For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள் -18: ஸ்ரீரங்கத்தில் ஆடு- புலி ஆட்டம்

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

Kathirஸ்ரீரங்கம் தொகுதியில் பிஜேபி போட்டியிடும் என்று பத்து நாட்கள் முன்பே தமிழிசை அறிவித்தார். ஒரு கோடியில் இருந்தால் என்ன, தெருக் கோடியில் இருந்தால் என்ன, பிஜேபி தொண்டனுக்கு உற்சாகம்தான்.

அருண் ஜேட்லி போயஸ் கார்டனுக்கு போய்வந்த செய்தி பார்த்ததும் பொசுக்கென்று வற்றிப் போனது அந்த உற்சாகம். தொண்டனுக்கு மட்டுமல்ல, நிர்வாகிகளுக்கும்தான்.

விடாமல் ஒலித்த செல்போன்களை எடுக்காமல் நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு விஐபி. அழைக்கும் செய்தியாளர்களின் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்கு புரியவில்லை.

ஊழல் கட்சியான அதிமுகவுக்கு உண்மையான மாற்று பிஜேபிதான் என்று ஒரு சுலோகத்தை தமிழிசை தலைமையில் புதிய நிர்வாகிகள் உருப் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மோடியின் தளபதி பூச்செண்டுடன் போயஸ் தோட்டத்துக்கு போய் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தலைவிக்கு வாழ்த்துப் பத்திரம் வாசித்தால், கட்சியில் உள்ளவர்களுக்கு வயிறு கலங்காமல் என்ன செய்யும்.

அப்புறமாக சுதாரித்துக் கொண்டு, முகத்தை கழுவித் துடைத்துக் கொண்டு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். அவசர சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற அதிமுகவின் தயவை நாடி பிஜேபி தூதராக சென்றார் ஜேட்லி என்றார்கள்.

புதிய சட்டங்கள், திட்டங்கள் நிறைவேற ஒத்துழைப்பு கேட்டதாக சொன்னார்கள். ஜெயலலிதா மீதான வருமான வரி ஏய்ப்பு, வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு போன்ற வழக்குகளுக்கும் ஜேட்லியின் சந்திப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றார்கள். ஜேட்லி சென்று சந்தித்து விட்டதால் குற்றவாளியின் அப்பீல் மீதான தீர்ப்பு மாறிவிடும் என்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றுகூட எச்சரித்தார்கள்.

இந்த விளக்கங்களும் வாதங்களும் அக்மார்க் உண்மைகளாகவும் இருக்கலாம். இருந்தாலும், இதற்காக ஜேட்லி நேரில்தான் போயிருக்க வேண்டுமா?

'என்ஸ்க்ரிப்டிங் டெக்னாலஜி' உதவியால் எவ்வளவு முக்கியமான ரகசியத்தையும் டெலிபோன் மூலம் பகிர்ந்து கொள்ள முடிகிற காலத்தில், அரசியலில் புயலைக் கிளப்ப வாய்ப்புள்ள நேரடி சந்திப்பு தேவைதானா?

அவசியம் தேவை என்று நரேந்திர மோடிக்கு தோன்றியிருக்கிறது. அவருடைய தளபதி அமித் ஷாவுக்கு தோன்றியிருக்கிறது. பிரபலமான சட்ட நிபுணரும், ஜெயலலிதாவுக்காக சில வழக்குகளில் ஆஜரான நேரத்தில் அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லியை காட்டிலும் அந்த வேலைக்கு பொருத்தமானவர்கள் யாருமில்லை என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.

ஆதரவு கேட்க மட்டுமல்ல, அரசியல் நிலவரம் விவாதிக்க மட்டுமல்ல, அடுத்துவரும் ஆண்டுகளில் இந்த இரும்புப் பெண்மணியின் அரசியல் பயணம் எந்தப் பாதையில் செல்லும் என்பதை அனுமானிக்கவும் அருண் ஜேட்லியை அனுப்பி வைப்போம் என்று மோடி - அமித் ஜோடி முடிவு செய்திருக்கிறது.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal-18

சாமர்த்தியமான கேள்விகளை பாதாளக் கரண்டியாக்கி, எதிரியின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் எண்ணங்களை கிளறியெடுத்து வெளிக்கொணரும் ஆற்றலும் அனுபவமும் அருண் ஜேட்லிக்கு உண்டு.

கர்நாடகா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவில் சாதகமாக தீர்ப்பு வந்தால் அதன் பிறகு ஜெயலலிதா எனும் அரசியல் குதிரைக்கு கடிவாளம் போட எவராலும் முடியாது என்பது பிஜேபிக்கு தெரியும். கல்வெட்டில் பொறித்த திருமறையைப் போல அழுத்தமாகவும் திருத்தமாகவும் நீதிபதி குன்ஹா சட்ட நுணுக்கங்களை மையாக்கி எழுதியுள்ள தீர்ப்பை நிராகரிப்பது எந்த நீதிமன்றத்துக்கும் எளிதான வேலையல்ல என்பதும் அவர்களுக்கு புரியும்.

வட மாநிலங்களின் அரசியல், சமூக பின்னணியில் இருந்து வெகுவாக மாறுபட்ட தமிழகத்தில் வலுவாக காலூன்ற பிஜேபிக்கு ஒரு டை-அப் தேவைப்படுகிறது. இந்தியாவில் தடம் பதிக்க விரும்பும் பன்னாட்டு நிறுவனம் இங்கொரு கம்பெனியுடன் கைகோர்ப்பது மாதிரி.

ஓரளவு கட்டமைப்பு பலம் பெற்று, பிராண்ட் பெயரும் பிரபலம் ஆனபிறகு அந்த உறவை பன்னாட்டு நிறுவனம் துண்டித்து விடும். அல்லது அதற்குள் படிப்படியாக இந்திய நிறுவனத்தை ஸ்வாஹா செய்துவிடும். குளிர்பானம் முதல் ஆட்டோமொபைல் கம்பெனிகள் வரை இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.

கார்ப்பரேட் கேம்ஸ் என சொல்லப்படும் வர்த்தக விளையாட்டுகளில் இந்த உத்தியும் ஒன்று. கார்ப்பரேட் வழிமுறைகளில் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கும் அளப்பரிய நம்பிக்கை அனைவரும் அறிந்த உண்மை. இந்திய அரசியலை அந்த உத்திகளால் தலைகீழாக புரட்டிப் போடும் முயற்சியில் அவர்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர்கள் சேர்த்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் வீடு வீடாக போய் ஓட்டு கேட்டு... இதெல்லாம் எப்போது நடந்து முடிந்து என்றைக்கு ஆட்சியை பிடிப்பது? லிஃப்ட் இருக்கும்போது படிக்கட்டு வழியாக பல மாடிகள் ஏறிச்செல்ல யாருக்கு மனம் வரும், சொல்லுங்கள்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal-18

அதிமுக, அதிமுக தயாரில்லை என்று தேமுதிக, மதிமுக, பாமக, இஜக, கொமுக என்று உதிரிகளாக வளைத்துப் போட்டது பிஜேபி. மத்தியில் ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் பெரிதாக கல்லா கட்ட முடியவில்லை. அதனால் வைகோ, ராமதாஸ் ஜகா வாங்கினார்கள்.

லிங்கா ஹீரோ ரஜினிகாந்துக்கு கொடுக்கும் மரியாதையைக்கூட ஒரு அரசியல் கட்சி தலைவரான தனக்கு பிஜேபி தலைமை தரவில்லையே என்ற கடுப்பில் முரசொலி வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

இந்த சூழலில் அதிமுகதான் மாற்றுத் தோழனாக அதன் கண்களுக்குத் தெரிகிறது. கடவுள், காவி, தேசியம், தீவிரவாதம், தனியார் மயம், வெளிநாட்டு உறவு போன்ற பல விஷயங்களில் இரு கட்சிகளின் நிலைப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

எனவே எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக - காங்கிரஸ் உறவை நேச்சுரல் அலயன்ஸ் என்று குறிப்பிட்டதை போல ஜெயலலிதாவின் சோதனைக் காலத்தில் அதிமுக - பிஜேபி கூட்டணி இயற்கையுடன் இசைந்த உறவாக சித்தரிக்கப்படலாம்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal-18

அதற்கான சாத்தியங்கள் என்ன, சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எண்ணம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு நடத்த ஜேட்லி அனுப்பப்பட்டு இருக்கிறார்.

வாய்மொழி பதில்கள், கருத்துகளுக்கு அப்பால் பார்வை, கண் கை முதலான அங்க அசைவுகள் என ஒருவரின் உடல்மொழி பல சேதிகளை சொல்லும் என்பது உளவியல் அறிந்தவர்களுக்கு தெரியும்.

'தி சயின்ஸ் ஆஃப் ரீடிங் தி மைண்ட் & இன்டர்ப்ரெட்டிங் தி பாடி லேங்வேஜ்' என்பது உளவு அமைப்புகளின் பாடத் திட்டத்தில் ஒரு அத்தியாயம். வடக்கே பரஸ்பரம் மோதிக்கொள்ளும் தலைவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒருவரை ஒருவர் சந்திக்க தவறுவதில்லை என்பதற்கும்; நம்மூரில் நேருக்கு நேர் சந்திப்பு நடப்பதே இல்லை என்பதற்கும் காரணம் ஒன்றுதான்.

சரி, அப்படியென்றால் ஸ்ரீரங்கத்தில் பிஜேபி ஏன் போட்டியிடுகிறது?

அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் திமுகவுக்கு மட்டுமே போய்விடாமல் பிரிப்பதற்காக இருக்கலாம். முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர் வேறுமாதிரி சொன்னார். ‘தமிழ்நாட்டில் யாருக்குமே ஆதரவு ஓட்டு கிடையாது. திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் கிடைப்பதால்தான் அதிமுக வெற்றி பெறுகிறது' என்பது அவர் கணிப்பு.

அதில் பாதி உண்மை இருக்கிறது. திரும்பவும் திமுக வந்துவிடக் கூடாது என்பதில் கணிசமான வாக்காளர்கள் கவனமாக இருக்கிறார்கள். எனினும், குடும்பச் சண்டையாலும் ஊழல் வழக்குகளாலும் அக்கட்சி மிகவும் பலவீனம் ஆனபின் பொது வாக்காளர்களின் பார்வை அதிலிருந்து விலகிவிட்டது.

ஆட்சியில் இருக்கும் கட்சி மீது ஏமாற்றமும் வெறுப்பும் ஏற்படுவது வாடிக்கை. அந்த அடிப்படையில் இன்று அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் அதிகமாகி இருக்கும். அதை கைப்பற்ற "தகுதியுள்ள" கட்சிகள் குறைவு என்றாலும் அந்த லிஸ்டில் முதலில் இருப்பது திமுக. எனவே அந்த ஓட்டுகளை பிரித்து அதன் மூலமாக அதிமுக ஜெயிக்க பிஜேபி களம் இறங்கியிருக்கலாம்.

தமிழிசையிடம் உறுதிப்படுத்த முயன்றபோது, துடிப்பான அவரது செய்தி தொடர்பாளர் சுப்ரமண்ய பிரசாத் வந்தார். அதிர்ந்து போனவர், அப்படியெல்லாம் பேரம் நடக்கவில்லை என்று சத்தியம் செய்தார்.

‘மிகக் குறுகிய அவகாசமே கிடைத்தாலும் அமித் ஷாவை அருகிலிருந்து கவனிக்க வாய்ப்பு கிடைத்தது. அரசியல் (கட்சி) நிர்வாகத்தையும் அரசு நிர்வாகத்தையும் முற்றிலும் வெவ்வேறாக அவர் மதிப்பதும், கோடு தாண்டாமல் செயல்படுவதும் மலைக்க வைக்கிறது. நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு இது புதிய அனுபவம்' என்று சிலிர்த்தார்.

ஆனாலும், வேட்பாளர் பெயரை அறிவித்து விட்டு, எல்லா எதிர்க்கட்சிகளும் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த கருணாநிதிக்கு அந்த சந்தேகம் உண்டு.

மோடியும் ஜெயலலிதாவும் ரகசிய உடன்பாடு செய்துகொண்டு ஸ்ரீரங்கம் தேர்தல் களத்தை குழப்புகின்றனர் என்று அவர் நம்புகிறார். இந்த தந்திரத்தை சுலபமாக முறியடிக்க கருணாநிதியால் முடியும்.

'அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறக்கூடாது என்பதற்காக திமுக இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குகிறது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரின் கட்சிக்கு ஆதரவு தரமாட்டோம்; ஊழலுக்கு துணை நிற்க மாட்டோம் என்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒருமித்த குரலில் செய்தி சொல்ல ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம்' என்று அவர் ஓர் அறிக்கை விட்டால் போதும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய். எதிரிகளின் பேரத்தை அம்பலப்படுத்தலாம். 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டு கட்சிக்கு அவமானம் ஏற்படும் ஆபத்தையும் தவிர்க்கலாம்.

புதுக்கோட்டை இடைத் தேர்தல், கோவை நெல்லை தூத்துக்குடி மேயர் தேர்தல்கள் வரிசையில் ஸ்ரீரங்கத்தையும் சேர்ப்பதால் என்ன ஆகிவிட போகிறது?

-தொடரும்...

English summary
Kathir's 19th episode of Thaazha Parakkum Kaakkaigal analyses the on the Srirangam by election and meet of Union Minister Arun Jaitly with former CM Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X