For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள் 16: சுதந்திரத்தில் கை வைத்தால்...

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

சமூகம் ரொம்ப கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. ஆட்கள் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மொத்த சமூகமே அப்படிக் கொதிக்கிறது. அல்லது அப்படித் தெரிகிறது.

எங்கு பார்த்தாலும் வன்முறை, கொடூர கொலை நடப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

பொறுமை குறைந்து விட்டது. சகிப்புத் தன்மை, பெருந்தன்மை, அரவணைப்பு, ஒற்றுமை உணர்வு, சமரசம், சகோதரத்துவம் என்று எந்த பெயரால் குறிப்பிட்டாலும் சரி.

அது குறைந்து போனதுதான் கோபம் தலைக்கேற காரணம். கோபம் தனியொருவன் நலத்துக்கு எவ்வாறு கேடாக முடியுமோ, அதே போல்தான் சமூகத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமையும். நல்ல கோபம் கெட்ட கோபம் என்று கொலஸ்ட்ரால் மாதிரி

கோபத்தை பிரித்துப் பார்க்க இடமில்லை.

ஆமிர் கான் நடித்த பீக்கே திரைப்படத்தை தடை செய்யச் சொல்லி பஜ்ரங் தளம் முதலான இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

Thaazha Parakkum Kaakkaigal - 16

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை தடை செய்ய ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி இயக்கம் தொடங்கியிருக்கிறது.

தினத்தந்தியின் டீவி சேனல் ராஜபக்சயின் பேட்டியை ஒளிபரப்பக் கூடாது என்று வைகோ முற்றுகை நடத்துகிறார்.

எளிதில் உணர்ச்சி வசப்படுகிற இனம் நம்முடையது என்பதை எடுத்துச் சொல்ல வரலாறு ஆய்வாளர்கள் தேவையில்லை. ஹீரோ ஒர்ஷிப் என்கிற தனிமனித துதி பாடுவதில் தமிழர்களை மிஞ்ச இன்னொரு இனமில்லை. அதே போல ஒருவரை வில்லனாக்கி வசை பாடுவதிலும் நம்மைக் காட்டிலும் வல்லவர்கள் பிறக்கவில்லை.

இரண்டு தீவிரமான முனைகளிலும் நமது பங்களிப்பை முழுமனதோடு மட்டுமல்ல, மூர்க்கத்தனமாகவும் வழங்கத் தயங்குவதில்லை. ஆழ்ந்து சிந்திக்கவோ எட்டி நின்று

Thaazha Parakkum Kaakkaigal - 16

அலசவோ பொறுமை இல்லை.

அது இருந்திருந்தால், நாம் யாரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கிறோமோ அதே நபர்களை அவர்கள் நம் சமூகத்துக்கு செய்த சிறப்புக்காக போற்றிப் புகழ்ந்திருக்கிறோம் என்பது ஞாபகம் வந்திருக்கும்.

ஆமிர் கான் சமூகப் பிரக்ஞை கொண்ட அபூர்வமான சினிமாக்காரர். நாட்டுப்பற்றும் அதைவிட தூக்கலான மனிதநேயமும் மிகுந்தவர். நட்சத்திரமாக, ஒரு சூப்பர் ஸ்டாராக வளர்ந்த பிறகு அவர் நடித்ததும் தயாரித்ததும் வெறும் திரைப்படங்கள் அல்ல.

தியேட்டருக்கு வரும் ஒவ்வொருவரும் திரும்பிச் செல்லும்போது மனதில் பதிய வைத்துக் கொள்ளும் பாடங்கள்.

நமக்குத் தெரிந்து திரைப்படங்கள் மூலம் மக்களின் மனதில் நல்ல பண்புகளையும் ஒழுக்கத்தையும் உயர்ந்த நோக்கங்களையும் விதைத்து சமூகத்தில் நல்ல மனிதர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க காரணமாக இருந்தவர் எம்ஜிஆர் என்ற மாமனிதன்.

அகில இந்திய அளவில் அந்த நல்ல காரியத்தைச் செய்து வருபவர் ஆமிர். ரங் தே பசந்தி, தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ் போன்ற படங்கள் இளம் தலைமுறையின் அணுகுமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

டீவியில் சத்ய மேவ ஜெயதே என்ற பெயரில் அவர் நடத்தும் நிகழ்ச்சியை பார்க்க நாடே வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கிறது.

Thaazha Parakkum Kaakkaigal - 16

ஹார்ட் லைன் லீடர் என்று வர்ணிக்கப்படும் எல்.கே.அத்வானி இவரது தீவிர ரசிகர். ஆமிர் படத்தை பார்த்தபின் அத்வானி கட்டித் தழுவி கண்களில் நீர் தழும்ப ஆசீர்வதித்த காட்சிகள் உண்டு. உண்மையில் ஆமிருக்கு சர்வதேச ஊடகங்கள் கொடுத்துள்ள அடைமொழி ‘இந்திய சினிமாவின் சமூகப் போராளி' என்பதாகும்.

அப்படிப்பட்ட ஆமிர் கான், இந்து சாமியார்களை இழிவுபடுத்தி விட்டார் என்று குற்றம்சாட்டுவது எவ்வளவு பெரிய அபத்தம். சாமியார்களின் யோக்கியதை பற்றி நமக்குத் தெரியாதா, என்ன? முற்றும் துறந்தவரைத்தான் துறவி என்று சொல்ல முடியும். அகன்ற ஒரு கட்டமைப்பை நிறுவி ஆயுதம் ஏந்திய படை அமைத்து பல கம்பெனிகள் நடத்தி இண்டர்நெட் வழியாக அருள்வாக்கு சொல்பவர்கள் காவி உடுத்துகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக சாமியார் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா, என்ன?

ஆமிர் மீது சுப்ரமணியன் சாமி தொடர்ந்து நடத்தும் தாக்குதல் உள்நோக்கம் கொண்டது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. வழக்குப் போடுவதில் வல்லவர் என்பதால் அவரது வாதங்கள் உண்மையாகிவிட முடியாது.

பெருமாள் முருகன் யார்? மிகச் சிறந்த படைப்பாளி. தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டே கதை, கவிதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு, தொகுப்பு, பதிப்பு, அகராதி என சகல தளங்களிலும் சளைக்காமல் தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் செய்து வருபவர். படைப்புகளை அதிகம் வாசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கொங்கு வட்டார சமூக வரலாறை ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில் பதிவு செய்பவர் என்பதை அறிந்திருக்கிறேன்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னால் வெளியாகி இப்போது தடை கோரப்படும் மாதொரு பாகன் நாவலும் அந்த ரகம். திருச்செங்கோடு வட்டாரத்தில் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கோயில் திருவிழாவையும், அப்போது வழக்கத்தில் இருந்த ஒரு நடைமுறையையும், அவை மணமாகி பத்தாண்டுகளாக குழந்தை இல்லாத ஒரு ஏழை தம்பதியின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கங்களை உண்டாக்குகிறது என்பதையும் நாவல் விவரிக்கிறது.

பாத்திரங்களின் வார்த்தைகளிலேயே கதை நகர்கிறது. மொழி, பண்பாடு, பழக்க வழக்கம், ஏழ்மை, குழந்தையின்மை, சமூக கோட்பாடுகள், கட்டுகள், சம்பிரதாயங்கள் எனப் பல பரிமாணங்களும் முப்பரிமாண பிம்பங்களாக பக்கங்களில் எழுந்து நிற்கின்றன. பரிவு, சிநேகம், கோபம், அதிர்ச்சி, அசூயை, நாணம் ஆங்காங்கே பீறீட்டு வாசிப்பவன் மனதை நனைக்கிறது.

எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கண்ணாடியை இரவல் வாங்கி மாட்டிக் கொண்டு படித்தபோதும் எவரையும் எங்கேயும் காயப்படுத்தும் இடங்களைக் காண முடியவில்லை. உயிரோட்டமான ஒரு கதாபாத்திரம் எதார்த்தமாக உதிர்க்கும் கருத்துக்கள் விமர்சனம் என்ற கோணத்துக்குள் வரவே வராது. திருச்செங்கோடு மண்ணில் பிறந்து வளர்ந்த பெருமாள் முருகனால், தாய் மண்ணைப் பற்றியும் அதன் மரபுகள், மாந்தர்கள் குறித்தும் அவதூறாக எழுத இயலும் என்ற எண்ணமே தவறானது.

இன்னொரு விஷயம், நமது ஜாதிகள், சமூகங்கள் ஒவ்வொன்றிலும் பலவகையான பழக்கங்கள் சடங்குகள் இருந்திருக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

பகுத்தறிவும் நாகரிக மாற்றமும் பரவலான பிறகு பழைய பழக்க வழக்கங்கள் பல தவறானவையாக தோன்றலாயின. மூடப்பழக்க வழக்கம் என முத்திரை குத்தி அவற்றை ஒதுக்கி வைக்கத் தலைப்பட்டோம். இன்று அவற்றை கைவிட்டு விட்டோம் என்பதால் அன்று அவை இல்லை என்றாகிவிடாது. என்றோ இருந்த பழக்கத்தை நினைவுபடுத்துவது குறிப்பிட்ட பிரிவினரை கேவலப்படுத்தும் முயற்சி என சம்பந்தப்பட்டவர்கள் நினைக்க முகாந்திரம் கிடையாது.

ஒரு காலத்தில் பிச்சை எடுத்து பிழைத்தவன் உழைத்து முன்னுக்கு வந்த பிறகு அதை மறைத்து, ‘ஊரிலேயே செல்வந்த குடும்பம் எங்கள் தாத்தாவுடையதுதான்' என்று பீலா விடுவதற்கு சமமானது இது. பிச்சை எடுத்தவன் உழைத்து முன்னுக்கு வந்தது பிறர் அறிய வேண்டிய சாதனை. அப்படித்தான் இன்னின்ன பழக்கங்களில் இருந்து மீண்டு வந்திருக்கிறது என் சீர்திருத்த சமூகம் என்று பெருமைப்பட வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள். அதில் அறவே இல்லை சிறுமை. உலகமெல்லாம் உண்மையான வரலாறு அறிய மண்ணைத் தோண்டும் வேளையில் நாம் உண்மைப் பதிவுகளை மண்ணுக்குள் புதைக்க முயல்வது பகுத்தறிவுக்கு உகந்தது அல்ல.

தினத்தந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அது அரசு சார்பான நாளிதழ். எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் அதோடு அனுசரித்துப் போகும். ஆட்சியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்வதில்லை. தினகரன் திமுகவுக்கு எதிரான செய்திகளைத் தொட முடியாது. தினமலர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் இந்துத்வா கொள்கைகளுக்கும்
எதிரான செய்திகளுக்கு இடமளிப்பதில்லை. தினமணி வெகுஜன நாளிதழ் என்ற தளத்திலிருந்து தள்ளி நிற்கிறது. தி இந்து தவழ முயலும் குழந்தை.

இந்தச் சூழலில் கட்சி மதம் ஜாதி இனம் என்ற பேதங்கள் பாராமல் அனைத்து தரப்பு செய்திகளையும் வெளியிடும் ஒரே தமிழ் நாளிதழ் தந்தி. இதனால் 80 சதவீதம் வரை நாட்டு நடப்பு அதன் வாசகர்களுக்குப் படிக்கக் கிடைக்கிறது. அதன் விற்பனையும் வாசகர் எண்ணிக்கையும் பெரும் உயரத்தில் இருக்கிறது. பாமரர்களுக்கான பத்திரிகை என்ற முத்திரையில் இருந்து விடுபட்டு, சீரியஸ் வாசகர்களுக்கானதும் கூட என முன்னிலைப்படுத்த அது தொடர்ந்து முயன்று வருவதைப் பார்க்க முடிகிறது.

அப்படிப்பட்ட நாளிதழ் தெரிந்தே ஒரு தவறைச் செய்து பெயரை கெடுத்துக் கொள்ள முன்வருமா? ராஜபக்ச நல்லவர், எந்தக் குற்றமும் செய்யாதவர் என்றோ தந்தி தலையங்கம் எழுதியதில்லை. சொல்லப்போனால் இலங்கை அரசு இலங்கை கடற்படை என்பதைக் கூட சிங்கள அரசு, சிங்கள கடற்படை என்று எழுதும் அளவுக்கு தமிழுணர்வு மேலோங்கியவர்கள் தந்தியில்தான் இருக்கின்றனர்.

ராஜபக்சவை தனது சேனலுக்காக பேட்டி காணும் வாய்ப்பு கிடைக்கிறது. அதை நழுவ விடக் கூடாது என்ற அதன் ஆர்வம் இயல்பானது. சேனலின் டிஆர்பிக்காகவும் பத்திரிகையின் விற்பனைக்காகவும் அவ்வாறு முடிவு எடுத்திருந்தாலும் அது குற்றமல்ல. அதற்காக விளம்பரம் பிரசுரித்ததும் உள்பக்கம் பேட்டியின் முன்னோட்டம் வெளியிட்டதும்கூட சட்டப்படி குற்றமல்ல.

பேட்டியில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னரே அதை ஒளிபரப்பக் கூடாது என்று வைகோ விடுத்த அறைகூவல்தான் முறையற்றது.

காத்திருந்து பேட்டியைப் பார்த்தபின் கருத்து தெரிவித்து இருக்கலாம். கண்டனம் தெரிவித்து இருக்கலாம். ராஜபக்சயின் கருத்துகளை வார்த்தைக்கு வார்த்தை ஆதாரங்களுடன் மறுத்திருக்கலாம். அதை ஒளிபரப்ப தந்தி டீவியிடம் தார்மிக உரிமை கோரியிருக்கலாம். அவர்கள் ஏற்காத பட்சத்தில் தனது பத்திரிகையில் பிரசுரித்தும், போட்டி சேனல்களில் ஒளிபரப்பியும் ராஜபக்ச மட்டுமின்றி தந்தியின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தி இருக்கலாம். இதையெல்லாம் விடுத்து, யாருக்கும் தொந்தரவு இல்லாத அறவழிகளையும் தவிர்த்து, முற்றுகைப் போர் என்ற பெயரில் ஒரு வன்முறை சம்பவம் நிகழ வைகோ காரணமாகி விட்டது உண்மையில்
துரதிர்ஷ்டவசமானது.

வழக்கமான போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் மதிமுக தொண்டர்கள் வரிசையில் அணிவகுத்து வர வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து மக்களின் மனம் கவர்ந்த வைகோ அந்தப் பாதையில் இருந்து நெடுந்தூரம் சென்றுவிட்டது வருத்தத்துக்கு உரியது.

ராஜபக்ச பேட்டியை ஒளிபரப்பியது தமிழர்கள் விரும்பாத ஒரு வினை. ஆகவே அதற்கு ஒரு எதிர்வினை இருந்தே தீரும் என்று வாதிட்டு வைகோவின் செயலை சிலர் நியாயப்படுத்துகின்றனர்.

வினைக்கு சமமான எதிர்வினை என்பது விஞ்ஞான செயல்முறை. சமூகவியலில் அதை பொருத்த முயல்வது ஆபத்தானது. பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்று கொக்கரிக்கும் தாலிபான்கள்தான் அவ்வாறு வினைக்கு எதிர்வினை பாணியில் இயங்குகின்றனர்.

அவ்வளவு தூரம் போவானேன். இதே ராஜபக்ச சொன்னதும் அந்த நியாயம்தானே?

'வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்து வழியில் தென்பட்ட அப்பாவிகள், நல்லவர்களைக்கூட விட்டு வைக்காமல் கொன்று குவித்தும், இளம் பெண்களையும் குழந்தைகளையும் துப்பாக்கி ஏந்திய பலிகடாக்களாக மாற்றியும் ரத்தத்தை ஆறாக ஓடவிட்ட பிறகு, ராணுவம் மட்டும் கரங்களில் பூச்செண்டு ஏந்தி அகிம்சைப் பாதையில் தம்மை எதிர்கொள்ளும் என்று விடுதலைப் புலிகள் எதிர்பார்க்கக் கூடாது' என்று சொல்லித்தானே போர் நிறுத்த கோரிக்கையை அவர் நிராகரித்தார்?

வாயை மூடு, அதை பார்க்காதே, இதை எழுதாதே என்று மற்றவர்களுக்கு ஆணையிட நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இது ஜனநாயக நாடு. நமது சமூகம் பல இனங்கள், மொழிகள், கலாசாரங்கள், பண்பாட்டு நெறிகள், மதிப்பீடுகள், சம்பிரதாயங்களைக் கொண்டது. இத்தகைய பன்முக கலாசாரம் பிழைக்க வேண்டுமானால் இந்த சமூகம் தழைக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் அடுத்தவரின் நம்பிக்கைகளை அதன் வெளிப்பாடுகளை மதிக்க வேண்டும்.

ஏனென்றால் இங்கே ஒருவரின் விருப்பம் இன்னொருவரின் விலக்கம். கல்லும் கடவுள் என்பது ஒருவன் நம்பிக்கை. கடவுளே இல்லை என்பது இன்னொருவன் கருத்து. நான் வணங்குபவன் மட்டுமே இறைவன் என்பது வேறோருவன் சித்தம். உனக்குள் இருக்கிறது தெய்வம் என்பது மற்றுமொருவன் சித்தாந்தம். சிலர் விலங்குகளை வணங்குகின்றனர். சிலர் புசிக்கின்றனர். அமைதியாக பிரார்த்திக்கிறார் ஒருவர். ஆடிப்பாடி ஆராதிக்கிறார் இன்னொருவர்.

இப்படி வெவ்வேறாகவும் ஒன்றுக்கொன்று முரணாகவும் பலநூறு விஷயங்கள் நமது சமூகத்தில் பின்னிப் பரவிக் கிடக்கின்றன. ஒருவரையொருவர் எள்ளி நகையாடவும் குற்றம் சுமத்தித் தண்டிக்கவும் ஏதுவான வாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. அவரவர் அளவில் அவரவர் நம்பிக்கைகளை இறுகப் பற்றிக் கொண்டு எதிர்நீச்சல் போடுவதற்கே ஆயுள் சரியாக இருக்கும்.

அதைவிடுத்து அடுத்தவர் சுதந்திரத்தில் கைவைத்தால் தேவையற்ற விளைவுகளைதான் சந்திக்க நேரிடும்.

இந்த சர்ச்சைகள் நமக்கு புதிதல்ல. திரைப்படங்கள், புத்தகங்கள் தொடர்பாக அடிக்கடி வழக்குகள் தொடரப்படுகின்றன. ‘உனக்குப் பிடித்தால் படத்தைப் பார். பிடிக்காவிட்டால் பார்க்காதே. புத்தகமும் அப்படித்தான். விரும்பினால் வாங்கிப் படி. இல்லையேல் காசை வீணாக்காமல் வேறு வேலையைப் பார்' என்று கோர்ட்டுகள் வாய் வலிக்க சொல்லிவிட்டன. அதன் பிறகும் ஒரு கூட்டம் எதிர்ப்புக் கொடியேந்தி 24 மணி நேரமும் காத்திருப்பதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

இவர்கள் உபயத்தால் பீக்கே படத்தின் வசூல் இரண்டே வாரத்தில் 500 கோடியைத் தாண்டி விட்டது. பெருமாள் முருகனின் புத்தகங்களைத் தேடி வாசகர்கள் கடைவீதியில் அலைகின்றனர். தந்தி டீவி ரேட்டிங் மட்டும் எகிறவில்லை. பேட்டி கே & ப அத்தனை சொதப்பல்!

English summary
This week article in Thaazha Parakkum Kaakkaigal discusses about our society and leaders intolerance in many sensational issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X