For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புன்னகை போதும் பெண்ணே!

By Hema Vandana
Google Oneindia Tamil News

-வந்தனா ரவீந்திரதாஸ்

பெண் - உலகின் சரிபாதி.

பெண்களுக்கென்று சமுதாயத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. உயர்ந்த மதிப்பீடுகள் இருக்கின்றன. பெண் பொறுமையானவள், நிதானமானவள், அமைதியும், அடக்கமும் கொண்டவள், அதிர்ந்து பேசமாட்டாள்., எல்லா துன்ப துயரங்களையும் சோதனை வேதனைகளையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் நிறைந்தவள், தன்னடக்கம் உள்ளவள் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய சாதாரண இலக்கியங்கள் வரை எழுதி வைத்து வரும் அளவுக்கு பெண்ணின் பெருமை காலத்துக்கும் உயர்ந்து பிரம்மாண்டமாய் நிற்கிறது....

nternational womens day

பெறுதற்கு அரிய பிறவி மானுடப் பிறவி - அதிலும்

பெருமை தரும் பிறவி பெண் பிறவி

என்றார் ஔவையார்.

அடிமைத்தனத்தினால் அன்று காயம்பட்ட பெண்குலம் இன்று மனித சமுதாயத்திற்கே மருந்தாகிக் கொண்டிருக்கிறது.

கல் உடைப்பதிலிருந்து... கற்றுக்கொடுப்பது வரை...

அலுவலகம் முதல் அரசியல் வரை....

விவசாயம்.. முதல் விஞ்ஞானம் வரை

என அனைத்து துறைகளிலும் கால் பதித்து வீறு கொண்டு வளர்ந்து வருகிறாள்....

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காண்

என்று கூறியது இன்று நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.

வெறும் அழகு நிலையம், துணிக்கடைகள், கவரிங் கடைகள், என்பதில் மட்டும் பெண்களின் பங்கு இல்லாமல், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் விமானத்துறை, மருத்துவம், பொறியியல் கணிப்பொறி, விளையாட்டு, என நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கக்கூடிய முன்னணி துறைகளில் சாதனைக் கல்வெட்டுகளை பொறித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அன்று ஆண்களுக்கு அடங்கிக் கிடந்தவள்.. மெல்ல மெல்ல... சராசரியாகி... இன்று சராசரிக்கும் சற்று மேம்பட்டே காணப்படுகிறாள்... நிலவு, தென்றல், மலர் போன்ற மென்மையானவற்றிற்கு மட்டுமே ஒப்பிட்டு வந்தவள் இன்று.. வலிமை பொருந்தியவளாக மட்டுமல்ல.. ஏன்... வரலாற்றையே உருவாக்குபவளாகவும் உருமாறி விட்டாள்.. முடங்கி கிடந்தவள்... இன்று கடமை லட்சியம், பொறுமை, நட்பு என பல பரிமாணங்களில் தன் வாழ்க்கையை கூறுபோட்டு வாழ பழகிக் கொண்டுவிட்டாள்... சந்தர்ப்பம் வரும் என்று காத்திருந்தவள்... சந்தர்ப்பத்தையே உருவாக்குபவளாக மாறிவிட்டாள்...

என்றாலும், பெண்களிடம் குறிப்பாக இளம் பெண்களிடம் ஒருசில குறைகள் காணப்படுவதும் மறுக்க முடியாத உண்மையாகும்... பெண் சுதந்திரம் என்ற பெயரில் தன் விருப்பத்திற்கேற்ற ஆடை அணிந்து கொள்வதும், விருப்பமானவர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதும், விருப்பமானதை விளைவுகளை எதிர்பாராமல் அதை நிறைவேற்ற நினைப்பதுமான செயல்கள் பெண்களை மலிவான விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

தனது அறிவையோ, உழைப்பையோ நம்பாமல், கண்ணியத்தையும், கற்பையும் பற்றி கவலைப்படாமல்... தனது இளமையையும் உடலையும் மட்டுமே பயன்படுத்தி பலவீனமான ஆண்களுக்கு இரையாக்கி அதன் மூலம் சொகுசு வாழ்க்கையைத் தேடிக்கொள்ளும் மனோபாவம் தற்கால பெண்கள் சிலருக்கு இருக்கிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்கே இது கரும்புள்ளியாக உள்ளது.

- இரும்பிலிருந்து தானே துரு தோன்றுகிறது.

பெண்கள் இப்படி ஒருபுறம் தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்றால் மற்றொருபுறம் பொறாமை... எதையும் நம்பிவிடுதல், அளவுக்கு மீறிய சகிப்புத்தன்மை, எளிதில் மன்னிக்கும் இளகிய மனம் போன்ற இயற்கை பலவீனங்களால் ஆண்களால் எளிதாக ஏமாற்றப்பட்டு துன்ப சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

மேற்கூறியபடி இன்றைய இளம் பெண்களிடம் இருக்கும் ஒரு சில குறைகள், காலப்போக்கில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உள்ளே சென்று அரித்துவிடாத வகையில் முன்கூட்டியே அணை போட வேண்டியதும், அவர்களை, சீர்படுத்தி சரியான பாதையில் ஊக்குவிப்பதும் ஆட்சியாளர்கள், ஊடகங்கள், கலை இலக்கிய படைப்பாளிகள், மற்றும் மாதர்சங்க அமைப்புகளின் தலையாய கடமையாகும்.

அன்பு - பந்தம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள உலக நாடுகள் இன்று நம்மைத்தான் திரும்பி பார்க்கின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம் பெண்களே.

அன்பை உலகுக்கு போதித்த அன்னை தெரசா, பெண்ணின் பெருமையை பாரதிக்கு உணர்த்திய நிவேதிதா போன்றோர் நடமாடிய புண்ணிய பூமி இது. பெண்களுக்கு வாழ்க்கைப் பாதையில் தடம் பதிக்க பூக்கள் வேண்டாம்... புன்னகையே போதும்...

காலத்தின் தேவைகளை அறிந்திருந்தும், சமூக மாறுதல்களை புரிந்தும், நிகழ்காலத்திற்கேற்ற விழிப்புடன் செயல்பட்டாலே போதும்... பெண்களின் மதிப்பு வானத்துக்கு நிலையாக விரிந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பெண்களின் லட்சியப் பாதையில் அவமானங்கள், வேதனைகள், வலிகள், ஏமாற்றங்கள் என பல முட்டுக்கட்டைகள் வந்தாலும்... உலக உருண்டையில் கலந்துவிட்ட தாய்மையானது... அனைத்தையும் புரட்டிப்போட்டு விட்டு முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டேயிருக்கும் என்பது மட்டும் உறுதி.

English summary
International women's day is being celebrated all over world today. Here is a special article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X