For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிங்கம் காண்போம் - பகுதி 71 - பரவசமூட்டும் பயணத்தொடர்

Google Oneindia Tamil News

- கவிஞர் மகுடேசுவரன்

கட்டாக்கிலிருந்து புவனேசுவரம் வந்து சேர்கையில் இருண்டுவிட்டது. பகலிலேயே குளிரும் ஒடிய மாநிலத்தில் இருளானதும் மலை வாழிடக் குளிர்ச்சியைத் துய்க்கலாம். பெரும்பாலானவர்கள் குளிர்காப்புடை அணிந்திருக்கிறார்கள். தலைக்குல்லாவும் போட்டுக்கொள்கிறார்கள். மாலை தொடங்கினால் கட்டாக் புவனேசுவரம் சாலையில் நல்ல போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் நம் பேருந்து ஊர்ந்ததுபோல்தான் ஊர்வந்து சேர்ந்தது.

புவனேசுவரப் பேருந்து நிலையம் வேறெங்கோ தொலைவில் இருக்கிறது என்றார்கள். நாம் இருப்பூர்தி நிலையத்தின் அருகில்தான் அறை பிடித்திருக்கிறோம் என்பதால் “நிலையத்தின் அருகில் நிறுத்தமிருந்தால் இறக்கி விடு” என்று நடத்துநரைக் கேட்டுக்கொண்டோம். பாக்கூறிய வாயோடு அப்படியே ஆகட்டும் என்றே கூறியிருந்தார் நடத்துநர். புவனேசுவரத்தின் எல்லை விளிம்பைத் தொட்டதும் சாலைகளின் நாற்கூடல் பகுதியொன்று வந்தது. இருப்பூர்தி நிலையத்திற்குச் செல்பவர்கள் இங்கேயே இறங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல் ஒரு பகுதியில் இறக்கிவிடுகிறானே என்று வருத்தமாகிவிட்டது. மொழி தெரியா நிலையில் அவரோடு மல்லுக்கட்ட இயலாதே. வேறு வழியின்றி இறங்கிக்கொண்டோம்.

exploring kalingam odissa part-71

நாற்கூடலான அவ்விடத்தில் பெரிய தானிழுனி நிறுத்தம் இருந்தது. வண்டியை விட்டு இறங்கிய கூட்டத்தாரைத் தத்தம் தானிழுனிக்கு இழுத்துச் செல்ல முயன்றார்கள். நமக்கும் திக்கு திசை தெரியவில்லை. “புவனேசுவரம் இருப்பூர்தி நிலையத்தருகில் கட்டாக் செல்லும் முதன்மைச் சாலையில் பிரபுக்கிருபா விடுதி” என்பதுதான் நமக்குத் தெரிந்த அடையாளம். இப்பொழுது நம் கையிலிருந்த கைப்பேசிகளும் மின்னாற்றல் இழந்து படுத்துவிட்டன. எப்படி இடத்தைத் தேடுவது ? நம் தவிப்பைக் கணித்த தானிழுனியர்களும் நன்றாகவே மூளைவெளுப்பு செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களிடமே இருப்பூர்தி நிலையத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டபோதும் தொலைவாய்த்தான் செல்ல வேண்டும் என்றனர். விடுதிப் பெயரான பிரபுக்கிருபாவைச் சொன்னதும் “வாருங்கள் போகலாம்” என்று இழுத்துச் சென்று அமர்த்திக்கொண்டனர்.

புவனேசுவரத்தில் பிரபுக்கிருபா என்ற பெயரில் நான்கைந்து விடுதிகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். நமக்குத் தொடர்பில்லாத ஒரு பிரபுக்கிருபா விடுதியில் கொண்டுபோய் இறக்கிவிட்டார். “அடே… இந்த விடுதி இல்லை…” என்று நாம் கூப்பாடு போடத் தொடங்கியதும் அந்த விடுதியின் காவலாள் வந்துவிட்டார். அவரிடம் இருப்பூர்தி நிலையத்தருகில் இருக்கும் பிரபுக்கிருபா விடுதியைக் கூறியதற்கு இவ்விடம் கொண்டுவந்து விட்டுவிட்டார் என்று விளக்கத்தைச் சொன்னதும் தெளிவாகிவிட்டார். நம்மைப்போலவே பலரும் அவ்வாறு வழிமாறி வந்திருக்க வேண்டும். “ஆமாம்… இருப்பூர்தி நிலையத்திற்கு அருகேயும் இப்பெயரில் ஒரு விடுதி இருக்கிறது” என்று ஒடியத்தில் தானிழுனியார் மனத்தில் படியும்படி சொன்னார். அந்தத் தானிழுனியார் ஒடியத்தின் ஊர்ப்புறத்திலிருந்து புவனேசுவரத்திற்குப் பிழைப்பதற்காக வந்த புதிய தொழிற்காரராக இருக்க வேண்டும். ஊரின் வடக்கு தெற்கு தெரியவில்லை. ஒருவழியாக அவரிடம் இருப்பூர்தி நிலையத்தைத் தொடும் சாலையை விளக்கி மீண்டும் கிளம்பினோம்.

exploring kalingam odissa part-71

மேலும் சில சுற்றுகள் சுற்றியடித்ததில் எப்படியோ கட்டாக் சாலையைப் பிடித்துவிட்டோம். அது நாம் கிளம்பிச் சென்ற சாலைதான் என்பது அடையாளப்பட்டது. நாம் வழக்கமாக உணவுண்ணும் கடை வந்ததும் தானிழுனியை நிறுத்தச் சொல்லி இறங்கிக்கொண்டோம். அங்கேயே இரவுணவை முடித்துக்கொள்வதுதான் அறிவுடைமை.

உணவகம் என்னவோ சிறியதுதான். ஒரு நேரத்தில் பதினறுவர் அமர்ந்து உண்ணலாம். அதற்கு மேல் அங்கே இடமில்லை. ஆனால், இரவு வேளைக்கென்று வகை வகையான உணவுகள் கிடைத்தன. பஞ்சமின்றிக் கிடைக்கிறதே என்று வந்ததிலிருந்து காய்கூட்டுத் தோயைகளாகவே (மசாலா தோசை) தின்றுகொண்டிருக்கிறோமே, ஒரு மாற்றத்தை விரும்பினால் என்ன என்று தோன்றியது. நமக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த இணையர் கூம்பு வடிவத்தில் இருந்த ஒரு சுருட்டியைத் தின்றுகொண்டிருந்தனர். அதைச் சுட்டிக்காட்டி “அஃது என்ன ?” என்று வினவியதற்கு “ஸ்ப்ரிங் ரோல்” என்றனர். அதனையே கொடு என்று தருவித்தோம். சப்பாத்தியைப் போன்ற மாவுச்சுற்றுக்குள் காய்கறிப் பொரியலை அடைத்துத் தந்திருந்தான். சுவையாக இருந்தது. அதன் விலையும் முப்பது உரூபாய்தான். வயிறாரத் தின்றுவிட்டு விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64 , 65 , 66, 67, 68, 69, 70 ]

English summary
Travel series essay about exploring kalingam odissa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X