் யாவும் இறங்குமுகத்தில் உள்ள நிலையை மாற்றி, ஏறுமுகம் காணவைக்கும் செயல் மறவர்களுக்கு இத்தமிழுலகம் காத்துள்ளது என்று நினைப்பதைத் தவிரவேறு வழியில்லை. இது நிற்க.

துலிப் மலர்த் தோட்டம்

துலிப் மலர்த் தோட்டம்

பகல் இரண்டு மணிக்கு இலெய்டனிலிருந்து ஆம்சர்டாம் அருங்காட்சியகம் நோக்கிப் பயணமானோம். விரைவுத் தொடர்வண்டியில் புறப்பட்டதால் மிக விரைவாக ஆம்சர்டாம் வந்துசேர்ந்தோம். இடையில் துளிப் மலர்களின் தோட்டத்தைப்(Tulip Field) பார்க்க முடிந்தது. நெதர்லாந்து நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும், பெரும் வருவாயைத் தருவதும் துளிப் மலர்கள் ஆகும். நாங்கள் சென்ற நேரம் அறுவடை முடிந்தநேரம். எனினும் சிற்சில தோட்டங்களைப் பார்க்கமுடிந்தது. வயல்வெளிகளில் உள்ள வாய்க்கால்கள் யாவும் படகு செல்வதற்குரிய வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. நெதர்லாந்து நாட்டுக்காரர்களின் நீர்மேலாண்மை அறிவை எண்ணி எண்ணி வியப்படைந்தேன்.

உள்ளத்தில் தோன்றி மறைந்த பொன்னேரி

உள்ளத்தில் தோன்றி மறைந்த பொன்னேரி

எங்களின் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரியிலிருந்து நீரை வெளியேற்றும் வாய்க்கால்களும், அதில் தண்ணீர்ப் பாய்ச்ச நாங்கள் மேற்கொள்ளும் தந்திர உத்திகளும், ஒருவருக்கொருவர் செய்யும் அழிம்பு வேலைகளும் என் உள்ளத்தில் தோன்றி மறைந்தன. நெதர்லாந்திலுள்ள ஒரு வாய்க்கால் போல் கவின் மிகுந்த வாய்க்காலைத் தமிழகத்தில் யான் காணவில்லை.

வாய்க்காலை ஒட்டி அழகிய வீடுகள்

வாய்க்காலை ஒட்டி அழகிய வீடுகள்

வாய்க்காலை ஒட்டிச் சிலர் அழகிய வீடு கட்டி வைத்துள்ளனர். அதனை ஒட்டிச் சில படகுகளையும் கட்டி வைத்துள்ளனர். மாடுகள் மேய்ந்து கொழுத்து நிற்கின்றன. குதிரைகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்துகொண்டும், படுத்துச் சூரியக் குளியல் போட்டும் நின்றன. அங்குள்ள உழவர்கள் உழைக்கலாம். ஓய்வு எடுக்கலாம். உண்ணலாம். ஊர் சுற்ற நினைத்தால் படகில் புறப்பட்டு வேறுபுலம் செல்லலாம். இயற்கையுடன் இயைந்த அவர்களின் வாழ்க்கைக்கு ஏங்கியவனாக, ஆம்சடர்டாம் வீதிகளில் நடந்து அருங்காட்சியகம் சென்றோம். நண்பர் கோபி நெதர்லாந்து நாட்டினரின் நீர்மேலாண்மை குறித்து விரிவாக விளக்கியவண்ணம் வந்தார். ட்ரொபென் (Tropen Museum) அருங்காட்சியகம் ஆம்சடர்டாமுக்குப் பெருமை சேர்த்து நிற்கின்றது.

ஐயனார் சிலைகள்

ஐயனார் சிலைகள்

ஆசிய நாடுகளின் பகுதிகளில் இந்தியாவின் இரவீந்திரநாத தாகூர் குறித்த செய்திகளும் அவரின் படைப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் ஐயனார் சிலைகள், மண்குதிரைகள், நடராசர் சிலை, விஷ்ணு கற்சிலை, தோல்பொம்மைகள், இசைக்கருவிகள், அணிகலன்கள் பார்வைக்கு உள்ளன. பத்துத் தலை இராவணன் பொம்மை வடிவில் உள்ளார். இந்திய இசையை அடையாளப்படுத்தும் வகையில் இந்திய இசைக்கருவிகள் முழங்கி நம்மை வரவேற்கின்றன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்டநாடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்க்கைமுறை விளக்கும் பல படங்கள் இந்த அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன.

உலகின் பல பகுதிகளிலும் வணிகம்

உலகின் பல பகுதிகளிலும் வணிகம்

நெதர்லாந்து நாட்டினர் உலகின் பல பகுதிகளுக்கு வணிகத்தின் பொருட்டுச் சென்று அங்குள்ள கலைப்பொருட்களை நினைவாகக் கொண்டுவந்து பாதுகாக்கின்றமையை அருங்காட்சியகப் பொருள்கள் தெரிவிக்கின்றன. ஜாவா குறித்த விரிவான செய்திகள் உள்ளன. ஜாவாவிலும் மற்ற நாடுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பாடநூல்கள், வகுப்பறைகள் காட்டும் படங்கள், மாணவர்களின் படங்கள் அங்கு அழகாகப் பாதுகாக்கப்படுகின்றன. ஜாவாவின் 1927 ஆம் ஆண்டு கல்வி முறையை விளக்கும் மூன்று நிமிட ஆவணப் படம் ஒன்றைப் பார்வையிட்டேன். மாணவர்கள் வகுப்புக்குச் சீருடையுடன் செல்வது, வகுப்பறையில் அமர்வது, ஆசிரியர் பாடம் நடத்துவது, மாணவர்கள் கரும்பலகையில் எழுதுவது, பயிற்சிகள் என்று மிகச்சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் வியப்பாக இருந்தன. அங்கிருந்த பாட நூல்கள், சான்றிதழ்கள் சிலவற்றைப் படமாக எடுத்துக்கொண்டேன்.

நான் பாடிய நாட்டுப்புறப் பாட்டு

நான் பாடிய நாட்டுப்புறப் பாட்டு

அங்குள்ள ஒளிப்பதிவுக்கூடம் ஒன்றை நண்பர் கோபி காட்டினார். அதுபோல் இருந்த மற்றொரு பதிவுக்கூடத்தில் சில பெண்கள் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். எனவே நாங்களும் ஒளிப்பதிவுக் கூடத்தில் நுழைந்து, அங்கிருந்த குறிப்புகளைப் படித்துப் பார்த்தோம். நம் நாட்டு இசைப்பாடல்களைப் பாடினால் பதிவு செய்து பாதுகாக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டது. நண்பர் கோபி என்னை ஒரு நாட்டுப்புறப் பாடல் பாடும்படி கேட்டுக்கொண்டார். நானும் பாடினேன்.

மார்க்கோபோலோ சிறப்புத் திட்டம்

மார்க்கோபோலோ சிறப்புத் திட்டம்

கருவி தாமாகவே காணொளி வடிவில் பதிந்துகொண்டது. பாடியவர் விவரம், மின்னஞ்சல் முகவரி, நண்பர்களின் மின்னஞ்சல் முகவரி கேட்டது. அனைத்தும் தந்தோம். மார்க்கோபோலோ சிறப்புத் திட்டத்தின் கீழ் உலகப் பாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் இந்த அருங்காட்சியகத்தில் என்றும் இந்தப் பாடல்கள் நினைவாகப் பாதுகாக்கப்படும் என்றும் அறிவிப்பு வந்தது. அப்படி என்றால் இன்னொரு பாடல் பாடுங்கள் என்று பொறியாளர் கோபி சொன்னார். இன்னொரு நடவுப் பாடலைப் பாடி, இது நாட்டுப்புறப் பாடல், மு.இளங்கோவன், தமிழ்நாடு, இந்தியா என்று பதிவுசெய்துவிட்டு வெளியே வந்தோம்.

English summary
Here is the second part of the journey to Netherlands by Dr Mu Elangovan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X