For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிங்கம் காண்போம் - பகுதி 67 - பரவசமூட்டும் பயணத்தொடர்

Google Oneindia Tamil News

- கவிஞர் மகுடேசுவரன்

மகாநதியின் நீர்ப்பரப்பை நெருங்கி நின்றேன். பாதத்திற்கு அடியில் புதையும் வெண்மணல் மிதமான பஞ்சாகக் குழைந்தது. ஓரத்தில் நீர்ப்போக்கு இல்லாமல் தேங்கியிருந்த இடங்களில் குப்பைகளும் இருந்தன. இந்நதிக்குக் குப்பை என்பது பொருந்தாச் சொல். ஒரு நகர்வில் அனைத்தையும் அரைத்துக் கூழாக்கி மீனுக்குத் தின்னத் தந்துவிடும். இப்போதைக்கு நீராய்த் தேங்கியிருப்பது அந்தப் படுகையின்மீது ஏற்பட்ட இரக்கத்தால் இருக்கக்கூடும்.

ஆற்று நீரும் கரைமணலும் உரசிக்கொண்டிருக்கும் விளிம்பின் வழியாகப் பார்த்து நடந்ததில் ஆற்றுக்குள் பெரும்பகுதி கடந்துவிட்டோம். நமக்கு முன்னுள்ள மணற்பாங்கு கால் வைத்து நடப்பதற்குப் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்து உதவுமாறு ஞமலியொன்று முன்னடந்தது. அது நம்மைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடப்பதை வைத்துப் பார்க்கையில் அதற்கு ஏதோ அச்சம் பீடித்திருக்க வேண்டும். அதனாற்றான் நம்மிடமிருந்து விலகி நடந்து செல்கிறது. நாம் அதனை விடாமல் பின்தொடர்ந்தோம்.

exploring odissa kalingam

நதிப்படுகையில் நாற்பது விழுக்காட்டுப் பரப்புக்குத்தான் நீர் தேங்கியிருக்கிறது. அந்நிலையிலேயே எதிர்க்கரை மெல்லிய கோடாகத்தான் தெரிந்தது. திருச்சிராப்பள்ளிக்குப் பக்கத்தில் காவிரி ஆற்றின் எதிர்க்கரையை நோக்கினால் கரைவரிசைத் தென்னைகள் மெல்லிய கோடாகத் தெரியும். கோதாவரியில் இராஜமகேந்திரபுரம் எனப்படுகின்ற இராஜமுந்திரியிலிருந்து பார்த்தால் எதிர்க்கரை கண்ணுக்கே புலப்படாது. அவற்றோடு நோக்குகையில் மகாநதியின் எதிர்க்கரை பார்வைக்கு எட்டுமளவுக்கேனும் தட்டுப்படுகிறதே என்று ஆறுதல் அடையலாம். மகாநதியின் அகன்ற படுகைப் பரப்பு கட்டாக்குப் பகுதியில் இருப்பதுதான். கட்டாக்குக்கு முன்பாக அந்நதி கிழக்குத் தொடர்ச்சி மலைக்கணவாய்களில் புகுந்து வருவதால் ஆழமும் சரிவும் கொண்டிருப்பதைப்போல் அகன்று இருப்பதில்லை. கட்டாக்கிலிருந்து கிளையாறுகளாய்ப் பிரிந்து விடுவதால் அதன் பிறகு இவ்வளவு அகலத்தை எதிர்பார்ப்பதற்கில்லை.

தண்ணீரும் மணற்கரையும் தாளமிடும் நதியோரத்திலேயே சென்றுகொண்டிருந்தோம். தொலைவில் நான்கைந்து இளைஞர்கள் ஆற்றில் இறங்கி நீராடிக்கொண்டிருந்தனர். அவர்கள் குளிக்குமிடத்தில் குளிப்பதுதான் பாதுகாப்பானது என்பது விளங்கிற்று. இளைஞர் கூட்டத்தை நோக்கி நடந்தோம். அவர்களைக் கண்டுவிட்டதை அறிந்ததைப்போல் நமக்கு வழிகாட்டும் தடத்தைவிட்டு நீங்கியது நாய். நாம் சென்றபோது இளைஞர்கள் குளித்து முடித்திருந்தனர். நாம் அவர்களை அடைந்து "இங்கே குளிக்கலாமா ?" என்று கைச்சைகையால் கேட்டோம். இசைவைக் குறிக்கும் விதமாய்த் தலையாட்டினர். அவ்வளவுதான். உடைகளைக் களைந்து வீசினேன். முதலிரவுக்கு உள்ளே விட்டு கதவடைத்ததைப் போன்ற பரபரப்பு தொற்றியது.

exploring odissa kalingam

நேராகச் சென்று ஆற்றுக்குள் இறங்கினேன். ஆற்றின் மேற்பரப்பில் சற்றே இளஞ்சூடு. கீழே தண்ணென்ற குளிர்ச்சி. நீர்ப்பரப்பு தேங்கியிருந்த பகுதியில் அடர்ந்த பாசிகளும் முளைத்திருந்தன. மணலில் நுண்பாசிகள் படிந்திருந்தன. ஆற்றுக்குள் நூறடி நடந்த பிறகும் இடுப்பளவுத் தண்ணீரே இருந்தது. அவ்விடத்திலேயே அமர்ந்துவிட்டேன்.

தொலைவில் இரண்டு எருமைக் கூட்டங்கள் "அம்மா அம்மா" என்று கத்திக்கொண்டிருந்தன. ஓர் எருமைக் கூட்டம் கத்தி முடித்ததும் அக்கரையிலிருந்து ஆற்றுக்குள் இறங்கி நடக்கத் தொடங்கியது. எருமைக் கூட்டங்கள் மகாநதி ஆற்றைக் கடந்து சென்று அக்கரைப் பச்சையை மேய்ந்து வருகின்றன. ஆற்றில் நீர்ப்போக்கு மிதமாக இருப்பதற்கு இஃது நல்ல சான்று.

நாம் நீர்ப்பரப்பில் ஓங்கியடித்துக் கலைத்து நீராடினோம். மணற்பரப்பு மெல்லக் குழிவதாகத் தெரிந்தாலும் அப்படியே மிதந்து நீர்ப்பரப்புக்கு எழுந்து வந்துவிட வேண்டும். அப்போதுதான் நம் காலடியில் இருக்கும் புதைசேற்றுக்குள் சிக்கிக்கொள்ளாமல் காக்க முடியும். தேங்கிய நீர்ப்பரப்பு என்பதால் காலடி மணலை ஒருபோதும் நம்ப முடியாது. காலடியில் மணற்றுகள் குழிந்த நொடியில் உடலைத் தூக்கி மேற்பரப்புக்கு வந்துவிட வேண்டும். நீரடி மணலில் காலூன்றவே கூடாது. நன்கு நீச்சல் தெரிந்தவர் இம்முறையைப் பின்பற்றினால் புதைமணலில் சிக்கிக்கொள்ள வாய்ப்பே இல்லை. ஆனால், ஆற்றுக்குள் நாம் ஆற்றின் பிடியில் சிக்கிக்கொண்டவர்களே தவிர, அறிவாளிகள் ஆகமாட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆறு நம்மை ஒன்றும் செய்யாமல் விடுவிப்பதால் அங்கே பிழைத்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64 , 65 , 66, 67, 68]

English summary
Travel Series about Odissa, Kalingam, Historic Places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X