• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிங்கம் காண்போம் - பகுதி 57 - பரவசமூட்டும் பயணத்தொடர்

By Ka Magideswaran
Google Oneindia Tamil News

-கவிஞர் மகுடேசுவரன்

ஹாத்தி கும்பாக் குகையானது நன்கு வாய்திறந்தவாறு அமைந்திருக்கிறது. தென்கிழக்கைப் பார்த்தவாறு அதன் முகப்பு. யானைக்கூட்டம் உள்ளே சென்று இளைப்பாறலாம். யானைக்கூட்டம் நின்ற காரணத்தினால்தான் யானைக்குகை என்னும் பொருள்பட அப்பெயர் தோன்றியது.

குகையின் வடிவம் அரைவட்டமாய் இருப்பதால் உள்ளே ஒளிந்துகொள்வதற்கு வழியில்லை. அமர்வதற்குக் கற்படுக்கைகள் இருக்கின்றன. திண்ணை வடிவிலான செதுக்கங்களும் உள்ளன. அந்தக் குகையின் நெற்றியில்தான் காரவேலன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

exploring- odissa kalingam

சந்திரகுப்த மௌரியர் கிமு 321இல் அரியணை ஏறினார். கிமு 273 முதல் கிமு 232 அவரை அசோகரின் காலம். அசோகருக்குப் பிறகு மௌரியப் பேரரசர்கள் வலிமை குன்றினர். அந்நேரத்தில் மகாமேகவாகன அரசர் மரபுவழி கலிங்கத்தின் அரசராக முடிசூட்டிக்கொண்டவர் காரவேலர். இவர் கிமு. 172ஆம் ஆண்டில் அரியணை ஏறியிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.

ஹாத்திக்கும்பாக் கல்வெட்டானது கிமு. 150ஆன் ஆண்டுவாக்கில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். இதுவரை கண்டறியப்பட்ட இந்தியக் கல்வெட்டுகளிலேயே முழுமையும் தெளிவும் நிரம்பிய பெருங்கல்வெட்டு இஃதே. கல்வெட்டைப் படித்துப் பார்த்தவர்கள் வியப்பின் கொடுமுடிக்கே சென்றுவிட்டார்கள்.

குசராத்து அல்லது மகாராட்டிரப் பகுதியிலிருந்த மூத்த முனி ஒருவர் இக்கல்வெட்டினைச் செதுக்குவதற்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பதினேழு வரிகளின் பிழிவை அறிந்தாலே நமக்கு மெய்சிலிர்க்கிறது.

அருகர் தாள் போற்றி, சித்தர் தாள்போற்றி என்று தொடங்கும் அக்கல்வெட்டு சேதராசமரபின் வழி மகாமேகவாகன அரசின் வழித்தோன்றல் நான்கு திசையோரும் நயக்கும் நற்பண்புகள் மிக்கவர், கலிங்காதிபதி காரவேலனார் எழுதச் செய்தது என்று தொடங்குகிறது. சிவந்த உடலைப் பெற்றவர். ஒன்பது ஆண்டுகள் பட்டத்து இளவரசராக இருந்தவர். அரசு உரையாடல், நாணயவியல், கணக்கியல், பொதுச்சட்டம், மதஞானம் ஆகிய அனைத்துக் கல்வி கேள்விகளிலும் தேர்ச்சி பெற்றுத் தம் இருபத்து நான்காம் அகவை முதிர்ந்தவுடன் கலிங்கப் பேரரசு மரபின் மூன்றாம் மன்னராக முடிசூடிக்கொண்டார்.

முதலாம் ஆட்சியாண்டில் புயலினால் சேதமடைந்திருந்த கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வீடுமனைகள், கதவுகள் என அனைத்தையும் பழுது பார்த்துச் செம்மைப்படுத்தினார். ஏரி குளங்களையும் நீர்த்தடாகங்களையும் கரையெடுப்பித்துப் புதுப்பித்தார். அதற்காக முப்பத்து ஐந்து நூறாயிரம் காசுகள் செலவிட்டு மக்கள் மனத்தைக் குளிர்வித்தார். தமது தேர், குதிரை, யானை, காலாட்படையினரோடு அண்டையிலாண்ட சாதவாகவ மன்னன் சாதகரிணியைப் பொருட்படுத்தாமல் மேற்குத் தேயங்கள்மீது படையெடுத்து கன்னபெண்ணை ஆற்றின் மூசிக நகரத்தைக் கலங்கடித்தார்.

மன்னர் கந்தர்வ கானத்தில் தேர்ந்தவர். மக்கள் விழாக்களில் ஆடல்கள், பாடல்கள், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வித்தார். நான்காம் ஆட்சியாண்டில் ரதிக போஜக மன்னர்களைப் பணியச் செய்தார். நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகர்க்கு நீட்டுவித்தார். ராஜசுய வேள்வி மேற்கொள்கையில் எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி நாட்டுக்கும் நகரத்துக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார்.

எட்டாம் ஆட்சியாண்டில் கோரதகிரியைச் சூறையாடி இராஜகிருகத்துக்கு நெருக்கடி கொடுத்தார். மதுரா நகருக்குப் பின்வாங்கியிருந்த யவன மன்னன் இச்செய்திகேட்டு அதிர்ச்சியுற்றார். கற்பகமரம் நிறைந்திருப்பதைப்போல் தம்மிடம் பெருகியிருந்த யானை, குதிரை, தேர்களை அனைவர்க்கும் பரிசளித்தார். முப்பத்தெண்ணூறாயிரம் காசு செலவிட்டு வெற்றியைக் கொண்டாடும்படி அரண்மனையைக் கட்டுவித்தார். ஆவா அரசர்களின் பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கைப்பற்றி கழுதைகள் பூட்டிய பூர்பூட்டி உழுது அழித்தார்.

பதின்மூன்று நூற்றாண்டுகளாக தம் மக்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்த அச்சுறுத்தலாக விளங்கிய தமிழ் மூவேந்தர்களின் கூட்டணியை முழுவதுமாக உடைத்தார். மகத அரசமனைக்குள் தம் யானைகளை அனுப்பி மிரள வைத்து மகத மன்னனைக் கால்பணிய வைத்தார். பாண்டிய மன்னனை வென்று அவனிடமிருந்து யானைகள், குதிரைகள், இரத்தினங்கள், மாணிக்க வைடூரியங்கள், முத்துகள் ஆகியவற்றைத் திறையாகச் செலுத்தச் செய்தார். இவ்வாறு மேலும் மேலும் செல்லும் கல்வெட்டு அரசர் நற்பண்புகளில் செம்மையானவர். மக்கட் தொகுதியை மதிப்பவர் என்று முடிகிறது.

பதின்மூன்று நூற்றாண்டுகளாக ஒன்றுபட்டிருந்த தமிழ் மூவேந்தர்களின் ஒற்றுமையைக் (தமிர தேக சங்காத்தம் என்கிறது கல்வெட்டு) குலைத்து பாண்டிய மன்னனை வென்று திறை கட்டச் செய்தார் என்னும் செய்திதான் நம் தமிழ் நிலத்தின் மூவேந்தர்களைப் பற்றிய வன்மையான சான்றானது.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58]

English summary
Travel Series about Odissa, Kalingam, Historic Places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X