For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள்- 26: ஆவிகளுக்கு சக்தி உண்டா?

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

மரணம் இயற்கையானது. ஆயுள் காலம் முடிந்து விட்டது என்று அர்த்தம். அகால மரணம் அப்படி இல்லை. செயற்கையானது. கொலையும் தற்கொலையும் அந்த ரகம்.

அத்தகைய முறையில் மரணம் நிகழ்ந்தால், அந்த உயிர் அதற்கு உரிய இடத்துக்கு போகாது. நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலம் முடியும் வரையில் ஆவியாக அலையும்.

உடலுக்குள் இருந்தபோது அந்த உயிருக்கு என்ன சக்தி இருந்ததோ, அதைவிட அதிகமான சக்தி ஆவிக்கு இருக்கும். நினைத்ததை செய்ய முடியும்.

இது ஒரு நம்பிக்கை. நிறைய பேரிடம் இருப்பதைப் பார்க்கிறோம். நம்பிக்கை இல்லாதவர்களையும் உலுக்குவது மாதிரியான சம்பவங்கள் நடப்பது உண்டு.

தமிழகத்தில் இப்போது நடப்பதைப் பார்க்கும்போது அதுதான் ஞாபகம் வருகிறது. பெரிய கேள்விக்குறி எழுகிறது.

தற்கொலை செய்த தமிழக அதிகாரிகளின் ஆவிகள் ஒன்றாக சேர்ந்து செயல்படுகின்றனவா?

- திருநெல்வேலியில் வேளாண்மை துறை எக்சிகியூடிவ் என்ஜினியர் முத்துகுமாரசாமி ரயில் முன் பாய்ந்தார்.

- மதுரையில் மீன்வள துறை துணை இயக்குனரின் பி.ஏ பாஸ்கரன் ஆஸ்பத்திரியின் பின்னால் பிணமாக கிடந்தார்.

- ஈரோட்டில் வீட்டு வசதி துறை உதவி செயல் பொறியாளர் பழனிசாமி அலுவலக அறையில் தூக்கில் தொங்கினார்.

- சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குனர் அறிவொளி கடலுக்குள் நடந்து சென்று மூழ்கினார்.

இவை சென்ற இரண்டு மாதங்களில் செய்தியாக வெளிப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய அகால மரணங்கள். பெரும்பாலான தற்கொலைகள் மூடி மறைக்கப்பட்டு, இயற்கை மரணமாக அல்லது விபத்தாக திரிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்படுவது பெரிய ரகசியம் கிடையாது.

மேலே சொன்ன அதிகாரிகள் விஷயத்தில் தென்படுகின்ற இரண்டு ஒற்றுமைகள் முதுகுத்தண்டில் சில்லிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

ஒன்று, இவர்கள் அலுவல் ரீதியாக கடுமையான நிர்ப்பந்தங்களை எதிர் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது, இவர்களின் குடும்பத்தினர் உறவினர்களிடமும் ஊடகர்களிடமும் ஒரு வார்த்தைகூட பேசாமல் மறுபக்கம் திரும்பிக் கொள்கிறார்கள்.

அவர்களின் கண்களில் குடிகொண்டிருப்பது சோகமா அச்சமா என்பதை அறியும் வாய்ப்பு மீடியாவுக்கு கிடைக்கவில்லை.

agri krishnamoorthy

தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, தமிழக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பது எவருக்கும் தெரியாத விஷயம் அல்ல. ஆனால் வழக்குகளுக்கும் மிரட்டலுக்கும் பயந்து யாரும் வெளிப்படையாக விவாதிக்காமல் தவிர்த்தார்கள்.

அதிகாரிகள் அகால மரணத்தில் முத்தாய்ப்பாக நிகழ்ந்த முத்துகுமாரசாமியின் முடிவு அந்த மவுனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

கேவலம், விவசாய துறையின் டிரைவர் வேலைக்கு தலா 3 லட்சம் விலை நிர்ணயம் செய்து கோட்டையில் இருந்து பேரம் பேசியிருக்கிறார்கள் என்றால், எல்லா இலாகாக்களிலும் உள்ள ஏனைய பதவிகள் என்ன விலைக்கு ஏலம் விடப்பட்டு எவ்வளவு வசூல் நடந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

டிரைவர் வேலையை கேவலம் என்றதாக அர்த்தம் கொள்ள தேவையில்லை. காலியாக இருக்கும் உயர் பதவிகளான செயலாளர், துணை வேந்தர், பேராசிரியர், டீன், இயக்குனர், ஆணையாளர் போன்ற பொறுப்புகளோடு ஒப்பிடும்போது டிரைவர் என்பது பெரிதாக ஏதும் சம்பாதிக்க வழியில்லாத வேலை என்பதை சுட்டிக் காட்ட சொன்ன வார்த்தை அது.

விசாரணை வளையத்தில் சிக்கிய ஒரு துணைவேந்தர் எத்தனை கோடி லஞ்சம் கொடுத்து அந்த பதவிக்கு வந்தேன் என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்த அபூர்வ நிகழ்வு அதற்குள் மறக்கக் கூடியதா?

வேலை வேண்டுமா, பல லட்சங்கள். குறிப்பிட்ட இடத்தில் போஸ்டிங் வேண்டுமா, எக்ஸ்டிரா சில லட்சம். விரும்பிய ஊருக்கு மாறுதல் தேவையா, சில லட்சம். விரும்பாத ஊருக்கு போட்ட மாறுதலை ரத்து செய்யவா, சில லட்சம். பதவி உயர்வா, பல லட்சம். ஒழுங்கு நடவடிக்கை ரத்தா, சில லட்சம். விசாரணை அறிக்கை திருத்தமா, சில லட்சம். வழக்கு வாபசா, பல லட்சம்.

அங்கிங்கு கிடையாது. எங்கும் எப்போதும் என்பது தாரக மந்திரம் ஆகிவிட்டது. புதிய மந்திரத்தை உச்சரிக்க மறுக்கும் நேர்மையான அதிகாரிகள், உடந்தையாக இருக்க சம்மதிக்காத ஊழியர்கள் பந்தாடப்படுவது மட்டுமல்ல; பழி வாங்கப்படுகிறார்கள்.

jayalalitha

அமைப்பு ரீதியாக பலமாக இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பிரிவில் உள்ள நேர்மையான அதிகாரிகளே அரண்டு போயிருக்கிறார்கள் என்றால் அட்வான்ஸ், லோன் வாங்கியே காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நல்ல ஊழியர்கள் என்ன செய்ய முடியும், பாவம்.

இன்றைய அதிமுக அரசில்தான் ஊழல் மலிந்து விட்டதா, இதற்கு முன்னால் நடந்த திமுக ஆட்சி யோக்கியமா என்று கேட்கலாம். நிச்சயமாக இல்லை. அதிலும் ஊழல் மலிந்திருந்தது. ஆனால் இப்போது நடப்பதை போல தாறுமாறான, எல்லையற்ற பணக் குவிப்பு இதுவரை கண்டதில்லை.

கான்கிரீட் சாலைகள் அமைக்க மாநகராட்சி டெண்டர் விட்டால் காண்ட்ராக்டர்கள் கூட்டணி அமைத்து எடுக்காமல் புறக்கணிக்கிறார்கள். சாலை போடுவதாக காட்டியே அடிக்கடி பணம் சம்பாதிக்க வழி இருப்பதை அடைக்கலாமா என்று கொதிக்கிறார்கள்.

மாநகராட்சி மண்டியிடக் கூடாது என்று நாளிதழ்கள் எழுதியும், நீதிமன்றம் எச்சரித்தும் பலன் இல்லை. கை சுத்தமான அதிகாரிகளால் எதிர்நீச்சல் போட இயலவில்லை.

அறிவிக்கப்பட்ட பெரிய திட்டங்கள் எதையும் தொடங்க முடியவில்லை. டெண்டர் விடுவதற்கு முன்னரே 25 சதவீதம் கொடு என்று கேட்டால் எங்கே போவது என்று கம்பெனிகள் பின்வாங்கி ஓடுகின்றன.

அதிலும் துணிந்து காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் வெவ்வேறு மட்டங்களில் 45 சதவீதம் கொடுத்துவிட்டு 10 சத லாபமும் கழித்து மீதி தொகையில் பணி முடிக்கும்போது தரம் கேலிக்குரியதாகி திட்டமே கேள்விக்குறி ஆகிறது.

நிறைவேற்றப் படாததால் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப்ப்படும் நிதி எவ்வளவு தெரியுமா? கல்வித் துறையில் மட்டுமே 4,400 கோடி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். அத்தனையும் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டித் தர அளிக்கப்பட்ட தொகை.

மின்சார உற்பத்தி திட்டங்கள் முடக்கப்பட்டு தனியாரிடம் அதிக விலைக்கு வாங்குவது குறித்து எல்லோரும் எழுதியாகி விட்டது. ஒரு பயனும் இல்லை. லேட்டஸ்டாக உடன்குடி அனல்மின் திட்டத்துக்கான டெண்டரை அரசு ரத்து செய்திருக்கிறது.

சர்வதேச டெண்டரில் பங்கேற்ற மத்திய அரசின் பெல் நிறுவனத்துக்கும் சீன கம்பெனிக்கும் டெண்டர் விதிமுறைகள் தெரியவில்லை என்ற விளக்கம் வேடிக்கையானது. முட்டை, பால், பருப்பு என்று எந்த பொருளையும் விட்டு வைக்கவில்லை முறைகேடு.

ஏன் இந்த வேகம். ஏன் இந்த பேராசை. தவறான வழியில் பொருள் சேர்த்த பெரிய மனிதர்கள் நீதிமன்றம், சிறை, மருத்துவமனை என்று நிம்மதியிழந்து அலைந்து திரிவதை அன்றாடம் பார்த்தாலும் மனதில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?

கண்மூடித்தனமான வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் புள்ளிகள் மேல்நோக்கி விரல் காட்டி பணம் கேட்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

மேலே இருக்கும் கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதற்காக அல்ல என்பது குழந்தைக்கும் தெரியும். வெளியுலகத்துடன் நேரடி தொடர்பை தானாக துண்டித்துக் கொண்டுள்ள மக்களின் முதல்வருக்கு இந்த விஷயங்கள் தெரியுமா அல்லது தெரியாமல் திரை போடப்படுகிறதா?

என்னதான் தேவைகள் இருந்தாலும், தவறான முறையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று, அதிலிருந்து நிரபராதியாக வெளியே வர போராடும் ஒரு தலைவர், அதைவிட மோசமான வழிகளில் தனது அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க அனுமதித்து, அதன் மூலம் தனது செல்வாக்கு சரிய விடுவாரா?

அந்த வாதத்தில் லாஜிக் இல்லையே?

ஒரு எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக் காட்டியதை போல அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட விவகாரம், கடலுக்குள் மறைந்திருக்கும் மலையின் மேல் நுனி மட்டுமே.

ஆவிகளின் சக்தி என்ன என்பதை அடுத்து வரும் நாட்களில் பார்க்க வேண்டும்.

English summary
The 26th part of Kathir's Thaazha Parakkum Kaakkaigal is discusses about the corruption and dismissal of Agri Krishnamoorthy from cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X