For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2016 எனும் சுயநல கால்பந்தை உதைப்போம்.. 2017 என்ற புல்லாங்குழலை வரவேற்போம்!

Google Oneindia Tamil News

-லதா சரவணன்

ஒரு முகப்புத்தகத்தின் லைக்கிற்கும் கமெண்டிற்கும் அடிமையாகிப் போன விழாக்களில் ஒன்றாகத்தான் இந்தப் புத்தாண்டை என்னால் பார்க்க முடிகிறது. 2016ன் தவறுகளை அப்படியே விட்டுவிட்டு 2017-ன் தொடக்கத்தில் நல்ல சிந்தனைகளை மட்டுமே விதைக்க வேண்டும்.

ஒரு புன்னகையை உதிர்ப்பதன் மூலம் எதையும் சாதிக்கலாம். ஆனால் நமது புன்னகைகள் இதழ்களில் இருந்து விலகி ஸ்மைலி பொம்மைகளாக உருவெடுத்து இருக்கிறது. தொடக்கம் நாமாக இருப்போம் என்ற "ஆகம விதி" மீறி யாரோ ஒரு தொடக்க ஒற்றையிலக்கத்தின் மதிப்பில்லாத பூஜ்ஜியங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அடுப்படிக்குள் கண்ணாமூச்சிக் காட்டும் கரப்பானின் நிலைதான் நம்மை ஆட்டுவிக்கிறது. நம் பொறுப்புகளையும் கடமைகளையும் ஒரு பதிவிற்குள்ளும், புகைப்படத்திற்குள்ளும் ஒளித்துக் கொள்கிறோம்.

Say good bye to 2016, welcome 2017

புல்லாங்குழலும் கால்பந்தும் ஒரே காற்றைத்தான் உள்ளடக்கி வைத்திருக்கிறது. ஆனால் புல்லாங்குழலின் கீதம் இன்னிசையாக வெளிவருகிறது, நமது கரங்களில் அது காதலியாக குழந்தையாக தவழ்ந்து இன்னிசையை உற்பத்தி செய்யும் இதழ்களின் முத்தத்தை பெற்றுக்கொள்கிறது. அதே காற்றை சுமந்து கொண்ட கால்பந்து மட்டும் பலரால் உதைத்து தள்ளப்படும் ஒரு வஸ்துவைப்போல் சுயநலமாய் வலிகளைத் தாங்குகிறது.

இப்படித்தான் 2016 என்னும் சுயநல கால்பந்தை உதைத்துவிட்டு 2017 என்ற இன்னிசை ததும்பும் புல்லாங்குழலை நாம் வரவேற்கத் தயாராக வேண்டும்.

பசுவானது ஏதாவது விஷத்தன்மையை உடைய உணவை அருந்தினாலும் அது தரும் பாலில் அந்த விஷம் கலப்பதில்லை என்று 90 நாட்கள் பசுவிற்கு விஷமுள்ள உணவை தந்துவிட்டு அது தரும் பாலை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். பசு தான் உட்கொண்ட விஷத்தை தன் தொண்டைக்குள்ளேயே கிரகித்துக் கொண்டு நமக்கு சுத்தமான பாலைத் தருகிறது. இதேபோல் நம் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்ட விஷம் தான் கோபம், பொறாமை, துரோகம் இவையெல்லாம் அன்பு பாலாய் பெருகும் இதயத்திற்கு நிச்சயம போய்விடக்கூடாது.

கொண்டாட்டங்கள் என்றால் என்ன? ஏதோ பத்து மதிப்பெண்களுக்குள் அடைபட்ட வினாத்தாளின் கேள்வி அல்ல. இது நம் ஆழ்மனதில் அதிகமாக நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று. இனிப்புகளையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்கிறோம். புத்தாடைகளை உடுத்திக்கொண்டு ஒரு கோவியின் அர்ச்சனையும், அல்லது ஏதாவது ஷாப்பிங் மாலின் கடைகளுக்குள் அடங்கிப்போய்விடும். 2016 ல் நான் உங்களை கஷ்டப்படுத்தியிருக்கலாம், மனதை நோகடிக்கப்பதைப் போன்ற வார்த்தைகளைப் பிரயோகித்து இருக்கலாம் அதற்கெல்லாம் என்னை மன்னித்துவிடுங்கள். அடுத்த வருடமும் நான் திருந்தப்போவதில்லை இதேபோல் உங்களைக் கஷ்டப்படுத்திக்கொண்டுதான் இருக்கப்போகிறேன் என்று புத்தாண்டின் வாழ்த்தோடு வந்த ஒரு பதிவு, இது விளையாட்டிற்கு என்றாலும் நிறைவேற்றப்படுமா இல்லையா என்று பல வீணாக்கப்பட்ட சத்தியங்களும், சபதங்களும் நிறைந்திருப்பதுதான் வரப்போகும் புத்தாண்டும்.

ஒரு மேடை அமைக்க பல லட்சங்கள் ஒரு நடன மங்கை நட்சத்திர ஹோட்டலில் நடனமாட 4 கோடி கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல். இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் கேளிக்கைகளோடு புதுவருடத்தை நாம் வரவேற்க இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக தொலைக்காட்சியில் திரையிடப்போகும் படத்தை பார்க்கவும் காத்துக்கொண்டு இருக்கிறோம்,

நாம் சபதமேற்கொள்ள வேண்டும். உறவுகளை சீரழிக்கும் பெற்ற பிள்ளையையும் சந்தேகத்தோடு பார்க்க வைக்கும் மனதில் விஷத்தை கலக்கும் சீரியல்களை ஒழிக்க வேண்டும் என்று!

சகோதரியாகப் பாவிக்க வேண்டிய பெண்களை போதைப் பொருளாகவும், காமச் சித்திரங்களாகவும் சித்திரிக்கும் விளம்பரங்களை ஒழிக்க சபதமேற்க வேண்டும்.

நம் விதைகளை காவு வாங்கும் சீமை கருவேல மரங்களை கறுவறுப்போம் என்று, எங்கோ நடைபெறும் தவறுகளை யாரோ தட்டிக்கேட்பார்கள் நாம் நொறுக்குத் தீனிகளை கொறித்துக் கொண்டு ஸ்டேட்டஸ் போட்டு லைக்குகளை எண்ணுவதைத் தவிர்ப்போம்.

சென்ற வருடம் விட்டுப்போன புயலின் சேதங்களுக்கு விடையாய் துவங்கிய இந்த வருடத்தின் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப் பார்ப்போம்.

2015ல் வெள்ளத்தின் கோரப்பிடிக்குள் சிக்கிய சென்னையைப் பாதுகாக்க முடியாத அரசும், குட்டிச் சுவற்றில் திறமைகளை கிறுக்கிக்கொண்டிருந்த இளைஞர்படை சீறிப்பாய்ந்ததையும் நினைவுகோருவோம்.

பயணத்திற்கு காத்திருந்த பெண்ணைக் கழுத்தறுத்து எமனின் வாகனத்தில் ஏற்றிய நிகழ்வைக் கண்டோம், பள்ளிகளிலும், தனியார் வகுப்புகளிலும் ஆசிரியரே நடத்திய காம களியாட்டங்களை 2016ல் கண்டிருக்கிறோம். தெளிவில்லா அரசு, திகைத்த மக்கள் அன்றாடம் சாப்பாட்டிற்கும் கையேந்தும் நிலை அரையிருட்டில் ரூபாய் நோட்டுகள் செல்லாத சட்டம், ஏடிஎம் வாயிலுக்கும், வங்கிகளின் வரிசைக்கும் உயிரை இழந்த அவலம்.

கருப்பு பணத்தை வண்ணச் சாயமிட்டு அதிகாரவர்க்கத்திடம் முடக்கிய காட்சி, வாசனை மலர்களால் ஆனந்த யாழை மீட்டிய கவிஞனின் மரணம், வர்தாவும் நாடாவும் வரிந்து கட்டிக்கொண்டு தமிழகத்தினை இருளில் மறைத்த நிலவரம். வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு தண்ணீருக்கும் மின்சாரத்திற்கும் அண்டை மாநிலத்திடம் கையேந்தி அடிபட்ட கோரம். தமிழகத்தின் தலைவி 75 நாட்கள் மருத்துவமனையில் முடங்கியதும், யாரோ தமிழகத்தினை காப்பாற்றுவார்கள் என்று முள்முடியினை மக்களின் மேல் இறக்கும் பேடிகளின் ஓலம் என இன்னும் எத்தனையோ சுயநலங்களை பார்த்திருக்கிறோம்.

2016 கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கு கையில் எழுத்தாணியோடு நாம் காத்திருக்கிறோம் 2017ம் ஆண்டை நோக்கி !

இரவின் நீளம் விடியலில் துவக்கம். நமக்கு என்ன விருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளோடுதான் 2017 பல கடமைகளைத் தூக்கிச் செல்லும் கப்பலாய் நம் கண்முன் நங்கூரமிட்டுக் காத்திருக்கிறது. கட்டுமரத்தை தேடி கரை ஒதுங்குவோமா? சுழலைத் தாங்கும் வீரியம் கப்பலிற்கு இருக்குமா என்பதன் விடை எங்கே என்ற கேள்வியோடு

2017 ம் வருடத்தினை வரவேற்போம்... வெல்கம் 2017!

English summary
2016 is going to end in 3 days and the new year is nearing to embrace the people. Here is an article welcoming the new year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X