For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிங்கம் காண்போம் - பகுதி 64 - பரவசமூட்டும் பயணத்தொடர்

By Ka Magideswaran
Google Oneindia Tamil News

-கவிஞர் மகுடேசுவரன்

வாராவதிக் கோட்டைக்கு உள்ளேயும் குடியிருப்புப் பகுதிகள் இருக்கின்றன. கோட்டை முகப்பில் நின்றுகொண்டிருந்தபோது உள்ளிருக்கும் குடியிருப்பிலிருந்து இளைஞர்களும் சிறுவர்களும் வெளியேறிக்கொண்டிருந்தனர். எதிரே மிகப்பெரிய வெற்றுத்திடலொன்று சாலைகளால் கூறு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் வண்டிகள் நின்றன. கால்நடைகள் மேய்ந்தன. பொருட்காட்சி போன்றவற்றையும் இசைவு பெற்று நடத்துவார்கள் என்று நினைக்கிறேன். எப்படியோ அப்பெரும்பரப்பு சென்னையின் தீவுத்திடல்போல மக்களுக்குப் பயன்படுகிறது.

முன்னொரு காலத்தில் கோட்டைக்கு முன்நிலமாக இருந்தபொழுது அங்கே படையணிகளை நிறுத்தி வைத்திருக்கக்கூடும் என்று கணிக்கிறேன். கோட்டையிலிருந்து வெளியே வந்த சிறுவர்கள் அத்திடற்பகுதிக்குச் சென்று விளையாடத் தொடங்கினர். அவர்களுடைய விளையாட்டை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நூற்றிரண்டு ஏக்கர் பரப்பளவிலான கோட்டை என்பதால் அதனுள்ளே அரசு அலுவலகங்கள் பலவும் செயல்படுகின்றன. அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் அடுக்குமாடிக் கட்டடம் இருந்திருக்கிறது என்று கூறினேனில்லையா… அது அரண்மனையாக இருப்பின் அக்காலத்தின் உயரமான கட்டடங்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்பாகவே கட்டப்பட்டிருக்கும் என்பதும் உறுதி. ஆற்றங்கரையோரத்தில் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட கட்டடம் என்பது அக்காலத்தில் வியப்புக்குரிய கட்டுமான முயற்சியே.

exploring odissa kalingam 64

வாராவதிக் கோட்டைக்குள் கட்டப்பட்ட கட்டடங்கள் எளிதில் பொரியும் தன்மையுள்ள சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுவிட்டன. அதனால்தான் அந்தக் கட்டடங்கள் காற்றினாலும் நீரினாலும் அரிப்புக்குள்ளாகியபின் தேய்மானம் அடைந்திருக்க வேண்டும். அந்தத் தேய்மானமே கோட்டையின் பெரும் பெரும் கட்டடங்களின் சிதைவுகளுக்குக் காரணமாகிவிட்டது. எளிதில் பொரியும் தன்மை இல்லாத கடினமான கற்களைக் கொண்டு கட்டியிருந்தால் அவை நிலைத்து நின்றிருக்கும். கோட்டைக்கு உள்ளேயும் மூன்றோ நான்கோ விளையாட்டுத் திடல்கள் இருக்கின்றன. விளையாட்டுப் பயிற்சிப் பள்ளிகளும் இருக்கின்றன. ஜவகர்லால் நேரு பெயரில் விளையாட்டு உள்ளரங்கமும் உண்டு. கோட்டையைச் சுற்றி வருமாறு மகாநதியின் தண்ணீரைத் திருப்பிவிட முடியும். அத்தண்ணீரே அகழிக்குள் நிறைகிறது. அகழி நிறைந்ததும் தண்ணீர் வெளியேறுவதற்கும் வழி இருக்கிறது. நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இப்பொழுது அகழியின் பெரும்பகுதி சாக்கடையாக மாறி நாறுகிறது. அகழிக்குள் ஆங்காங்கே நீர் தேங்கியிருந்தாலும் அவ்விடங்களில் களைகள் பெருகிவிட்டன.

கோட்டைக்குள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறிய சிறுவர்களோடு நான் பேச முயன்றேன். எங்கள் மொழிகள் இருவர்க்கும் பயன்படவில்லை. குறிப்பினால் பேசிக்கொண்டோம். எதிரே ஓடிக்கொண்டிருக்கும் பேராற்றில் குளிக்கலாமா என்று கேட்டதற்கு இசைவு தெரிவித்தனர். அவர்களுடன் படம் எடுத்துக்கொண்டேன். கோட்டையை விட்டு வெளியே வந்தால் பரந்த நிலப்பரப்பு. சிறுவர்கள் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டி நோக்கியதும் தெரிந்தது மட்டைப் பந்துக்குப் புகழ்பெற்ற கட்டாக் விளையாட்டுத் திடல்.

exploring odissa kalingam 64

செய்திகளில் பலதடவை கேள்விப்பட்டும் நேரலையில் பார்த்தும் மகிழ்ந்த வாராவதி மட்டைப் பந்து மைதானம். வாராவதித் திடலானது நாட்டின் பெரிய விளையாட்டுத் திடல்களில் ஒன்று. ஞாலத்தளவில் பல்வேறு தரங்களை வைத்துப் போடப்படும் பட்டியல்களில் முதற்பத்துக்குள் எப்போதும் வருவது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட திடல் என்பதால் மிகப்பழமையானதும்கூட. இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் அன்றைய மட்டையாளர் 'திலிப் வெங்சர்க்கார்’ நூற்று அறுபத்தாறு ஓட்டங்களைக் குவித்தது இங்கேதான். கால்பந்துப் போட்டிகளும் நடப்பதுண்டு. தற்போது ஓடிய மட்டைப்பந்துச் சங்கத்து நிர்வாகத்தின் கீழிருக்கும் இம்மைதானம் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கான சிறப்பான தகுநிலைகளைக் காப்பாற்றி வருகிறது. முதற்பார்வையிலேயே பெரும் வட்டமாக காட்சி அளித்தது அந்தத் திடல். போட்டி நடக்கையில் அவ்விடம் பரபரப்பாக இருக்கக்கூடும். திடலைச் சுற்றிலும் நாய்களும் பன்றிகளும் படுத்திருந்தன. நமக்கு நேரமாகிவிட்டது. மகாநதியை நோக்கி நடந்தேன்.

-தொடரும்

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64]

English summary
Travel Series about Odissa, Kalingam, Historic Places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X