For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தப்பும் தவறுமான சட்ட நடவடிக்கைகளால் வழக்கை மிகவும் சிக்கலாக்கிய ஜெயலலிதா..!

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

பவானி சிங்கை அரசு தரப்பு வக்கீலாக நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது சட்டம் தெரியாத பாமரனுக்கு தெரியும்.

சுப்ரீம் கோர்ட் ஒரு இழுபறிக்கு பிறகு இப்போது அதை உறுதி செய்திருக்கிறது. மகிழ்ச்சிதான் போங்கள்.

பாமரனுக்கு எப்படி தெரியும் என்று மல்லுக்கட்ட வேண்டாம். எல்லாம் லாஜிக்தான். காத்மாண்டுவில் ஒரு லட்சம் பேர் பலி என்று வாட்சப்பில் ஒரு செய்தி. சுற்ற விட்டிருக்கிறார்கள் என்பது படிக்கும்போதே தெரிகிறது. அந்த ஊர் ஜனத்தொகை 10 லட்சம்தான். லாஜிக் இடிக்கிறது என்று புரிந்து கொள்ள பி.எல்., எல்.எல்.பி வாங்கியிருக்க வேண்டியதில்லை.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal 27

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை தாக்கல் செய்தது தமிழக அரசின் ஊழல் தடுப்பு பிரிவு. அப்போது திமுக ஆட்சி நடந்தது.

அடுத்து அதிமுக ஆட்சி வந்தது. ஜெயலலிதா மீதான வழக்குகள் தானாகவே பின்வாங்கி ஓடின.

சொத்து குவிப்பு ஸ்டிராங்கான வழக்கு என்று திமுக புரிந்து கொண்டிருந்தது. அதை சென்னையில் நடத்தினால் நீதி கிட்டாது என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. அந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது. ஆகவே வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியது.

அவ்வளவுதான். அதோடு தமிழக அரசுக்கும் அந்த வழக்குக்கும் உள்ள உறவு, தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

வழக்கை தொடர்ந்தது தமிழக அரசின் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாக இருந்தாலும், வழக்கில் அரசு தரப்பாக - பிராசிகியூஷன் என்பார்களே - ஆஜராக வேண்டிய வக்கீலை தமிழக அரசு நியமிக்க முடியாது.

வழக்கை பெற்றுக் கொண்ட கர்நாடகா அரசுதான் அதையும் செய்ய வேண்டும். அதிமுக ஆட்சி என்றில்லை. திமுக ஆட்சி நடந்தாலும் அதுதான் நிலைமை. கைவிட்டு போன ஒரு வழக்கில் மூக்கை நுழைக்க தமிழக அரசுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது.

இது நல்ல ஏற்பாடு. ஏன் என்றால், ஆட்சி மாறும் போதெல்லாம் ஊழல் வழக்குகள் தொடரப்படுவதை பார்க்கிறோம். ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சியை விட்டு போனவர்கள் மீது வழக்கு தொடர்ந்து இம்சை கொடுப்பது வாடிக்கையாகி விட்டது.

அதே போல, வழக்குகளைச் சந்திப்பவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்குகளை சாகடித்து பாலூற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal 27

ஊர் உலகத்தில் நல்ல பெயருடன் செல்வாக்குடன் வலம் வருகிற புள்ளிகள்கூட பல்டி அடித்து பிறழ் சாட்சியாக மாறுவார்கள். சாட்சியங்கள், ஆதாரங்கள் காணாமல் போகும். நீதிபதிகள் மாறிக் கொண்டே இருப்பார்கள். மாற்ற முடியாத பட்சத்தில் பதவி உயர்வு பெற்று கண் காணாத இடத்துக்கு போய்விடுவார்கள்.

இந்த கேலிக் கூத்தை எல்லாம் தவிர்க்கதான் வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறது. வழக்கில் சிக்கிய புள்ளியின் செல்வாக்கு மாநில எல்லைக்கு அப்பாலும் செல்லுபடி ஆகுமானால் அங்கேயும் சில கூத்துகள் நடக்கதான் செய்யும்.

காஞ்சிபுரம் சங்கர ராமன் கொலை வழக்கு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. அதன் கதி என்ன ஆனது என்பதை பார்த்தோம்.

அதுபோல கர்நாடகாவில் தனி கோர்ட் அமைக்கப்பட்டும் அது ஒழுங்காக செயல்பட முடியாமல் தொடர்ந்து கட்டை போடப்பட்டது. அந்த கட்டைகளில் ஒன்றுதான் பவானி சிங்கின் நியமனம்.

பவானி சிங் போன்றவர்கள் இருப்பதால்தான் நல்ல வழக்கறிஞர்களை நம்மால் அடையாளம் காண முடிகிறது. வில்லன் இல்லாவிட்டால் கதாநாயகனுக்கு ஏது மரியாதை என்று ஒரு அரசியல் நண்பர் சொல்வார்.

பவானியை நியமித்த கர்நாடக அரசே அவரது செயல் திறனைப் பார்த்து ஆடிப்போனது. ஜெயலலிதா மீதான வழக்கை நடத்தி அவருக்கு தண்டனை பெற்று கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒருவர், அதற்கு நேர் மாறான விளைவை நோக்கி வழக்கை செலுத்துவார் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

தவறை உணர்ந்து நியமனத்தை ரத்து செய்தது கர்நாடக அரசு.

என்னுடைய நேர்மையை சந்தேகிப்பதா என்று பவானி கொதித்து எழுந்திருந்தால், அட! என்று பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் பவானிக்கு வக்காலத்து வாங்கியது யார்? அவரால் குற்றவாளி முத்திரை குத்தி தண்டிக்கப்பட இருந்த பிரதிவாதி ஜெயலலிதா.

கர்நாடகா அரசு நியமிக்கா விட்டால் என்ன, வழக்கின் அப்பீலுக்கு அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நாங்கள் நியமிக்கிறோம் என்று ஜெயலலிதா அரசு களத்தில் குதித்தது. இன்னொரு புறம், பவானி சிங் அப்பீலிலும் அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.

இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத வினோத நிகழ்வுகள் இவை.

வழக்கில் தமிழக அரசுக்கு அதிகாரமோ உரிமையோ இருந்தால் நீதி கிடைக்காது என்பதால்தானே சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட். ஒதுங்கி நிற்க உத்தரவு பிறப்பித்த பிறகும் வலிய தலையை நுழைத்து வழக்கறிஞரை நியமித்தால் சுப்ரீம் கோர்ட் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?

Kathir's Thaazha Parakkum Kaakkaigal 27

பவானி சிங் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவரை அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட அனுமதிக்க கூடாது என்றுதானே திமுக வழக்கு தொடர்ந்தது? பவானிசிங்கை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து, அதே நபருக்காக ஜெயலலிதாவும் வழக்கு தொடர்ந்தால் திமுகவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகத்தானே கருத முடியும்?

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்ற குற்றச்சாட்டை விட, தப்பும் தவறுமான தொடர் சட்ட நடவடிக்கைகளால் தனி கோர்ட் தொடங்கி சுப்ரீம் கோர்ட் வரையிலான நீதிபதிகளின் கடுமையான அதிருப்திக்கு ஆளாகி வழக்கை மிகவும் சிக்கலாகி விட்டார் ஜெயலலிதா என்பதுதான் அது.

அப்பீல் மீதான தீர்ப்பு வரும்போது இந்த உண்மை நிச்சயமாக அதில் எதிரொலிக்கும்.

English summary
Kathir's 27th part of Thaazha Parakkum Kaakkaigal discusses about the recent verdict of Supreme court on Bhavani Singh's appointment in Jaya's wealth case and after effects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X