• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாழப் பறக்கும் காக்கைகள்- 23: நீதியின் பாதையில் வேகத் தடைகள்

By Shankar
|

நீதித்துறை பற்றி தேசிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிக்கலான பிரச்னைகள் உருவாகும்போது அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. தப்பாகி விடும். பிரச்னையின் எல்லா பரிமாணங்களையும் அலசி, வெவ்வேறு கோணங்களில் உற்று நோக்கி, யோசனைகள் சொல்ல வேண்டும். ஒவ்வொரு யோசனையின் நல்லது கெட்டதை விவாதித்து ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் அத்தகைய விவாதம் நடந்தது. இப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை. துதி பாடவும் வசை பாடவுமே போதவில்லையே. அதனால்தான் நாடு தழுவிய அளவில் விவாதிக்க வேண்டும் என்கிறோம்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal 23

நீதித்துறை விவாதப் பொருளாக மாறியதற்கு பல காரணங்கள். பிரதானமானது நீதிமன்றங்களை நம்மால் செலுத்த முடியவில்லையே என்ற ஏக்கம். அதிகார வர்க்கத்தின் ஏக்கம். ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளும் அரசு எந்திரத்தின் மாலுமிகளான அதிகாரிகளும் சேர்ந்ததுதான் அதிகார வர்க்கம்.

கட்சிப் பாகுபாடுகளுக்கு இதில் இடமில்லை. காங்கிரஸ் தொடங்கி கம்யூனிஸ்ட் வரை எல்லா கட்சிகளும் ஒன்று. ஆசையின் அளவு கொஞ்சம் மேலே கீழே இருக்கலாம்.

'தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையம்' உருவாக்கப்பட்டது அந்த சிந்தனையின் வெளிப்பாடு. NJAC என்று குறிப்பிடப்படும் அந்த அமைப்பு சுப்ரீம் கோர்ட் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளை தேர்வு செய்யும். அதற்காக அரசியல் சாசனத்தை 121வது முறையாக திருத்துவதற்கான மசோதா சென்ற ஆகஸ்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆணையத்தில் ஆறு உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்திய தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு சீனியர் நீதிபதிகள், மத்திய அரசின் சட்ட அமைச்சர் ஆகியோரை தவிர இரண்டு "பெரிய மனிதர்கள்" இடம் பெற்றிருப்பார்கள்.

யார் 'பேனாமானா' என்பதை தீர்மானிப்பது யார்? பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகிய மூவரும் சேர்ந்து முடிவு செய்வார்களாம். அதற்கான அளவுகோல், வழிமுறை, நிபந்தனை எதையும் மசோதா வரையறுக்கவில்லை.

நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்து நியமிக்கும் 'கொலேஜியம்' முறையில் எதுவுமே பார்வையில் படாமல் ரகசியமாக நடக்கிறது என்பதால், NJAC முறையைக் கொண்டு வருவதாக அரசு சொன்னது. அதில் உண்மை இருக்கிறது. தவறான ஆட்களும் நீதிபதி ஆனார்கள். நல்ல நீதிபதிகளும் டிரான்ஸ்ஃபர் ஆனார்கள். ஏன் எதற்கு என்று யாரும் கேட்க முடியாது.

தமிழகத்தைச் சேர்ந்த சில நீதிபதிகளும் பிரச்னைகளில் சிக்கினார்கள். ஒருவர் மீது நாடாளுமன்றத்தில் தண்டனை தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு விவகாரம் பெரிதானது. நீக்கப்பட வேண்டிய நீதிபதிகள் இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டனர். எவரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal 23

அந்தளவுக்கு இருட்டறை நடவடிக்கையாக தொடரும் கொலேஜிய முறைக்கு மாற்றாக அறிமுகம் செய்யும் புதிய முறையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டாமா?

இருக்காது என்று நம்ப முகாந்திரம் உண்டு. சுப்ரீம் கோர்ட்டில் 26 நீதிபதிகள். 21 ஹைகோர்ட்கள், அவற்றின் கிளைகளில் 678 நீதிபதிகள். ஒவ்வொரு ஆண்டும் நீதிபதிகள் ரிடையர் ஆவதும், இடம் மாறுவதும் நடக்கிறது. காலியாகும் இடங்களை நிரப்ப ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஷார்ட்லிஸ்ட் எடுத்து, அதில் உள்ளவர்களை பற்றி கூடுதல் விவரங்கள் திரட்டி ஆய்வு செய்ய வேண்டும்.

ஆறு பேர் அடங்கிய NJAC என்ற பகுதிநேர அமைப்பால் இதெல்லாம் சாத்தியமில்லை. காலியிடங்கள் சேரட்டும் என காத்திருந்து அவ்வப்போது கூடி தேர்வு செய்யதான் இயலும். வடிகட்டிய அரசாங்க நடைமுறை. வருடாவருடம் 100+ நீதிபதிகளை நியாயமாக சீர்தூக்கிப் பார்த்து இந்த அமைப்பு தேர்வு செய்யும் என்பது அதீதமான எதிர்பார்ப்பு. இங்கி பிங்கி பாங்கி கேம்தான்.

எல்லா சட்டங்களையும் நடைமுறைகளையும் இங்கிலாந்தைப் பார்த்து நாம் பின்பற்றுகிறோம். தப்பில்லை. ஜனநாயக நிர்வாக அமைப்புகளின் தாயகம் அது. அங்கே நீதிபதிகள் தேர்வுக்கு சுய அதிகாரம் கொண்ட தனி அமைப்பு முழுநேரம் செயல்படுகிறது. அப்படி ஒன்றை இங்கு ஏற்படுத்த அரசு தயங்குவது ஏன்? பதில் சொல்ல தேவையே இல்லை.

ஜனநாயகத்தின் தூண்களான சட்டமன்றம், அரசு ஆகியவை காலப்போக்கில் சிறப்புகளையும் பெருமையையும் தொலைத்து விட்டு நிற்கின்றன. மீதமிருக்கும் தூண் நீதிமன்றம். நீதிபதிகள் நேர்மையானவர்களாக, சட்ட நுணுக்கங்களில் கரை கண்டவர்களாக, மனிதநேயம் மிகுந்தவர்களாக இருந்தால் மட்டுமே அந்த தூண் வலுவாக நிற்கும். ஜனநாயகத்தை தாங்கி.

அதனால்தான் அதிகார வர்க்கம் ஆட்டிப் பார்க்கிறது. தகுதி இல்லாதவர்களை திணிக்கிறது. அரசு எந்திரத்தையும் காவல் முதலான துறைகளையும் முடிந்தால் ஊடகங்களையும் சமயத்தில் சட்ட மேதைகளையும் பயன்படுத்தி நீதித்துறையை பலவீனப்படுத்த முயல்கிறது.

'உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்களாக இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். வேறு நீதிபதி விசாரிக்கட்டும்' என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நீதிபதியைப் பார்த்து நேருக்கு நேர் ஒரு வக்கீல் சொல்ல முடிகிறது என்றால் என்ன அர்த்தம்?

நாலாபுறமும் தாக்குதல் தொடுக்கப் படுகிறது என்று அர்த்தம். ராம் ஜெத்மலானிகள், சாந்தி பூஷன்கள், ராஜீவ் தவான்கள் நீதிபதிகளை விடவும் துல்லியமாக நீதிமன்றத்தின் பலவீனங்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

அமித் ஷா குஜராத் அமைச்சராக இருந்தபோது அவர் சார்பில் ஆஜரான ஜெத்மலானி முஸ்லிம் நீதிபதிக்கு 'அறிவுரை' சொன்னார். நீதிபதி அதிர்ச்சி அடைந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. அவரது உள்மனம் சொல்லியிருக்கும்: 'நீங்கள் எவ்வளவு பெரிய சட்ட மேதையாக இருந்தாலும், சட்டம் உங்களைவிட உயர்வானது' என்று. ஆகவே அவர் அசராமல் சட்டத்தின் வழி நடந்தார். விசாரித்தார். தீர்ப்பு எழுதினார்.

சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் தரப்பில் ஆஜரான ராஜிவ் தவானும் ஜெத்மலானி பாணியில் நீதிபதிகள் மீது கல்லெறிந்தார். உங்கள் தந்திரங்களை நாங்கள் நன்கறிவோம் என்று பதிலடி கொடுத்த போதிலும், வழக்கிலிருந்து பின்னர் அந்த நீதிபதிகள் விலகிக் கொண்டனர்.

குஜராத் சமூக சேவகி டீஸ்டா சீதல்வாட் மீதான வழக்கில் அவரைப் பற்றி சில நுணுக்கமான கேள்விகளை நிதிபதிகள் எழுப்பினர். சமூக ஆர்வலர்களாக அங்கு திரண்டிருந்த இளம் வக்கீல்கள் உடனே வாட்ஸ்ஆப் மூலம் பிரசாரம் தொடங்கினர். ‘மோடிக்கு எதிராக போராடியவர் சீதல்வாட். ஆனால் இந்த நீதிபதிகள் மோடிக்கு நெருக்கமானவர்கள். அவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?' என்று.

நீதிபதிகள் இதனால் அப்செட் ஆனதாகவோ, வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாகவோ கூறவில்லை. ஆனாலும் தலைமை நீதிபதி தலையிட்டு வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றினார்.

நீதிபதிகளின் மகன், மகள் திருமணத்துக்கு மோடி வந்திருந்தார். அதை வைத்து அவர்களுக்கும் மோடிக்கும் நெருக்கம்; ஆகவே மோடிக்கு சாதகமாகத்தான் செயல்படுவார்கள் என்று எதிர்தரப்பு சொன்னது.

‘நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது. வழங்கப்பட்டது நீதிதான் என்று மக்கள் நம்ப வேண்டும்' என்பார்கள். அந்த உயரிய நெறிப்படி பார்த்தால் தலைமை நீதிபதி செய்தது தவறில்லை. ஆனால் இது எல்லா நீதிபதிகளுக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்த வேண்டாமா?

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் மட்டுமல்ல. தொழிலதிபர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களுடனும் நீதிபதிகள் மேடையை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றுபொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு ஒரே மேடையில் அவர்களுடன் நீதிபதிகள் பங்கேற்கும் காட்சிகளைப் பார்க்கும்போது, அந்த நபர்கள் மீதான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வந்தால் மக்கள் சந்தேகப்படுவார்கள்.

சொல்லப்போனால் அது போன்ற ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொண்டு தங்கள் முறைகேடுகளைத் தொடர்வதற்குதான் மேற்படி தொழிலதிபர்கள், கல்வி வியாபாரிகள், ரியல் எஸ்டேட் புள்ளிகள் விழா ஏற்பாடு செய்து நீதிபதிகளை அழைத்து போட்டோ எடுத்து ஊடகங்களில் வெளியிடுகிறார்கள்.

சட்டமே தெரியாத அறிவாளிகள் அரசியல்வாதியின் காலைப் பிடித்து அரசு வக்கீல் மாதிரியான பதவிகளில் அமர்ந்து கொள்வதை நீதிபதி கிருபாகரன் விமர்சித்துள்ளார். ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் அந்தந்த கட்சியின் வக்கீல்களுக்கு பதவி தரப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் நீதிபதி ஆகிவிடவும் முடிகிறது.

இது 1970களில் திமுக தலைவர் தொடங்கி வைத்த நடைமுறை. அந்த கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தவர் இந்த வழியில் பயணித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி வரை உயர்ந்தார். சமூக நீதியை நிலைநாட்ட என்ற காரணம் கூறி அறிமுகம் செய்யப்பட்ட பழக்கம் சமீப காலமாக கேலிக்கு இலக்காகி இருக்கிறது. ஹைகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்றவர்கள் முதல்வரைச் சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெறும் காட்சிகள் நீதித்துறையின் மாண்பை நிலைநாட்ட உதவவில்லை.

இன்றளவு நிலைமை மோசமாகாத காலத்திலேயே இந்தப் பிரச்னை சுட்டிக் காட்டப்பட்டது. ஏன், நீதிபதிக்கு சமூகத்துடன் தொடர்பு இருக்கக் கூடாதா என்று ஒரு நீதிபதி கேட்டார். அந்தத் தொடர்பு தீர்ப்புகள் மூலமாக மட்டும் இருந்தால் போதாதா என்று திருப்பிக் கேட்டதும் அவர் யோசனையில் ஆழ்ந்துவிட்டார். தொழில்முறை பேச்சாளர்கள் எழுத்தாளர்களுக்கு இங்கே பஞ்சமில்லையே.

ஆரம்பத்தில் சொன்னதுபோல நாலா திசைகளில் இருந்தும் நீதித்துறை மேல் கணைகள் ஏவப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக நீதிமன்றத்தைக் காக்க இங்கு யாருமில்லை. அதுதான் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு நம்மையும் காத்தருள வேண்டும். பலவீனங்களை களைவதன் மூலம் நீதித்துறை தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும். சந்துரு, கிருபாகரன் போன்ற வழிகாட்டிகள் இருக்கையில் அதற்கு மேலும் சாத்தியமே.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The 23rd episode of Kathir's Thaazha Parakkum Kaakkaigal discusses about the recent issue of Judges appointment for Supreme Court of India.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more