For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலிங்கம் காண்போம் - பகுதி 61 - பரவசமூட்டும் பயணத்தொடர்

By Ka Magideswaran
Google Oneindia Tamil News

-கவிஞர் மகுடேசுவரன்

முதற்பார்வைக்கே புவனேசுவரம் பிடித்துப் போனதைப்போல் கட்டாக் நகரம் பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் சில நகரங்கள் அவற்றின் பெருமைக்குப் பொருந்தாத தோற்றத்தோடு இருக்கின்றன. கட்டாக் நகரத்தையும் அந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

பழைமையான நகரம் என்பதால் தெருக்கள் யாவும் குறுகலாகவே இருக்கின்றன. தெருவுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அங்குள்ள ஐம்பத்து மூன்று தெருக்களில் ஐம்பத்திரண்டு சந்தைகள் இருப்பதால் நகரமே சந்தைக்கடையைப்போல்தான் இருக்கிறது. ஒரு நகரம் வரலாற்றுத் தொன்மையை ஏற்று நின்றால் அது புதுமையடைவது ஏதோ ஒரு புள்ளியில் நிறுத்தப்பட்டுவிடும் போலும். கிழக்கிந்தியாவின் இரண்டாவது பெரிய நகரத்திற்கு வந்திருக்கிறோம் என்பதால் கிழக்கிந்திய நகரத்தன்மை இஃதே என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.

exploring odissa kalingam part 61

தெருக்கள் குறுகலானவை என்னும் நிலையில் வண்டிப் பெருக்கத்திற்கு அளவே இல்லை. அதனால் நகரத்தின் முதன்மைத் தெருக்கள் யாவும் போக்குவரத்து நெரிந்து திணறிக்கொண்டிருக்கின்றன. நம்மூர்ப் பெருந்தெருக்களில் போக்குவரத்து முடங்கினால் சந்துபொந்துகளில் புகுந்தேனும் வெளியேறிவிடலாம். கட்டாக் நகரில் அதற்கும் வழியில்லை. சந்துபொந்துகள் எல்லாம் முன்னமேயே நெரிசலில் சிக்கிக்கொண்டு பிதுங்குகின்றன. நமக்குத்தான் பார்க்கின்றவை எல்லாம் புதியனவே தவிர, கட்டாக் நகரத்தவர்க்கு எல்லாமே பழகிப்போனவைதாம். அவர்கள் இவற்றைக் குறித்த எவ்வகைக் குறையுமின்றி வண்டிகளில் வளைந்து நெளிந்து பறக்கிறார்கள்.

நகரத்தின் நெரிசல் பகுதி என்பதால் நம்மை நடுநகர்ப் பகுதியொன்றில் இறங்கிக்கொள்ளச் சொன்னார்கள். வேறு வழியின்றி இறங்கிக்கொண்டோம். அஃதாவது நாம் இறங்கிய பகுதி பேருந்து நிறுத்தமில்லை. நம்முடைய நோக்கம் கட்டாக்கிற்குப் புறநகர்ப் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் மகாநதியில் நீராடுவதுதான்.

exploring odissa kalingam part 61

நாட்டின் எல்லாப் பேராறுகளிலும் நீராடி நீந்தி மகிழ்ந்துவிட வேண்டும் என்பதை வாழ்நாள் பெருநோக்காக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நதியிலும் நீராடிவிட்டு ஒரு கூழாங்கல்லை எடுத்துக்கொள்வேன். அந்தக் கூழாங்கல் அவ்வாற்றின் நினைவாக என்னோடு வீட்டுக்கு வந்துவிடும். வாழ்நாளெங்கும் நிலங்களில் திரிந்தாலும் ஒரு பேராற்றின் ஒரேயொரு பகுதியில்தான் நாம் நீராட முடியும். அந்நதிப்படுகையில் படுத்துக்கிடக்கும் கூழாங்கல்தான் அது வழிந்தோடிய பகுதிகள் அனைத்திலும் நீராடுகிறது. அதனால் ஒரு கூழாங்கல்லை எடுத்துக்கொண்டு வருவது என் பழக்கமாகிப்போய்விட்டது.

கைப்பேசி வரைபடத்தில் மகாநதியில் நீராடத்தக்க படித்துறைப்பகுதி தென்படுகிறதா என்று ஆராய்ந்தபோது எதுவும் தென்படவில்லை. மக்களிடம் நம் தேவையைச் சொல்லிக் கேட்க வேண்டியதுதான் என்ற முடிவின்படி ஒரு தானிழுனியாரைத் தடுத்தோம். “ரிவர் பாத்… மகாநதி… சேப் ஏரியா…” என்று கூறியதை அவர் நன்றாகவே விளங்கிக்கொண்டார். பாக்கு எச்சில் தேங்கிய வாயோடு “ஏறுங்க… நான் கொண்டுபோய் விடறேன் பாருங்க…” என்பதைப்போல் ஏதோ சொன்னார். “நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கங்க…” என்றபடி ஏறி அமர்ந்தாயிற்று.

exploring odissa kalingam part 61

அந்தத் தானிழுனியாரைக் கோவில் கட்டிக் கும்பிட வேண்டும். கட்டாக் நகரம் என்றால் என்ன என்று அவர்தான் ஏறத்தாழ முழுமையாகக் காண்பித்தார். ஓரிடத்திற்குப் போய்ச் சேர்வதென்றால் அவ்விடம் இருக்கும் திசையில்தானே செல்வோம் ? அல்லது அங்காங்கே சாலை வளைவுகளுக்கேற்ப சில செந்திருப்புகளில் திருப்புவோம். நாம் ஏறிக்கொண்ட தானிழுனியார் எட்டுத்திக்குக்கும் குறைவில்லாமல் வளைந்து மடிந்து திரும்பி திருப்பி எல்லாம் செய்தபடி நம்மைக் கொண்டு சென்றார். அந்தச் சிற்றுலாவிலேயே நகரத்தின் “அழகு” தெரிந்துவிட்டது.

exploring odissa kalingam part 61

கிழக்கிந்திய நகரங்கள் மக்கள் தொகைப் பெருக்கத்தால் அடைந்திருக்கும் நிலையைப் படம்பிடிக்க வேண்டுமென்றால் கட்டாக் நகரத்திற்கு வரலாம். நகரத்தின் இந்தக் கோலத்திற்கு ஏழ்மையைக் காரணம் காட்ட முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் கட்டாக் நகரம்தான் ஒடியாவின் வாணிபத் தலைநகரம். பொருட்புழக்கமுள்ள நகரத்திலேயே இந்நிலை என்றால் பிற சிறு நகரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஒருவேளை நமக்குத்தான் வெறும் பார்வைக்கு இப்படித் தெரிகிறதோ என்னவோ ! முதற்பார்வையில் நாம் பார்ப்பது அந்நகரத்தின் உடலைத்தான். உண்மையில் கட்டாக் நகரத்தின் உயிரும் உள்ளமும் நாம் நினைத்ததற்கு மாறாகவும் இருக்கலாம்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62]

English summary
Travel Series about Odissa, Kalingam, Historic Places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X