For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடா உலகத் தொல்காப்பிய மன்ற கருத்தரங்கம்.. சிறப்புற நடந்த முதல் நாள் நிகழ்வுகள்!

Google Oneindia Tamil News

டோரண்டோ: கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 04.06.2016 காலை 9.15 மணியளவில் தொடங்கியது.

முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது. முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

First day events of Canada Tholkappiya Mandram seminar

கனடாவின் கல்வித்துறை - தமிழ், அதிகாரி பொ. விவேகானந்தன் அவர்கள் அன்பின் ஐந்திணை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் வெட்சித்திணை என்ற தலைப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். க.குமரகுரு அவர்கள் தொல்காப்பியம் செப்பும் செய்யுள் உறுப்புகளும் பா வகைகளும் என்ற தலைப்பில் அரியதோர் ஆய்வுரை வழங்கினார். லோகா இரவிச்சந்திரன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் இசையும் இசைப்பண்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் ஆசிரியர் மாணவர் என்ற தலைப்பில் உரை வழங்கி மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிட்டார். முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கம் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

யோகரத்தினம் செல்லையா அவர்கள் தொல்காப்பியம் சுட்டும் நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் சிறப்பான உரை வழங்கினார்.

பிற்பகல் 3 மணிக்கு அமைந்த இரண்டாவது செயல் அமர்வில் சுகந்தன் வல்லிபுரம் அவர்கள் கணினித் தமிழும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.

சிவபாலு அவர்கள் மரபுப்பெயர்கள் என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்து அரிய உரை வழங்கினார். செல்வி மேரி கியூரி போல் அவர்கள் உடற்கூறியலும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் 'உந்தி முதலா முந்து வளி' என்னும் நூற்பா அடியை விளக்கி அவையினரின் பாராட்டினைப் பெற்றார். முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள் அரிஸ்டாட்டிலும் தொல்காப்பியரும் - உயிரினப் பாகுபாடு என்ற தலைப்பில் சிறப்பாக உரை வழங்கினார்.

அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நூல்களின் ஒப்பாய்வு என்ற தலைப்பில் சிந்திக்கத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்தார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் பண்டைத் தமிழர் அரசியல் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மருதுவர் இலம்போதரன் அவர்கள் கலந்துகொண்டு தொல்காப்பியமும் எழுத்துக்களின் பிறப்பும் என்ற தலைப்பில் தம் மருத்துவப் பட்டறிவுகொண்டு அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். திருமதி கவிதா இராமநாதன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் மக்கள் சமுதாயம் என்ற தலைப்பில் சிறந்த செய்திகளை அவைக்கு வழங்கினார்.

கார்த்திகா மகாதேவன் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு முதல்நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. கனடாவில் வாழும் தமிழன்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தி: முனைவர் மு இளங்கோவன்

English summary
A roud up on the first day events of Canada Tholkappiya Mandram seminar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X