For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு... (1)... பொங்கல் சிறப்பு தொடர் கதை!

எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு.

Google Oneindia Tamil News

-லதா சரவணன்

10 மணிக்கே ரோடு வெறிச்சோடிப் போயிருந்தது, ராக்காயியின் இட்லிக் கடையில் மட்டும் கொஞ்சம் கூட்டம் சொச்சமிருந்தது. தூங்காநகரம் என்று பெயர் பெற்ற மதுரையின் தெருக்களில் வண்டிகள் தங்கள் டயர்களை செலுத்தி ஒவ்வொரு வீட்டு வாயிலில் போட்ட கோலத்திற்குள் பாகப்பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது. பிள்ளைகள் ரோட்டில் ரெயில் வண்டி விட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருமுனையில் இளைஞர் சங்கத்தில் தனுஷ் கொலைவெறிப்பாடலை ரேடியோவில் பாடிக்கொண்டு இருந்தார்.

ஒழுங்கா சாப்பிடறியா ? இல்லை பூச்சாண்டிகிட்டே பிடிச்சிக்கொடுத்திடவா என்று குழந்தையிடம் போராடிக்கொண்டிருந்த மனைவியை ரசித்தபடியே கணவன் ஏண்டி பிள்ளையை வைய்யறே ? என்று சீண்டினான்.

Jallikkatu, a mini Pongal special series

யாரு நானு....உங்கப் பிள்ளைதேன் என்னைய பாடாய்ப்படுத்துதே?! பொழுது விடிஞ்சு இத்தனை நேரமாகுது இன்னும் காலைச் சாப்பாட்டையே இது முடிக்கலை இனிமே எப்ப மதியத்திற்கு உலை வைக்க இன்னும் ராவுக்கு கண் அசரறவரைக்கும் ஓயாத வேலை அலுப்புடன் கடைசி வாய் சோற்றையும் பிள்ளையிடம் அவசரமாய் திணித்துவிட்டு பிள்ளையை உடல் கழுவினாள் அவள்.

ரேடியோ சப்தத்தையும் மீறி பறையின் சப்தம் கேட்டது. இதனால் சகலவிதமான ஜனங்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னென்னா, தைப்பொங்கலை முன்னிட்டு நம்ம ஊர்லே ஜல்லிக்கட்டும், குறவைக் கூத்தும் நடைபெறப்போவுது, கலந்து கொள்ள இளவட்டங்க உங்கப்பேரை பதிவு செய்யலாம். அவன் அடுத்த தெரு நோக்கி பறை அடித்துக்கொண்டே போக அவன் பின்னாலேயே அந்த ஊர் பொடிசுள் எல்லாம் சப்தம் எழுப்பியபடி சென்றன.

Jallikkatu, a mini Pongal special series

இந்த வருஷம் ஜல்லிக்கட்டுலே ஜமாச்சிடம்லே. ஆமா இப்படித்தான் போன வருஷம் சொன்னே ? கோட்டை விட்டுட்டு மேலத்தெரு பயலுக ஜெயிச்சாங்க, சுளையா முப்பதாயிரம் தூக்கி கொடுத்தாச்சு....

இந்த முறை அப்படியெல்லாம் நடக்காது நாமதான் ஜெயிப்போம் இது மட்டும் நடக்கலைன்னா நான் ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன் அவர்களுள் தலைவன்போல் உள்ளவன் ஆவேசமாய் பேசிட மற்றவர்கள் அப்போ அடுத்த வாரத்தில் இருந்து நீ மீசையில்லாமத்தான் இருக்கப்போறீயோ ? என்று நக்கலடிக்க சபதம் செய்தவனின் முகம் இஞ்சியைத் தின்றவனைப் போல் ஆனது.

Jallikkatu, a mini Pongal special series

ஏம் மச்சான் இந்த வருஷம் ஏதோ பஞ்சயாத்து தடை பண்ணிச்சுன்னும் ஜல்லிக்கட்டு நடக்காதுன்னும் சொன்னீயளே ?

பஞ்சாயத்து இல்லைடி ஹை கோர்ட்டு ஜல்லிக்கட்டுங்கிற பேர்ல, மாடுகளை துன்புறுத்துறோம் என்று பிராது கொடுத்து இருக்காங்களாம் அதனால ஜல்லிக்கட்டை நிறுத்தணுமின்னு தடை விதிக்க இருந்தது, சரி சரி நானும்போய் பேரு கொடுத்துட்டு வந்திடறேன்.

இன்னும் எந்த குமரியை மாட்டை அடக்கி கட்டப்போறீங்க, ஒரு பிள்ளைக்குத் தகப்பனா உருப்படற வழியப் பாருங்க. மனைவியின் நொடிப்பிற்கு சிரித்தபடியே வெளியேறினான் அவன்.

பொங்கல் நெருங்கிட்டது இந்த முறை ஜல்லிக்கட்டுக்கு நம்ம காளைகளை தயார் செய்யணும் நீங்க நாளைக்கே அதுக்குண்டான ஏற்பாடுகளைப் பாருங்க, நம்ம மாட்டைப் பார்த்து அவனவன் மிரளணும். மீசையைத் தடவி விட்டபடியே பண்ணையார் சொல்ல,

அத நீங்க சொல்லணுமா அய்யா ?! நம்ம மாட்டை அடக்க இதுவரையில் யாருங்க இருக்கா ?! அதெல்லாம் ஜமாச்சிடலாம். சொக்கன் தலையைச் சொறிந்தபடியே நின்றிருந்தான்.

என்னடா பணம் வேணுமா ?

இல்லை அய்யா உள்ளாற மீன் குழம்புங்களா ? வாசனை மூக்கைத் துளைக்குது. ஆத்தாகிட்டே சொல்லி ஒரு வா சோறு போடச் சொல்லுங்க ?!

Jallikkatu, a mini Pongal special series

பண்ணையார் பெரிதாய் சிரித்தபடியே. சரி போ கொல்லைப்பக்கமா வந்து நில்லு, வருவாங்க.

மரகதம் சொக்கனுக்கு கொஞ்சம் சோத்தப்போட்டு அனுப்பு கொல்லைப்பக்கம் உட்கார்ந்து இருக்கான்னு உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக கையில் புத்தகத்தோடு கிளம்பும் தன் மகள் ரோஜாவைப் பார்த்து என்னத்தா எங்கே கிளம்பிட்டே ?

பள்ளிக்கூடத்திற்குப்பா,,, இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு..... வழக்கமான பள்ளிச்சீருடையில் சிறுமியாய் தெரியும் மகள் இன்று பட்டு பாவடையில் பளிச்சென்று கல் ஜிமிக்கியும், அட்டிகையும் போட்டு மீனாட்சி அம்மனைப்போல் தெய்வீக அழகுடன் தெரிந்தாள். இரு ஆத்தா நடந்து போவாதே நான் வண்டியிலே விடச்சொல்றேன் ஏலே பாண்டி ....

கொல்லைப்புறத்தில் மாட்டுக்கு புண்ணாக்கும் தண்ணீரும் வைத்துக்கொண்டிருந்த பாண்டி விறுவிறுவென்று ஓடிவந்தான் தலையில் இருந்த துண்டு தன்னால் கக்கத்திற்குப் போக அய்யா கூப்பிட்டீங்களா ?

ம்... பாப்பாவுக்கு பள்ளிக்கூடத்திற்கு போகணுமாம் கூடப்போயி விட்டுட்டு வா !

அய்யா மாட்டுக்குத் தண்ணீ காட்டுறேனுங்க நம்ம சொக்கனை அனுப்பட்டுமா ?

அவன் தண்ணீ காட்டுவான் நீ நான் சொன்னதை செய் போ வண்டியைப் பூட்டு, பதில் பேசாமல் வண்டியில் மாட்டைப் பூட்டிவிட்டு திவ்யாவிற்காக காத்திருந்தான் அவன். தந்தையிடம் சொல்லிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள் ரோஜா.

போகலாங்களா ?

ம்.... சுருக்கமாகவே வந்த பதிலில் அவளுக்கு தன் மேல் இருக்கும் கோபத்தை உணர்ந்து கொண்டான் பாண்டி, அமைதியாகவே பயணம் தொடங்கியது. இப்போது தெரு முனை ரேடியோவில் குடகு மலைக்காற்று பாடலில் கனகாவும், ராமராஜனும் உருகிப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

English summary
Writer Latha Saravanan's mini Pongal special story. The story revolves around a love pair with the background of Jallikkattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X