• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிங்கம் காண்போம் - பகுதி 68 - பரவசமான பயணத்தொடர்

Google Oneindia Tamil News

-கவிஞர் மகுடேசுவரன்

மகாநதியில் நீராடி முடித்து வெளியே வந்தேன். காலநேரம் குறித்த உணர்வில்லாமல் மணிக்கணக்கில் நீராடல். கைகளின் உட்புறத் தோல்கள் சுருக்கம் காட்டின. இதற்கும் மேல் நீராடினால் ஏதேனும் உடலுக்குள் எதிர்த்தடித்துவிட்டால் என்னாவது ! ஆனால், ஒன்றைச் சொல்ல வேண்டும். இப்பயணத்தில் வெவ்வேறு ஓடைகள், ஆறுகள் என்று நீராடிய போதும் எவ்வித நலக்குறைவும் ஏற்படவில்லை. நீராலான இவ்வுடல் நீரின் இயற்கையை எப்படிப் புறந்தள்ளும்?

exploring odisha 68

நீரோடு ஒத்துப் போகும் உடல் வாய்க்கப்பட்டவர்கள் பயணத்தை முழுமையாய்ப் பட்டறிகிறார்கள். இளமை முதற்கொண்டே காணும் நீர்நிலைகளிலெல்லாம் நீந்திக் குளித்ததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இன்னொன்றையும் கூற வேண்டும், எந்தத் தண்ணீரைக் குடித்தாலும் எனக்குச் சளி பிடிப்பதில்லை. இன்று வரைக்கும் உணவகங்களில் வைக்கும் நீரைத்தான் குடிக்கிறேன். உண்ணச் செல்லுமிடங்களில் புட்டித் தண்ணீர் வாங்கிக்கொள்ளும் பழக்கம் இல்லை. தண்ணீர்ப் புட்டிகள் விற்பனைக்கு வந்திராத தொண்ணூறுகளின் இருப்பூர்திப் பயணங்களில் நிலையத்தின் குடிநீர்க் குழாய்களில் தயங்காமல் நீர் குடித்திருக்கிறேன். இவற்றாலெல்லாம் உடலுக்கு நீரேற்புத்திறன் வந்துவிட்டது போலும்.

exploring odisha 68

கரைமணலில் கழற்றிப் போட்டிருந்த உடைகளை அணிந்துகொண்டேன். இப்போது எதிர்க்கரையில் அம்மா அம்மா என்று கத்திக்கொண்டிருந்த எருமைக் கூட்டமொன்று நதியில் இறங்கிக் கரைகடந்து ஏறிவிட்டது. கூட்டத்தின் தலைமா முதலில் இறங்கி ஒவ்வொன்றையும் தன்பின்னே வரவைக்கிறது. தலையுயர்த்திய நிலையில் நீர்மீது ஊரும் எறும்புச்சாரையைப் போல அவை ஆற்றைக் கடக்கின்றன. கரையேறியதும் தலைமா முன்னேறிச் சென்றுவிடுவதில்லை. நீர்சொட்டிய நிலையில் கரையிலேயே நிற்கிறது. தான் பசியாறிய எதிர்க்கரைப் புற்கூட்டத்தை நன்றியுணர்வோடு பார்க்கிறது. ஒவ்வொன்றாகக் கரையேறியவுடன் சேர்ந்து செல்கின்றன.

exploring odisha 68

வந்தவழியே ஆற்றுப் படுகையில் திரும்பிச் செல்ல வேண்டும். மகாநதியின் அந்தப் படுகைப் பகுதி அவ்வளவு பெரிய நகரத்திற்கு மிகச்சிறந்த ஒதுக்கிடமாகும். அவ்விடத்தை அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கென்று எடுத்துக்கொள்ளாமல் மக்களுக்கு வேண்டிய எல்லாப் பொது நிலத்தேவைகளுக்குமாய் விட்டு வைத்திருக்கிறார்கள். விரும்பியவாறு விளையாடுகிறார்கள். வண்டி பழகுகிறார்கள். துணி காயவைத்திருக்கிறார்கள். பொதுப்பெருந்திடலால் அம்மக்களுக்கு என்னென்ன பயன்களோ அவை அனைத்தையும் அங்கே பெற்றுக்கொள்கிறார்கள்.

exploring odisha 68

நம்மூர்களில் இத்தகைய பொதுப்பெருந்திடல்கள் இல்லையென்றே கூறலாம். காலை நடைக்குக்கூட பள்ளித் திடல்களுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. வெற்றிடம் என்று இருந்தால் அங்கே பூங்கா, நினைவிடம், மணிமண்டபம் என்று எதையேனும் அமைத்து அதனை வேலியிட்டுக்கொள்கிறார்கள். அவ்வகையில் கட்டாக் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தாம். ஆற்றுப் படுகைக்குள் செல்லுமிடத்தில் வரவேற்பு வளையம் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். அதில் அவ்வாற்றுப் பண்பாட்டை நினைவூட்டும் சிற்ப வேலைப்பாடுகளும் இருக்கின்றன. அதனை அண்மையில்தான் கட்டியிருக்கக்கூடும். புதுவண்ணப் பொலிவோடு காணப்பட்டது.

சாலையில் ஒரு தானிழுனியை நிறுத்தி ஏறிக்கொண்டோம். இப்போது நல்ல போக்குவரத்து நெரிசலான மாலை. கட்டாக் நகரத்தின் பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். ஊரின் வடமேற்கு எல்லையில் நாமிருக்கிறோம். நகரத்தின் நடுப்பகுதிக்குச் செல்ல வேண்டும். வரும்போது எப்படியோ சுற்றியடித்து நெரிசலுக்கு ஆட்படாமல் வந்துவிட்டோம். இனி இம்மாலையில் நகரத்திற்குள் நுழைவது எப்படியோ ? ஆனால், நம் தானிழுனியார் எளிதில் விட்டுத் தருவாரா என்ன ? நகரத்தின் விளிம்புக்குள்ளேயே ஓட்டிச் சென்று எங்கோ ஒரு பகுதியில் இடைஞ்சலான சாலையில் நுழைந்துவிட்டார். எதிர்வருபவர் முட்டுவாரா, இவர் முட்டுவாரா என்று நமக்குக் கிடுகிடுப்பை ஊட்டியவாறே விரைவு குறையாமல் மடித்து மடித்துச் சென்றார்.

exploring odisha 68

ஊர் நடுப்பகுதியில் அழகான வாய்க்கால்வழி ஒன்று காணப்பட்டது. வரலாற்றில் அவ்வழி நன்னீர் பாய்ந்த நலத்தோடு இருந்திருக்க வேண்டும். இன்று ஊரின் மொத்தக் கழிவையும் தாங்கிச் சென்றது. அந்தக் கழிவு நீர் மகாநதியின் ஏதோ ஒரு முனையில் நைச்சியமாகக் கலக்கப்படும் என்பதில் ஐயமேயில்லை. நொய்யலைப்போன்ற குறுநதியாக இருந்திருப்பின் கட்டாக்கின் கழிவுநீரால் நிறைந்திருக்கும். அது மகாநதியாக இருப்பதால்தான் கழிவு கலந்தும் உயிர் பிழைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். நம் ஆட்சியாளர்களை அழைத்துப்போய் அமெரிக்காவின் சிகாகோ நகரத்தைக் காண்பிக்க வேண்டும். உலகின் மிகப்பெரும் நகரமொன்று எப்படித் தன்னருகே ஒரு நன்னீர் ஏரியைக் கண்போல் காக்கிறது என்பதைக் கற்று வரட்டும். அவ்வேரியின் நன்னீர்தான் நயாகரா அருவியாகக் கொட்டுகிறது. நதிக்கரையில் பிறந்து வளர்ந்தவர்களைப்போலவா நாம் நடந்துகொள்கிறோம் ?

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64 , 65 , 66, 67, 68]

English summary
Travel series about kalingam odissa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X