For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபெட்னா 2017: வடஅமெரிக்க தமிழ்ப்பேரவை விழா... சிறப்பு விருந்தினராக 'காலச்சுவடு' சுகுமாரன் பங்கேற்பு

வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டா தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30வது பேரவைத் தமிழ் விழா வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதில் சிறப்பு விருந்தினராக 'காலச்சுவடு' சுகுமாரன் பங்கேற்கிறார்.

By Devarajan
Google Oneindia Tamil News

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டா தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக 'காலச்சுவடு' சுகுமாரன் கலந்து கொண்டு கலை இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.

சுகுமாரன், 1957ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பயின்றார். தமிழ் வார இதழ்களிலும், தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து தற்போது காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.

FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, kalachuvadu sugumaran is a Chief guest.

இவர், கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், புதினங்கள், மற்றும் முன்னுரைகள் மூலம் இலக்கியத்திற்கு பல பங்களிப்புகளை சுகுமாரன் செய்துள்ளார்.

இவரது கவிதைத் தொகுப்பான 'கோடைக்காலக் குறிப்புகள்', பிரமீள், ஆத்மாநாமிற்குப் பிறகு வந்த தலைமுறைகளைப் பாதித்த அரிய தொகுப்பாகும். அவரது புதினமான 'வெல்லிங்டன்' காலனீய வரலாறு மட்டுமன்றி, அக்கா-தம்பி உறவை தமிழ்ச்சூழலின் பிரத்யேகத் தன்மைக்கேற்ப அலசுகிற கலைப் படைப்பு.

மலையாள இலக்கிய உலகின் மிகப் பெரிய ஆளுமைகளான வைக்கம் முகம்மது பஷீர், சச்சிதானந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், சக்கரியா போன்றவர்களின் படைப்புகள், சுகுமாரனின் உன்னத மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளன.

ஆங்கிலத்தில் இருந்து இவர் மொழி பெயர்த்த படைப்புகளில் 'பாப்லோ நெரூதா கவிதைகள்', 'அஸீஸ் பே சம்பவம்' போன்றவை குறிப்பிடத்தக்கவை. சமீபத்தில் வெளிவந்த மார்கெஸின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' மற்றும் 'பட்டு' ஆகியன நிகரில்லாதவை.

தமிழ் இலக்கிய உலகில் 40 வருடங்களுக்கும் மேலாக, தனது இலக்கியப் பணிகளில் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சுகுமாரன் அவர்களுடைய அறுபதாவது வயது நிறைவினையொட்டி கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையினர் நடத்திய 'கவிஞர் சுகுமாரன் - 60' எனும் கருத்தரங்கில் அவரது படைப்புகளின் மீதான ஆய்வு அண்மையில் நடத்தப்பட்டது.

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்??

கவிஞர் சுகுமாரனுடைய இந்தப் பிரபலமான கவிதை, நவீன இலக்கியத்தில் படிமத்துக்கு அழகு சேர்க்கிற, வெகுவாகப் பேசப்படுகிற கவிதைகளுள் ஒன்றாகும்.

நதி என்பது பேரண்டமாகவும் கையளவு தண்ணீர் என்பது பேரண்டத்தின் ஒரு சிறு கூறான உயிராகவும் இருந்து அது மீண்டும் பேரண்டத்திலேயே கரைந்து போகிறதெனப் படிமமாக்கி மனத்தைத் தன் எளிமையான வரிகளால் உலுக்கிப் போடுகிறார் கவிஞர் சுகுமாரன்.

இதையே இன்னொரு வாசகன், கையால் அள்ளப்பட்ட நீரைச் செடிக்கு வார்க்க, அந்த நீரை மேகம் கொண்டு, மழையாகப் பெய்து மீண்டும் நதிக்கே வந்து சேர்கிறதெனப் புரிந்து கொள்கிறான். எப்படிப் பார்த்தாலும் சுழற்சியையே கருவாய்க் கொண்டிருக்கிறது இந்தக் கவிதை.

நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட
பற்றி எரிவது மேல்
ஒரு கணம் எனினும்!!

சமூகமாற்றத்துக்கான கனவுகளுக்கும் யதார்த்தத்துக்குமான பெருத்த இடைவெளியில் மனம் துவளும் நேரங்களிலெல்லாம் சாமான்யனைத் தூக்கி நிறுத்துவதாக அமைந்திருக்கிறது கவிஞரின் இந்தக் கவிதை.

ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் கவிஞர் சுகுமாரனோடு நீங்களுமிருந்து இலக்கியச்சுவை பருகலாம். அமெரிக்கத் தமிழர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Kalachuvadu Sugumaran is a Chief guest at Minneapolis Convention Center in Minnesota.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X