For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துளசி மாடத்துக் காதல்.. விறுவிறு சிறுகதை (பகுதி 2)

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

முற்றத்தில் அரிசி புடைத்துக்கொண்டே அங்கிருக்கும் சிறு கோழிகளோடு விளையாடிக்கொண்டு இருப்பாள். சில அரிசிகளை வேண்டுமென்றே அவள் சிந்துவதும், அக்கோழிகள் தங்கள் சிவந்த அலகுகளாய் கொத்துவதும், இவளின் ரசனை கலந்த பார்வைக்கென்றே நானும் கோழியாய் பிறந்திருக்கலாமே என்று ஏங்கத்தோன்றும் எனக்கு. மாதத்தின் மூன்று நாட்களில் அவள் கொல்லைப்புறம்தான் ! உணவும் நீரும் அவளிருக்கும் இடமே வந்துவிடும், நீண்ட கூந்தலை மெல்லிய விரலைக் கொண்டு கோதிக்கொண்டு அமர்ந்திருப்பாள். என் அருகில் மட்டும் அந்த நாட்களில் வரமாட்டாள். எனக்கும் அவள் ஸ்பரிசம் படாமல், அந்த மூச்சுக்காற்றை இழுக்காமல் அவள் வாசத்தை உணராமல் தவிப்பாகத்தான் இருக்கும். இம்மாதிரி வேளைகளில் உடல் வலியைத் தவிர்க்கவே ஒதுக்கி உட்காரவைத்தலும், மனவலியைத் தவிர்க்கவே தனிமையும் என்று எனக்கும் புரிந்தது. ஆனால் அடுத்த நான்காவது நாளே பழையபடி பம்பரமாய் சுழலுவாள்.

மாசம் பிறக்குதோ இல்லையோ நீ கொல்லைப்புறம் போவது மட்டும் நிக்கவே மாட்டேங்கிறது, அடியேன்னு சொல்ல புருஷன் வந்தா மட்டும் போதுமா ? ஆத்தான்னு சொல்ல புள்ளை வேண்டாமா என்று வார்த்தைகளில் வசவுதுளிகள் மாடத்தின் விளக்கொளியில் அவள் கருவிழிகளில் பளபளக்கும். அதுக்குப்பிறகு அவள் சற்று வதங்கித் தெரிந்தாலும் அதிலும் ஒரு மனோகர ஒளி முகத்தில், மெல்ல மெல்ல அவளின் வயிறு பெருத்துக்கொண்டு வருவதை நான் பார்த்துக்கொண்டே வருகிறேன். சிதறிய பூக்கள் மீண்டும் பூச்சரத்தை சேருவது இல்லை, ஆனால் பெண்ணுக்குள் சிதறிய மகரந்தம் முத்தைத்தருகிறதே ! முற்றத்தில் அமர்ந்து பூக்கள் தொடுத்துக் கொண்டிருந்தாலும் அந்த துளிச்சரத்திற்கு மேல் அவளின் கூந்தல் சொந்தம் கொண்டாடியது இல்லை.

New year special short story - part 2

இப்போதெல்லாம் பல நேரங்கள் என்னுடன் தான் செலவழிக்கிறாள். பூத்துக் குலுங்கும் தாய்மையில் அவளைக் காணவே நிறைவாக இருக்கிறது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஈரக் கைகளை முந்தானையில் துடைத்தபடியே என்னைக் குளிர்வான நீரால் நனைத்தவள் இவங்களுக்கு பிள்ளைதான் வேணுமாம் பெண் வேண்டாமாம், இதெல்லாம் நான் மட்டும் தீர்மானிக்கிறதா துளசி, உங்க அம்மா மாதிரி பொட்டையா பெத்துப்போடாதே, எங்க வம்சத்தில் எல்லாருக்கும் தலைச்சன் பிள்ளை பையன்தான். ஏண்டா மாசாமாசம் ஸ்கேனு எக்ஸ்ரேன்னு அழறீயே முதல்லயே என்ன குழந்தைன்னு கேக்கறதுக்கு என்ன ? நானும் எத்தனையோ போக்குகாட்டி பேசிப்பாக்கிறேன். அந்த டாக்டருகிட்டே இருந்து ஒரு வார்த்தை கறக்க முடியலையே, ச்சே ! உள்ளே அங்கலாய்ப்பின் குரல்,

இவங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கணும் துளசி, என்னைப்போல அதுவும் அமைதியாத்தான் இருக்கணும், கல்யாணம் பண்ணிக்குடுத்திட்டு, அய்யோ அங்கே என் பெண் என்ன அவஸ்தைப்படறாளோன்னு கவலைப்படணும். வாரம் ஒருமுறை பெண்ணைப் பார்க்கிறேன்னு வீட்டுக்குள்ளே கூப்பிடாம என்னையும் பேசவிடாம நான் வாசல்ல போய் மூணாம் மனுஷங்க மாதிரி பேசிட்டு வர்றேனே எங்க அப்பா அம்மா கிட்டே அதே வேதனையை இவங்க அனுபவிக்கணும் ?! அதுக்கு எனக்கு பெண் பிள்ளைதான் பொறக்கணும்.

New year special short story - part 2

அவள் என் கண்களுக்கு வியப்பாய் தெரிந்தாள். மனம் தாய்மையில் பூரிக்க வேண்டிய வேளையில் ஏன் இத்தனை வருத்தங்கள் இவளுள். அச்சச்சோ நான் பார்த்தியா ஏதோ நினைப்பில் ஏதோதோ பேசிவிட்டேன் என் மகளுக்கும் தானே இதனால் கஷ்டம் வரும். வேண்டாம் வேண்டாம் அவள் செல்லும் இடமாவது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இடமாக இருக்கட்டும். கைநிறைய வளையல்களோடு சந்தனமும், ஜவ்வாதும் மணக்க நிறைந்த வயிறோடு தலைகொள்ளா பூ பாரத்தோடு என்னருகில் வந்தமர்ந்தாள். நேரம் நெருங்க நெருங்க எனக்கு பயமா இருக்கு துளசி, அப்படியே எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன செய்றது ? முன்னாடி நான் மட்டும்தான் இப்போ என் குழந்தைவேற இன்னொரு அடிமையை இங்கே விட்டுட்டுப்போக எனக்கு மனசு வரலை,,,, விசும்பினாள் அதன்பிறகு அவள் அடிக்கடி அங்கே வந்து அமர்ந்திருப்பதில்லை ஒரு பத்து பதினைந்து நாட்கள் தான் இருக்கும் திடுமென்று அவளின் அழுகுரல் கேட்டது. வீடெங்கும் காலடிச் சப்தங்கள் வீட்டுலே யாரும் இல்லையே இப்படி திடுமுனா ஒருத்திக்கு வலி வரும் என்று ரமாவின் மாமியாரின் குரல், வந்த புதிதில் அவள் ஒருமுறை சிணுங்கியது நினைவிற்கு வந்தது.

ரவி லேட்டாகப்போவதால் அவனுக்கு அலுவலகத்தில் மெமோ கிடைத்தது. அதற்கும்நான்தான் காரணமாம். நல்லவேளை குழாயில் தண்ணீர் வராததற்கும், மாமாவின் மருந்துபாட்டில் காலியானத்திற்கும், அரிவாள்மனை காய்களை சரியாக வெட்டாததற்கும் என்னை காரணமாக்கவில்லை என் திருமண விஷயத்தில் நளன் தேடிய குருட்டுத் தமயந்தியாகிவிட்டேன் என்று மருவினாள். நான் தலையைச் சிலுப்பி என் பூக்களை அவள் மேல் தூவிவிட்டேன். பிறந்தப்போ தாயோட கவனிப்பில், வளரும்போது தந்தையின் கவனிப்பில் பருவவயதில் எந்த ஆடவனுடன் பேசக்கூடாதுன்னு சொன்ன அப்பாவே, கல்யாணத்திற்குப் பிறகு கணவர்கிட்டே நெருக்கமா பேசும்மான்னு சொல்றார். மாராப்புத் துணியை ஒழுங்காபோடுன்னு சொல்றே அம்மா, புருஷன் மனுசு கோணாம அப்படியிப்படி இருன்னு கல்யாணத்திற்கு பிறகு சொல்றாங்க. ஒரு ஆணும் பெண்ணும் தனியா அறைக்குள்ளே இருந்தா தவறுன்னு சொல்ற சமூகம், கல்யாணம் பண்ணிட்டதால அவர் கூட இருந்ததை உறவு கொண்டதை ஏற்றுக்கொள்ளுது. அந்த தாலி ஒன்னை மட்டும் ஆதாரமா வைச்சு யார் விருப்பத்திற்கும் புகுந்தவீட்டு கதவு ஜன்னலுக்கு ஏன் அது நுழையும் காற்றிற்குக்கூட அடிபணிகிறோம்.

எனக்கு ஆண்பிள்ளை பிறக்க வேண்டும் துளசி பெண்ணின் மன உணர்வுகளை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்று அதற்கு நான் கற்றுத்தரவேண்டும். பிரசவம் மறுஜென்மம்ன்னு சொல்லுவாங்க, அப்படி எனக்கு ஏதாவது ஆயிட்டா நான் என் குழந்தையையும் கூடவே கூட்டிட்டுப்போயிடுவேன்னு துளசி, அதை இவர்களிடம் விட்டுட்டுப்போக மாட்டேன். அடுத்த வந்த நாட்களில் அவளின் வாசமும், கொலுசு ஒளியும் என்னில் பிரமையயாய் ஒலித்துக் கொண்டே இருந்தது. நான்காவதுநாள் கூடத்தில் கொண்டுவந்து போடப்பட்டாள் அவள், பக்கத்தில் யாருடைய கைகளிலே அந்த சிசு! தாயை இழந்த வேதனையில் கதறி அழுதது. இப்போதும் அவள் சன்னமாய் பேசியது எனக்குள் கேட்டது.

நான் அவளையே சிலரின் நிமிட மறைப்பிற்குப் பிறகு பார்த்துக்கொண்டு இருந்தேன். இறுதி இறப்பில் கூட உன்னை விட்டு என் துணையை விட்டு நான் அழுது சிரித்து இந்த ஓராண்டு காலத்தில் எல்லாமுமாய் இருந்த உன்னிடம் கூட என் பிரிவை சொல்லிக்கொள்ள முடியவில்லை. துளசி, இறப்பு மட்டுமல்ல என் பிள்ளையை என்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைக் கூட என்னால் அடைய முடியவில்லை, என்னைப்போன்ற பெண்கள் கற்பனைக்கு வாக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வு மொத்தமும் கற்பனையிலேயே கரைகிறது. வருகிறேன். என்னைப்போல் என்பிள்ளைக்கும் ஆதரவாய் உன் தோள்கொடு, முடிந்தால் நான் அவள் மேல் கொண்ட அன்பையும், நம்பிக்கையும் சொல்லு. நான் மெல்லமாய் என் இலைகளை அசைத்து உறுதி கொடுத்தேன். அவளை கட்டுப்படுத்தியதைப் போல் என்னையும் சில நூலாம்படைகள் கட்டுப்படுத்தியிருந்தது.

அதே மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் அழகிய குங்குமப்பொட்டு, வேதனையில் மலரும் அவளின் புன்னகையோடு விடைபெற்றாள் அவள்.....! ஏதோ ஒரு குடும்பத்திற்கு அடிமையாகிப் போகப் போகும் குழந்தை இப்போதே அழுகைக்குத் தயாரானது...............!

(முற்றும்)

(துளசி மாடத்துக் காதல்...விறுவிறு சிறுகதை... (1) )

English summary
The second party of Writer Latha Saravanan's short story "Thulasi Maadathu Kaadhal", on the eve of New year 2017. The story revolving around a woman and her inner feeligns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X