கலிங்கம் காண்போம் - பகுதி 56 - பரவசமூட்டும் பயணத்தொடர்
-கவிஞர் மகுடேசுவரன்
குரங்குக் கூட்டத்திடையே சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு எழுந்தேன். இனி மேற்காகச் செல்ல வேண்டும். அவ்விடத்தில்தான் மேலும் பல குகைகள் இருக்கின்றன. உதயகிரிக் குன்றத்தின் வரலாற்றுச் சிறப்புக்குக் காரணமான “ஹாத்தி கும்பாக் குகை” அடுத்து இருக்கின்றது.
உதயகிரிக் குன்றுகள் பலவும் கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்தவை. நாமறிந்த உலக வரலாற்றுக்குக் கிறித்து பிறப்பதற்கு முந்திய சான்றுகளைக் காரணம் காட்டுகின்றார்கள். இந்தியாவின் வரலாறு தொன்மையினும் தொன்மையானது என்றாலும் உரிய சான்றுகளை அரிதினும் அரிதாகத்தான் காப்பாற்றி வைத்திருக்கிறோம். கிரேக்க உரோமானிய எகிப்தியச் சான்றுகள் தத்தம் பழைமையை உரக்க அறிவிக்கின்றன.

தமிழர்களின் வரலாற்று உருக்கள் பல கடற்கோள்களால் கொள்ளை போய்விட்டன. தமிழ் வேந்தர்களிடையே தீராப்பகையும் உறவும் தொடர்ந்து நிலவின. பகை முற்றியபோது ஒருவர்க்கொருவர் படையெடுத்து அழித்தனர். சோழநாட்டைப் பாண்டியன் கைப்பற்றினால் அவனுடைய அனைத்துக் கட்டுமானங்களையும் சான்றுகளையும் எச்சங்களையும் முற்றாக அழித்துவிட்டுத்தான் அகல்வான். தோற்றுப்போன மன்னனின் தலைநகரையும் மாளிகைகளையும் பகை வேந்தர்கள் தீக்கிரையாக்கினர். முற்றாக நொறுக்கித் தரைமட்டமாக்கினர். கோநகரத்தை ஏர்பூட்டி உழுது எள்விதைத்துவிட்டு எருக்கு நட்டுவிட்டு நகர்வார்களாம். திருக்குறளும் அதைத்தான் சொல்கிறது “தீயிலும் பகையிலும் மீதம் வைக்காதே” என்கிறது.
அத்தகைய கொடும்பகைகளால்தாம் நம் வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் காணாமற் போயின. தென்னிலத்தில் நடந்த கடைசிப் போர் வரைக்கும் அத்தகைய அழித்தொழிப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. பகை நாடுகளைக் கைப்பற்றிக் காப்பதில் முனைப்பு காட்டிய ஆங்கிலேயர்கள்கூட திப்பு சுல்தானின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
நம் வரலாற்றை உரிய தரவுகளோடு எடுத்து இயம்புவதற்கு நம்மிடமுள்ள பழஞ்சான்றுகளில் முதன்மையானது தமிழ் மொழிதான். நம் மொழியின் இலக்கண இலக்கிய நூல்கள்தாம். முந்திய தலைமுறையின் இடையறாத கண்ணியாக வாழும் நம் தொன்மைப் பண்பாடுகள்தாம். எப்படியோ மண்ணுக்குள் மூழ்கிப்போனதால் காலத்திடமிருந்து அழியாமல் காப்பாற்றப்பட்ட அகழ்வாய்வுப் பொருள்கள்தாம். இறைப்பெயரால் எஞ்சி நின்ற கோவில்களும் அவற்றில் துலங்கும் கல்வெட்டுகளும்தாம்.

நம் வரலாற்றைக் கூறுகின்ற வலிமையான சான்றுகள் அனைத்தையும் காலத்திடம் தோற்றுவிட்டு நிற்பதைத் தமக்கு ஏதுவாகப் பயன்படுத்திகொள்வோர் சிலர் நம் தொன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தொடர்ந்து நடந்தது. அண்மைக்கால வரலாற்றில்கூட பல்வேறு திரிபுகள் மறைப்புகள் புறக்கணித்தல்கள் இருக்கையில் பழந்தொன்மையின்மீது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் ஒரு கருதுகோளை அரைகுறைச் சான்றுகளோடு முன்வைத்துவிடலாம். அவர்கள் எழுப்புவது வெற்று ஐயப்பாடு என்றாலும் அதைத் தகர்க்க நாம் சான்றுகளோடு போய் நின்றாக வேண்டும்.
அப்படி எழுப்பப்பட்ட ஐயங்களில் ஒன்று இஃது. “பழந்தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்கள் என்னும் மூவேந்தர்கள் இருந்தார்கள் என்பதற்கு என்ன சான்று?” என்று கேட்டார்கள். அவர்கள் குறுநில மன்னர்களாகவே இருந்திருக்கக்கூடும் என்று சொல்லத் துணிந்தனர். அத்தகைய வரலாற்றுத் தகர்ச்சிக்கு விடையாக நமக்குக் கிடைத்த தொல்பழஞ்சான்று இன்று நான் வந்திருக்கும் உதயகிரிக் குன்றத்தில் இருக்கிறது.
உதயகிரிக் குன்றில் உள்ள பதினெட்டுக் குகைகளில் மிகப் பெரியது ஹாத்தி கும்பாக் குகையாகும். “ஹாத்தி கும்பா” என்றால் யானைக்குகை என்பது பொருள். யானைகள் வந்து நின்று இளைப்பாறத் தக்கதாயுள்ள பெருங்குகை அது. அந்தக் குகையின் நெற்றிப் பகுதியில் பிராகிருத மொழியில் பிராமி எழுத்துகளில் பதினேழு வரிகளாலான மாபெரும் கல்வெட்டு எழுதப்பட்டிருக்கிறது.
கிமு இரண்டாம் நூற்றாண்டில் மாமன்னர் அசோகருக்குப் பிறகு கலிங்கத்தை ஆண்ட பேரரசன் காரவேலன் என்பவன் செதுக்கிய புகழ்பெற்ற கல்வெட்டு அஃது. தரையிலிருந்து யாரும் தொட்டுவிட முடியாதபடி ஹாத்திக் கும்பாக் குகையின் நெற்றிப் பகுதிபோல் அமைந்த மேல்விளிம்புப் பாறையில் அக்கல்லெழுத்துகள் செதுக்கப்பட்டிருந்தமையால் அவை சிதைவுக்குத் தப்பிவிட்டன. அந்தப் பதினேழு வரிகளும் காரவேலனின் ஆட்சிப் பெருமையையும் அக்கால நிலைமைகளையும் பறை சாற்றுகின்றன.
பதினேழு வரிகளில் ஓரிடத்தில் “தமிர தேக சங்காத்தம்” என்றொரு சொற்றொடர் வருகிறது. “தமிழ் மன்னர்களின் கூட்டணி” என்ற பொருள்படும் அத்தொடர்தான் பழந்தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மூவேந்தர்கள் ஒற்றுமையாக ஆட்சி செய்தனர் என்பதை விளக்கும் சொற்றொடராகும். பிராகிருதத்தில் 'தமிர’ என்பது தமிழைக் குறிக்கும். தமிர => த்ரமில => த்மில => தமிழ என்பதுதான் தமிழ் என்னும் சொல் தோற்றத்தின் வழி. தமிழ் என்பதற்கும் அன்றைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் என்பதற்கும் நமக்குக் கிடைத்துள்ள பழைமையினும் பழைய கல்வெட்டு இஃதே. நம் கலிங்கப் பயணத்தின் பெருநோக்கமும் இக்கல்வெட்டைக் காண்பதே.
[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57]