For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகப்பூச்சும் மனப்பூச்சும்.. கனத்துப் போகும் இதயம்!

Google Oneindia Tamil News

- எழுத்தாளர் லதா சரவணன்

நம்மையே மறந்து நாம் செயல்படும் சில விஷயங்கள் நமக்கு எத்தனை துன்பத்தைத் தருகின்றன என்பதை பல நேரங்களில் நாம் அறிவதில்லை. அப்படித்தான் இன்று நம் மனதை திசை திருப்பிட அநேக விஷயங்கள் நம்மிடையே கொட்டிக் கிடக்கின்றன.

வரவேற்பறையில் தொலைக்காட்சி, அலுவலகத்தில் கணிப்பொறியும், கணக்குகள் அடங்கிய கோப்புகளும், படுக்கையறையில் மொபைல் போன்கள் என இன்று நம் மனச்சிதைவிற்கும், சீரழிவிற்கும் அநேக விஷயங்கள் காரணமாக அமைந்திருக்கின்றன.

நாம் எப்படி நம்மை மறந்து அதில் மூழ்கிக் கிடக்கிறோம் என்பதை வைத்துதான் இன்றைய வியாபார சந்தையே ஜரூராக இயங்கிக்கொண்டு இருக்கிறது. யோசித்துப் பாருங்கள் நம்முடைய தேவைகளும் ஆசைகளும் அதிகரிப்பதால் தான் நம்மைச் சுற்றி உலகமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிறார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்பட்டால் தான் நாம் வாழ்வில் வெற்றியை அடைய முடியும் என்கிறார் ஜத்குரு என்னும் துறவி.

Hardening the hearts

கொள்கைகளும், கோட்பாடுகளும் மாறுபடுவதைப் போல நம் அன்றாட வாழ்க்கையிலும் சில விஷயங்கள் நம்மை எப்படி நிதர்சனத்தை மறக்கடிக்கின்றன என்பதை நாம் அறிந்திருப்போம்.

ஆதித்யா சேனலில் ஒரு காட்சி, முன்பு ஒரு நகைச்சுவை நடிகர் நடித்தது. அதில் அவர் ஒரு ஆட்டோ ஓட்டுநராக வருகிறார். வேகமாக வந்து ஆட்டோவில் சவாரிக்கு கேட்கும் நான்கு பெண்கள் யாரோ ஒரு பெண்ணிற்கு அடிபட்டு விட்டது என்று காரசாரமாக பேசிக்கொள்கிறார்கள். அவரும் கஷ்டப்பட்டு ஆட்டோ ஓட்டி வருகிறார். இறங்குகையில் யார் அந்த பெண் என்று கேட்டிட அது சீரியலில் வரும் கதாபாத்திரம் என்று சொல்ல அதன்பிறகு அதே ஆட்டோவை வைத்துக்கொண்டு அந்த பெண்களை விரட்டுவதைப் போல காட்சியமைந்து இருக்கும். வெகு சிரிப்பான காட்சியென்றாலும் இப்போது நகல் எது அசல் எது என்றே தெரியாத அளவிற்குத்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு உதாரணம் இல்லையா.

மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களைப் போல நமது வாழ்க்கை அமைந்துவிட்டது. ஒரு பெரிய வளாகத்தின் டிக்கெட் கவுண்டரில் இரண்டு விதமான பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு பலகையில் அவசரம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று எழுதியிருந்தது. ஒரு பக்கத்தில் அவசரம் இல்லாதவர்களுக்கு மட்டும் என்று எழுதியிருந்தது. கவுண்டர் திறந்தபிறகு மக்கள் வழக்கம் போல் முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்றார்கள். அவசரம் உள்ளவர்கள் வரிசையில் கிட்டத்தட்ட 100 பேர் அவசரம் இல்லாதவர்கள் வரிசையில் இரண்டே பேர்தான். இப்படித்தான் நம் செயல்பாடுகள் நம்மை கையில் எடுத்துக்கொள்கின்றன. எது நமக்கு வசதி என்று பார்க்கிறோமோ தவிர எதை வெகு சுலபமாக நாம் சென்றடைய உதவும் என்பதை பார்க்கத் தவறிவிடுகிறோம். அப்படித் தவறுவதால் நாம் நம் நிம்மதியை இழக்கிறோம், செயல்களில் தடுமாறுகிறோம்.

ஒரு விழாவில் பேசிய பொன்னம்பல அடிகளார் ஒரு கதையைச் சொன்னார். ஒரு பெண்மணி அழகு நிலையத்திற்குப் போய்விட்டு திரும்பி வருகிறார். தன் இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் அவருக்கு விபத்து ஏற்பட்டு விடுகிறது. எமன் அவரை அழைத்துச் செல்ல வருகிறான். வரவு செலவு கணக்குப் பார்க்கும் போது தவறுதலாக அந்தப்பெண்ணை அழைத்து வந்து விட்டது தெரிகிறது. மன்னித்துவிடு அம்மா சிறு பெயர் குழப்பம் தெரியாமல் உன்னை அழைத்து வந்துவிட்டேன் என்கிறார். அந்தப்பெண்மணியும் உயிரோடு பூலோகம் வந்துவிடுகிறார். ஆனால் போட்ட மேக்கப் கலைந்து போகிறது. மீண்டும் அழகு நிலையம் போய் முழு மேக்கப்போடு வருகிறார். மீண்டும் அதே பெண்ணுக்கு விபத்து நடந்து மேல் உலகம் சென்று எமனிடம் வாதாடுகிறார்.

எனக்குத்தான் இன்னும் காலம் உள்ளதே மீண்டும் ஏன் என்னை விபத்துக்குள்ளாகினீர்கள் என்று சண்டையிட உன் முகம் மறந்துபோகும் அளவிற்கு நீ மேக்கப் போட்டு இருக்கிறாய் அம்மா அதனால் தவறுதலாக மறுபடியும் உன்னையே அழைத்து வந்து விட்டேன் என்று கூறினாராம். நம் முகத்தை சுயத்தை மறந்துவிடும் அளவிற்குத்தான் இன்று நம்மிடைய முகப்பூச்சும் மனப்பூச்சும் இருந்து வருகிறது.

குடும்பத்தின் சூழல் காரணமாக வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் ஆண்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள். உறவுகளை மனதில் சுமந்து கொண்டு நினைவில் வாழும் அந்த உள்ளங்கள் தன் வேலையை முடித்து எத்தனையோ வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்தாலும் உடனே அவர்களின் உறவுகளே ஒரு படி தள்ளி நிற்கும் நிலைமைக்குத் தகப்பன்கள் ஆளாகிறார்கள்.

விருந்தாளியைப்போல் நான் உணர்கிறேன் சொந்த வீட்டிலேயே என்று நண்பர் ஒருவர் குமுறினார். என் பிள்ளைகள் கூட தந்தை என்று மரியாதை தருவதைப் போல் தள்ளித்தான் நிற்கிறார்கள். மனைவியிடம் இருக்கும் கொஞ்சலோ கெஞ்சலோ என்னிடம் இல்லை, ஒரு புன்சிரிப்பு மட்டும் தான் நீள்கிறது என்று மனத்தாங்கலோடு சொன்னபோது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை மனம் கனத்துத்தான் போனது.

English summary
Some people are there, who are living in a tight situation. Their surroundings force them to live alone though they have all the relations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X