For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிங்கம் காண்போம் - பகுதி 66 - பரவசமூட்டும் பயணத்தொடர்

Google Oneindia Tamil News

- கவிஞர் மகுடேசுவரன்

சீனாவின் துயரம் என்று யாங்க்ட்சி எனப்படும் மஞ்சள் ஆற்றைக் கூறுவதைப்போல ஒடியாவின் துயரம் என்று மகாநதியைக் கூறுகிறார்கள். ஹிராகுட் அணை கட்டப்பட்ட பிறகே மகாநதியின் பெருவெள்ளப்பாய்வு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காவிரியில் நொடிக்கு ஆயிரம் கன அடி நீரைத் திறந்தாலே நாம் சற்றே ஆறுதல் பட்டுக்கொள்கிறோம். இருபதாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. கர்நாடகத்தின் அணைகள் நிரம்பியதால் அறுபதாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது என்ற செய்தியைப் பார்த்தால் நெஞ்சம் நிறைந்துவிடுகிறது. ஒரு இலட்சம் கன அடி என்றால் பெருவெள்ளம் என்று சற்றே அஞ்சுகிறோம்.

இன்றைய நிலவரப்படி இரண்டு இலட்சம் கன அடிக்குமேல் காவிரியாற்றில் வெள்ளம் செல்வது அதன் கரைகளின் வலுவுக்கு முற்றிலும் எதிரானது. கரையோர மக்கள் வெளியேற வேண்டும். வடிநிலப்பகுதிகளில் கரையுடையும் பேரிடர் உண்டு. ஆனால், மகாநதியில் ஒரு நொடிக்கு எத்தனை இலட்சம் கன அடி செல்லும் தெரியுமா ? இருபது இலட்சம் கன அடி நீரை ஒரு நொடியில் சுமந்து செல்லும் ஆற்றலுடையது அந்நதி. நாட்டில் கங்கைக்கு அடுத்தபடியாக நீர்ப்பெருவெள்ளத்தைத் தாங்கக்கூடிய பெருநதி. அதனால்தான் அதன் பெயர் மகாநதி.

exploring odissa kalingam 66

மகாநதியின் வெள்ளத்தை முறையாகக் கட்டுப்படுத்திவிட்டார்களே தவிர, அந்நதியின் பெருவெள்ளம் மின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்படுவதைப்போல் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. மகாநதி தோன்றுகின்ற சத்தீசுகர மாநிலம் வனப்பாங்குக்குப் பெயர் பெற்றது. மகாநதி தோன்றிய இடத்திலிருந்து தொடர்ந்து பள்ளத்தாக்குப் பகுதியிலேயே பாய்ந்து வருவதால் ஆற்றுத் தண்ணீரைப் பாசனத்திற்கு எடுப்பது எளிதில்லை. ஆந்திரத்தின் பேராறுகள் பலவும் பள்ளத்தாக்குக்கு உள்ளேயே பாய்வதால்தான் அம்மாநிலத்தின் கழிமுகப் பகுதிகளில் நடக்கும் வேளாண்மை உட்பகுதியில் நடப்பதில்லை. மகாநதியின் நிலைமையும் ஏறத்தாழ அதுதான். மிகுதியாகக் கடலில் கலக்கும் நீரையுடைய நதி என்றே மகாநதியைக் கூறலாம்.

இந்நதி தோற்றுவாய் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மலையடங்கு ஓடைகளால் திரள்கிறது. தோன்றிய இடத்திலிருந்து எண்பது கிலோமீட்டர்கள் தொலைவு கடலுக்கு எதிர்த்திசையான வடக்கில் நகர்கிறது. அதன் பிறகுதான் நதியானது கிழக்காகத் திரும்புகிறது. கிட்டத்தட்ட ஒரு கொக்கியைப் போன்ற வடிவத்தில் ஆற்றின் அமைப்பு இருக்கிறது.

exploring odissa kalingam 66

மகாநதிக்கு நூற்றுக்கணக்கான துணையாறுகளும் ஓடைகளும் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் உள்ளார்ந்த வனப்பகுதியில் தோன்றுகின்றன. அதனாற்றான் ஆற்றில் பெருகும் வெள்ளத்தைக் கணக்கிட முடிவதில்லை. சியோனாத், மந்த், இபு, ஹஸ்தியோ, ஓங்கு, ஜோங்கு, தெலன் போன்றவை மகாநதியில் கலக்கும் துணையாற்றின் பெயர்கள். அதன் துணையாறு ஒன்றின் பெயர் பாரி. தமிழ்த்தன்மையோடு இப்பெயர் இருப்பது என்னை ஈர்க்கிறது.

மகாநதிக்கரையில் சத்தீசுகர, ஒடிய மாநிலங்களின் பெரிய நகரங்கள் பல இருக்கின்றன. இராஜிம், சம்பல்பூர், சோன்பூர், பிரம்மராஜபுரம், சுபலயோ, வவுத்து, வங்கி போன்ற பல நகரங்கள் இருந்தாலும் கட்டாக் நகரம்தான் மிகப்பெரிது.

விட்டால் நான் மகாநதி புராணம் பாடிக்கொண்டே இருப்பேன். திரும்பவும் நம் பயணத்தின் காலடித் தடத்திற்கு வருவோம். கரையிலிருந்து நடந்து நதியை நோக்கிச் சென்ற நம் நடை வழிநடைக் காட்சிகளால் இடை நின்றிருந்தது. அவற்றிலிருந்து கண்மீண்டு நதிநீர்ப்பரப்பை நோக்கி நடந்தோம். மகாநதியின் ஆற்று மணல் வெள்ளைவெளேரென்று இருக்கிறது. கற்பொடிகள் குறைந்த நுண்மணல். எவ்வளவுக்கு நுண்மணல் இருக்கிறதோ அவ்வளவுக்குப் புதைகுழிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

மகாநதியில் இறங்குவதைப்போல் துணிகரச்செயல் வேறில்லைதான். ஒடியச் செய்தித் தாள்களில் மகாநதியில் மூழ்கியும் புதைகுழிகளில் சிக்கியும் இறந்தவர்களைப் பற்றிய செய்தி அடிக்கடி வந்துகொண்டே இருக்குமாம். நாம் அங்கிருந்த போதும் அப்படியொரு செய்தி வெளியாகியிருந்தது. அதனால் ஆற்றை அணுகுவதற்கு கண்மூடித்தனமான ஆர்வத்தோடு இருக்கக்கூடாது. முன்தடம் இல்லாத பகுதியில் கால்வைக்கவே கூடாது. ஆற்றை நோக்கிச் சென்ற ஒற்றையடித் தடத்தில் அச்சத்தோடுதான் நடந்தோம்.

- தொடரும்

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64 , 65 ]

English summary
Travel Series about Odissa, Kalingam, Historic Places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X